கூத்தன்
______________________________________
ருத்ரா
அந்த கூத்தன் நடனம்
உலக அளவில்
இந்த பிரபஞ்சத்தின்
கார்ட்டூன் என்று
பார்வையிடப்படுகிறது.
நேற்று கண்டுபிடித்த
ஹிக்ஸ் போஸான் கூட
அவன் புலித்தோலில் ஒரு புள்ளிதான்
என்று
சோடா புட்டிக்கண்கள் வழியே
உற்றுப்பார்க்கும்
அந்த எம் ஐ டி ரிசர்ச் ஸ்காலர் இளைஞன்
பெருமையுடன் சொல்கிறான்
இந்த மைலாப்பூர் வாசனையை
கொஞ்சம் கூட கழற்றிக்கொள்ள
முடியாதவனாய்.
ஏன் ஹாலிவுட் படங்களும் கூட
ஃபேன்டாசியின் சப்ளாக்கட்டைகளை
தட்டுவதில்
நடராஜ பெருமான் விரிகூந்தலின்
வியப்பு சித்திரங்களை
வெர்ச்சுவல் ரியாலிட்டியில்
அள்ளித்தெளிக்கலாம்.
அது போகட்டும்.
உலகம் எங்கும் மணக்கும் கலாச்சாரம்
அல்லவா நம் கலாச்சாரம்.
அதில் எப்படி துர்நாற்றம் வந்தது?
நம் நாட்டின் ஏதோ ஒரு
மூலைக்கிராமத்தில்
குடிதண்ணீர் "டேங்கில்"
கலந்த அந்த
ஆதிக்க அலகால விஷத்தை
விழுங்கி தன் தொண்டையை
நீலகண்டமாக மாற்றி
எப்போது கோபம் கொப்பளிப்பார்
அந்த ருத்ர தாண்டவர்?
மும்மலத்தை அறுக்கும் தத்துவங்களை
எல்லாம் முழங்குவது இருக்கட்டும்.
மனித வரலாற்றின் வீழ்ச்சியாய்
அரங்கேறிய இந்த மோசமான
மலத்தை அப்புறப்படுத்தும்
பள்ளியெழுச்சிப்பாடல்கள்
எப்போது எழுச்சியுறும்?
அந்த சோடாபுட்டிக்கண்களுக்கெல்லாம்
நெற்றிக்கண் கிடையாதா?
சமூக அநீதிகள் மீது
கொஞ்சம் கூட "ருத்ரம்" காட்டாத
அந்த ஜிகினா "ஆருத்ரா"க்கள்
திரையை கிழித்துக்கொண்டல்லவா
சீற்றம் காண்பித்திருக்க வேண்டும்.
திரை விலகவில்லையே என்று
கும்பிடப்போனவர்கள் பக்திக்
குமுறலோடு காத்துக்கிடந்தார்கள்.
அந்த திரை
பலப் பல நூற்றாண்டுகளாய்
மூடியே தான் கிடக்கிறது.
____________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக