திங்கள், 9 ஜனவரி, 2023

அகழ்நானூறு 7

 அகழ்நானூறு 7

________________________________________________________

சொற்கீரன்.




நாணற்கிழங்கின் நிரல் தூர் ஈன்ற

செம்மணல் வாயின் வெள்ளெயிற்றன்ன‌

முகைஅவிழ் முறுவல் முன்நின்று ஈர்க்க‌

பரல்படு பருக்கை இடறும் முள்வழி

மடல்வரியன்ன அரவின் வெள்ளுரி 

தடம்பல் கொடுகடாம் நீந்தினன் மன்னே.

உழுவை தின்ற நிணத்தின் எச்சம்

கொடிவிடு கடமா குடர்நீள் மருங்கில்

கதழ் பதி செலவில் அகல்விரி வானின்

திரள்மழை கரிய அவள் தொகுகுரல்

ஐம்பால் பிளந்தது ஒக்க அவள் விழிப்பூ

சேர விரைந்தனன் ஆறு நீண்டனன் ஆங்கே.


________________________________________________________




பொழிப்புரை.

_______________________


ஆற்றின் கரையோரத்து நாணல்களின் வேர்க்கிழங்குகள்

வரிசையாய் முளைவிடுவது செம்மை நிற உதடுகளின் வாய் எனும்

மணற்பாங்கில் அவளது வெள்ளிய  ப‌ற்களின் வரிசையை போல்

விளங்கும்.அவளது அந்த மென் சிரிப்பின் மலர் மொட்டு விரியும் காட்சி

அவன் கண்முன்னே தோன்றி ஈர்க்கும்.ஆனால் அவன் பொருள் தேடி 

புறப்பட்ட வழியோ மிகக்கரடு முரடானது.கல்லும் முள்ளுமாய்

 இடறச்செய்கிறது.மடல் எனும் ஒரு கள்ளிச்செடி தன் சட்டையை 

கழற்றிப்பொட்ட பாம்பின் வெள்ளையான பாம்புரிபோல் புதர்களோடு

 புதர்களாய் வழி மறிக்கிறது.அந்த தடங்கள் பலவாய் கடக்கும் வளைந்த

 வழிகள்உள்ள பாதையைக்கடக்கிறான் அவன்.மேலும் ஒரு புலி காட்டுமாடு 

ஒன்றைக்கொன்று தின்றபிறகு எஞ்சிக்கிடக்கும் இறைச்சியின் 

குடல் பகுதி நீளமாய் கொடிபோல் அந்த பாதையில் கிடக்கிறது.

அதில் கால் பதித்து தான் அவன் நடக்கவேண்டியிருக்கிறது.

அப்போது கரு மேகங்கள் உருண்டு திரண்டு அந்த அகன்ற வானத்தில் 

பல இழைகளாய் தோன்றுகின்றன. அது அவளுடைய வகுந்து விடப்பட்ட 

கூந்தல் தொகுப்பாய் அவனுக்கு தெரிகின்றது.அவள் நெற்றியில் புரளும்

அந்தக்கூந்தல் கற்றைகளிடையே பூத்திருக்கும் அவள் விழிமலர்களைக்

காண‌ விரைந்து அவன் செல்கின்றான்.ஆனல் வழியோ மிக மிக 

நீண்டு கொண்டே இருப்பதாய் அவனை பிரிவுத்துயர் வாட்டுகிறது.


அகநானூறு 212 ல் பரணர் எனும் பெரும்புலவன் எழுதிய சொற்கள் ஒவ்வொன்றும் நம் பண்டைத்தமிழின் ஒலி அழகை பொருள் அழகை வெகு நயத்துடன் சொல்கின்றது.அவர் செய்யுட்களில் தமிழர்களின் காதல் வீரம் அறிவு சமுதாய நிகழ்வுகள் யாவும் ஒளிப்படங்களாய் படர்வதை நாம் கண்டு களித்திருக்கிறோம்.

இந்தப்பாடலில்

....நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற‌

முளைஓ ரன்ன மின்னெயிற்று...

என்ற அவர் வரிகளை எத்தனை தடவைகள் படித்தாலும் சலிக்காதவாறு அந்த காட்சி அழகின்அடர்த்தியை வெகுவாய் காட்டியிருக்கிறார் பரணர்.அந்த சொற்சுவையில் கிறங்கியனாய் இந்த "அகழ்நானூறு 7" என்ற சங்கநடைச்செய்யுட் கவிதையை எழுதியிருக்கிறேன்.


சொற்கீரன்.

_________________________________________________________________________________






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக