செவ்வாய், 17 ஜனவரி, 2023

சொல் துண்டுகள்.

 சொல் துண்டுகள்.

______________________________________

ருத்ரா


வருடங்களை வருடிக்கொண்டிருக்கிறேன்.

முசு முசு வென்று

அவை முயல் குட்டிகளைப்போல‌

மடியில் விழுந்து

தரைக்கு நழுவி

அந்த சிறிய மிளகுக்கண் பளபளப்புகளில்

ஏதோ ஒரு திரைப்படத்தை 

ஓட்டிக்கொண்டிருக்கின்றன.

இந்த முயல்கள்

நிழல்களை பிம்பம் காட்டுகின்றன.

நிகழ்வுகளின் ரத்த சதையை

பிய்த்துக்காட்டுகின்றன.

எத்தனை விழாக்கள்?

அதன் தோரணங்கள்.

மரண ஓலங்கள்.

ஜனனங்களின் குவா குவாக்கள்.

ஜனனம் மதுரம்.

மரணம் மதுரம்.

இனிப்பது

சடலமா? சரித்திரமா?

"காலடி" ஸ்லோகங்கள்

காலடிகளில்

புதைகின்றன.

அதென்ன தமிழில் கேட்டால்

முள்ளா குத்திவிடும்?

மெதுவாய் கொல்லும் நஞ்சு போல்

அந்த புரியாத மந்திரங்கள்

அவ்வப்போது வந்து வந்து

வாசலில் பாடை தயார் என்று

சொல்லிவிட்டுப்போகின்றன.

ஆயிரம் ஆயிரம் வருடங்களாய்

முள் படுக்கை தான்.

கூழாகிப்போன் ரோஜாக்களில்

வெற்றியின் ஏக்கங்கள்

மண்புழுக்களாய் 

நசுக்க‌ப்பட்டு வெறும் சுவடுகளாய்

மிஞ்சித் ததும்பிக்கொண்டிருக்கின்றன.

என்ன இது?

சம்பந்தமே இல்லாமல் 

மொட்டை மொட்டையாய் 

சொல் துண்டுகள்.

ஆம்.

மொட்டைக்கனவுகள் இவை.


_____________________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக