புதன், 4 ஜனவரி, 2023

அகழ்நானூறு 6

 அகழ்நானூறு 6

_________________________________________

சொற்கீரன்



முறைவழிப்படூஉம் மல்லல் பேர்யாற்று

ஊழிக்கோட்டு ஊன்று வழி வாழ்ந்து

வானம் ஓச்சி ஞான்ற பொருளின்

செறிபொருள் உரிப்பொருள் கருப்பொருள் உய்த்து

இலங்கிய நெறிகள் தெளிந்ததன் ஆங்கே

வடக்கின் குறித்து அமர்ந்ததால் 

அமரர் ஆகி ஆழப்புதைந்த உயிர்ப்பூ முக்குளி

புரிந்தவர் சான்றோர் நடுகல் பூத்தனர்.

அவர் பதுக்கையின் கோங்கமும் எஃகிலை

குரவமும் மரவமும் உயர் பொருள் காட்டி

உயர்த்தியது இஃதே.காதலும் செருவும் 

திணைப்பால் வகுத்தன.மறைத்த ஆற்றுப்

படையேதும் இல்லை.நான் மறை இல்லை.

அத்தம் நண்ணி வெறுத்த வாழ்வின் 

சுடுகாட்டுப் பேயின் பறந்தலை இல்லை.

காமம் செப்பாது காமம் ஓம்பினர்.

நெய்தல் நீலம் மெல்லிணர் இரீய

ஊது தும்பியின் தூம்பின் நெடுங்காழ்

பண்ணும் முரலும் காதலர் வாழ்வே.


_______________________________________________________


குறிப்புரை

_________________________________________________________


அகநானூறு 157 ஆம் பாடலில் வேம்பற்றூர் குமரனார் "பதுக்கை கோங்கு"என்று ஒரு சொற்றொடர் எழுதியுள்ளார். அது சான்றோர்கள் உயிர் நீத்தபின் மண்ணில் அவர்களின் உடல்கள் "பதுக்கப்பட்டு அதாவது புதைக்கப்பட்டு) அந்த சான்றுக்கல் படுக்கை அல்லது பதுக்கை எனப்பட்டது.சமணர் படுக்கைகள் இந்த கோணத்தில் ஆயப்படவேண்டும்.சங்க கால சான்றோர்கள் வாழ்க்கை ஒரு"ஆற்று ஒழுக்கில்" ஓடுகிறது என எண்ணியவர்கள்.கற்பனையான பாவ புண்ணிய‌ பொதி மூட்டைகளை முதுகில் சுமந்திருக்கவில்லை.காதலும் (அகம்) வீரமுமே (புறம்)  பண்டைத்தமிழர்களின் பாடுகளாய் இருந்திருக்கின்றன.கடவுளர் பற்றிய பாடல்கள் சில அங்கும் இங்கும் இருந்திருக்கலாம்.ஆனால் அதன் முரட்டு பக்தி மானிடக்களிப்பு மிக்க வாழ்க்கையை புறக்கணிக்கவில்லை. மேலும் மனித வெளிச்சமே அவர்கள் இலக்கியங்களில் தெரிகிறது.அவர்கள் வாழ்க்கையின் மெல்லியல்புகள் அந்த‌பாடல் வரிகளின் சொல்லாடல்களின் முருகு எனும் அழகியலிலே தெரிகின்றன.

கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலும் இதையே சொல்கிறது.அதனால் தான் அறம் பொருள் இன்பம் என்று முப்பால் மட்டும் பேசினார். வீடு என்பது அறியாமையிலிருந்து அறிவுடைமைக்குவிடுதலை பெறுவதே ஆகும்.அது மோட்சம் சன்யாசம் என்ற மனித வாழ்க்கையையே வெறுத்து ஒதுக்கும் "வெறுப்புக்கோட்பாடு" அல்ல.இதையே நான் இந்த அகழ்நானூறு 6 ல் உட்பொருளாய் ஆக்கி எழுதியுள்ளேன்.


சொற்கீரன்.


______________________________________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக