ஞாயிறு, 15 ஜனவரி, 2023

அகழ்நானூறு 8

 

அகழ்நானூறு 8

_____________________________________________

சொற்கீரன்


ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ்

போர் அழல் தந்த பெரும்புண் காட்டும்.

திரிமருப்பு ஏந்திய இருமா முரணி 

கொன்மருப்பு ஆகி கூர்வாள்  பட்டு அன்ன‌

வீழ்ந்து குருதியின் கொடிவிடு வரி எழுதிச்

சொல்லும் போரின் தீச்சொல் ஆங்கு.

மதிமலி புரிசை நான்மாடக்கூடலும்

முத்துக்கோர்த்த வேழத்துக்கொம்பின் 

அணில் ஆடு ஊஞ்சலும் பால் திங்கள்

நெடுமுற்றம் இவர் பூங்கொடி

ஊர்தந்த மாணெழில் தோற்றமும்

மண்ணாகி மறைவாகி பூழி இறைப்

பேய்க்கூத்தின் பறந்தலை ஆவதோ?

நனி நல் உள்ளத்தே வாலறிவு கூர்வீர்.


_________________________________________________

குறிப்புரை


கடியலூர் உருத்திரங்கண்ணனார் அகநானூறு பாடல் 167 ல் ஆறலை கள்வர்களால் ஓரு ஊரே வெறிச்சோடி விட்டதை "ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ்"என்று எழுதியிருக்கிறார்.மக்களால் பீர்க்கங்கொடிகள் பறிக்கப்படாமல் எங்கு பார்த்தாலும் பீர்க்கங்காய்கள் நிறைந்து கிடக்கும்படி கொள்ளையர்களால் மக்கள் விரட்டப்பட்ட பின் அந்த ஊர் வெறிச்சிட்டு கிடக்கிறது என்று அந்த வரிகளில் காட்டுகிறார்.

அது போல் அழகிய ஊர்களும் நகர்களும் மன்னர்களுக்கிடையே நிகழ்ந்த போரினால் பேய்கள் கூத்தாடும் பாழ்நிலங்களாய் பரந்த வெட்ட வெளிகளாய் மாறிப்போகின்றனவே.போர் மறுப்பு எண்ணங்கள் மக்களின் நல் உள்ளங்களில் தூய அறிவாய் ஒளிர வேண்டும் என்ற நோக்கத்தை குறிக்கவே நான் இந்த சங்கநடைச்செய்யுட் கவிதையை (அகழ்நானூறு 8) எழுதியிருக்கிறேன்.

சொற்கீரன்

_______________________________________________________________________






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக