திங்கள், 29 செப்டம்பர், 2025

கொலு

 கொலு

___________________________
பொய்யை வரிசையாய் வைத்து
மெய்யைக் காட்டுகின்றோம்.
முதலெழுத்து வித்தியாசம்
மட்டும் தானா அது?
முன்னதற்கு நிரூபணங்கள்
தேவையில்லை.
பெரும்பாலும் அவை நம்
உள்ளக்கிடக்கைகள்..
உள்ளே இருந்து கொண்டு
ஊதி ஊதி விடுகின்ற‌
சோப்பு நுரைக்குமிழிகளே.
வெளியில் உடைந்து
காணாமல் போகும்போது தான்
நிரூபணம் ஆகிறது
பின்னைய சொல்லுக்கு.
முன் பின் மாற்றி மாற்றி
சொட்டாங்கல் விளையாடுவதே
வாழ்க்கை.
பாருங்கள்
உண்டு இல்லை என்று
உங்கள் மூக்கு நுனியிலேயே
விழுந்து விடுவது போல‌
அந்த சொற்கள் உங்களோடு
உரசி உரசி
பொறி தெறிப்பது இல்லையா?
இறைவன்
இருக்கிறான்
அல்லது
இல்லை
என்று
விளையாடிக்கொண்டிருப்பது
ஒரு "ப்ராபலிடி" கணிதம் தானே.
இதற்கு ஏன்
இந்த குத்து வெட்டு?
கொலைவெறி?
மனிதனுக்கு மனிதனே
இறைவன்
அல்லது
"சைத்தான்"
இந்த கேம்ஸ் தான்
நம்மை உடைத்து உடைத்து
நொறுக்கி விளையாடிக்கொண்டிருக்கிறது.
இதில் அந்த‌
வண்ண வண்ண புராணங்கள்
எல்லாம்
இன்னும் ஒரு சிந்தனைக்கு
பிண்டம் பிடிக்கத்தெரியாமல்
நம்மை
நம்
சிதிலங்களில் தான்
கொலு வைத்து
கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கின்றன.
______________________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக