அகழ்நானூறு 9
_____________________________________________
சொற்கீரன்
புறநானூறு 197
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடா நிலை.
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்.
மேலே கண்ட புறநானூற்றுப்பாடலை நான் படித்த போது நம் தமிழ்ச்சொற்களின் பொருள் ஆழமும் அழகும் என்னை மிகவும் புல்லரிக்க வைத்தன.வழக்கமாய் புலவர்கள் அரசனின் பெரும்போரை அரிய அழகிய சொற்களில் வடித்துக்காட்டுவர்.ஆனால் இந்தப்புலவர் ஒரு (சோழ) அரசரை அதிலும் அவர் வாழ்கின்ற எளிய வாழ்க்கையின் மீது ஈர்ப்பு பெற்று உணர்ச்சி மிக பாடியுள்ளார்.
"...............
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,
புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;
....................."
அந்த மன்னனைப்பற்றி சொல்கிறார்.
"ஆட்டுக்குட்டி மேய்ந்த பின்னர் வீட்டு முள்வேலியில் துளிர்த்துப் படர்ந்திருக்கும் முஞ்ஞைக் கொடியைச் சமைத்து வரகரிசிச் சோற்றுடன் உண்ணும் சிற்றூர் மன்னர் ஆயினும் என் பெருமையை உணர்ந்து நடந்துகொள்ளும் பண்பாளரே ஆவார்."
இந்தப்புலவரைப் போன்றதொரு புலவர் சமுதாய அறநிலைப்பண்பில் "போரின் தீமைகளை " எதிர்த்து அது பற்றி விளக்கி ப்பாடுவதாக இந்த "அகழ் நானூறு 9" ஐ எழுதியுள்ளேன் .
அகழ்நானூறு 9
____________________________________________
சொற்கீரன்
புள்படு பூஞ்சினை பொறிபடு தும்பியொடு
வளி போழ்ந்த தூம்பின் நுண்ணாற்றின் ஓடி
தாதுண் வாழ்வென பரிசில் வேட்டம்
ஓலை கீறு ஒல்கா திணையில்
எழுத்தின் நல் அறக் கூர் தீட்டினேம்.
பெரும்பேர்ச் செறுவின் எறிகலம் ஈண்டு
தமிழே தமிழே தமிழ் ஊற்றுக் கடலே.
கொடிநுடங்கு மாடம் மயிர்க்கண் முரசம்
வேற்படை கிழித்த பகைஎரி தேஎத்து
பசும்புண் கண்ணுமிழ் குருதிச்சேற்றின்
குய்யில் விழுந்த அறம் அல்லதில்
புல்லும் ஆங்கு தலை நீட்டாது.
ஓரினத்தோரில் கொலையின் வேலி
கொடித்தேர் வெண்குடை மற்று
உயிர்பறி வேலும் வில்லும் வேழமும்
கடலெனத் திரை எழ பயனென்கொல்?
பாறு பாய் தீக்கண் பிணம் நோக்கி அன்ன
தாழும் இழிவு தமிழுக்கு இல்லை.
பாட்டும் பரிசிலும் வேட்டேம் அல்லேம்.
____________________________________________________________
(பொழிப்புரை தொடரும்)
--------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக