திங்கள், 30 ஜனவரி, 2023

ஆம் நண்பனே

 

ஆம்

நண்பனே !

காதல் எப்போதும் தேவை தான்.

காதலிக்கும்போது

காதலை காதலிக்க வேண்டும்.

கல்யாணத்திற்குப்பின்

கையில் கிடைத்திருக்கும்

இனிய‌

இல்லத்தை 

இல்லத்தின் பிரச்னைகளை

காதலிக்க வேண்டும்.

காதலி மட்டுமே தெரியும் 

காதலுக்கும்

பிரச்னை மட்டுமே தெரியும்

காதலுக்கும்

இடையே ஒரு

"மயிலிழை"யே காதலாய் தெரியும்

காதலைப்பற்றிய 

ஒரு காதல் உணர்வு தான்

சினிமா நிழல் காட்டும்

வெள்ளுடைகள்.

அதாவது

ஊட்டிப்பனியின் 

பஞ்சு புஷ்பங்கள்.

சரி

பையை எடுத்துக்கொண்டு

உளுத்தம் பருப்பும் 

பெல்லாரி வெங்காயமும் 

வாங்கி வர வெளியே கிளம்புங்கள்.

வெயில் படட்டும்.

பஞ்சு புஷ்பங்கள் கரைந்து விடும்.


____________________________________________

ருத்ரா

( a feedback to Thiru Sekar Krishnasamy's Face Book dt 30.01.2023)

ஜூடோ ரத்னம்


26.01.2023

------------------------------------------


94 வயது வரை வாழ்ந்த‌

ஜூடோ ரத்னம் அவர்கள் 

மறைவுக்கு அஞ்சலி


இவரிடம் 

அடிவாங்கியும் 

உதை வாங்கியும் 

குத்துகள் வாங்கியும்

அங்கே கிடப்பவை

இவர் "வயதுகளே"

காலத்தோடு போராடிய‌

மாவீரன் இவர்.

___________________________

ருத்ரா


ஞாயிறு, 29 ஜனவரி, 2023

அகழ்நானூறு 14

 அகழ்நானூறு 14

_______________________________________

சொற்கீரன்



ஆறலை கள்வர் கொடுமைக் கொலையின்

வீழ்படு பைம்பிணம் குடற் படர்க் கொடுஞ்சுரம்

கற்பரல் பதுக்கை கொடிவிடு குருதியின்

காட்சிகள் மலியும் கொடும் பாழாறும்

இறந்து நீண்டார் நீளிடை நில்லார்

நின் முறுவல் ஒன்றே மின்னல் காட்டும்.

விலங்கிய குன்றின் சிமையமும் தாண்டி

பன்மொழி தேஅத்து பகைப்புலம் அறுத்து

பொருள் குவை பலவும் கையொடு ஆர்த்து

மீள்வரும் ஆற்றின் முள்ளிய முழையில்

வரியொடு சினத்த வாலெறி விழியின்

பொறிகிளர் வேங்கை பாய்தலும் உவக்க‌

கூர்வேல் கையன் அகலம் விடைத்த‌

மள்ளல் தழீஇய விரைவான் கொள்ளை

பட்டுணர் களியின் ஆழம் மூழ்கி

சில்லரி வளையும்  உடைதல் கண்டும்

அவன் வழி இழிந்து மணிச்சிறைத்தும்பி

யாழ்நரல் பெயர்த்தாய் அம்ம வாழி.


_______________________________________________________________________


சனி, 28 ஜனவரி, 2023

நாட்டியப்பிரளயம் வைஜயந்திமாலா

 நாட்டியப்பிரளயம் 

வைஜயந்திமாலா அவர்களின்

நடனம் அருமை.

அவர்களின் நடனத்தில் 

உதிர்ந்தது சலங்கை ஒலிகள்

மட்டும் அல்ல.

கால மாற்றம் எனும்

அந்த எண்பத்தாறு வயதுகள் கூட‌

அவரது எழுச்சியான நடனத்தில்

உதிர்ந்து விழுந்து ஒலித்து

அந்த பழைய இளமை முத்திரைகளின்

புயலை கிளப்பியது போன்ற உணர்வே

இங்கு ஏற்படுகிறது.

அவரது கலைப்புகழ் ஓங்குக!


_____________________________________________

கவிஞர் ருத்ரா



Thanks for the link


மூளையின் நிழல்.

 



மூளையின் நிழல்.

___________________________________

ருத்ரா




சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை

பல்கலைக்கழகம் எனும்

அடிப்படைக்கட்டுமானத்தையே 

அடித்து நொறுக்கி விட்டது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள்

இந்த செல்லமான பூனைக்குட்டியை

வைத்துக்கொண்டு

புயல் கிளப்புகிறார்கள்.

உண்மை அறிவு காணாமல்

போய்விட்டது.

செயற்கை அறிவின் இந்த‌

கருவி

வெறும் மண்ணாங்கட்டியைக்கூட‌

நோபல் பரிசு 

வாங்க வைத்து விடும்.

மனிதர்களின் மூளையின் நிழலே

இனி ஆட்சி செய்யும்.

அமெரிக்க பள்ளிக்கூடங்கள்

மாணவர்கள் இந்த‌

சேட்ஜிபிடியை

பயன்படுத்த தடை 

விதித்துக்கொண்டிருக்கிறது.

கணினியுகம் க‌ண்மூடித்தன்மான‌

ஒரு யுகத்துள் விழுந்து விட்டதால்

இனி பிறக்கும் குழந்தைகளின்

கபாலங்கள் காலியாகவே

இருக்கும்

மூளைகள் இன்றி.

செயற்கை அறிவின் கதிர்வீச்சில்

இயற்கை சிந்தனைகள்

பூண்டற்றுப்போகும்.

ஒரு இறுக்கமான பனியுகம்

நம் அறிவை உறையவைத்து

இந்த உலகையே

விறைத்துப்போகவைக்கும்

பேரழிவு

நம் கைபேசி வழியே வந்து

குதிக்கப்போகிறது.

ஒரே தீர்வு

திருக்குறளை தினமும்

ஓதுவது தான்.

நம் நியூரான்களுக்குள்

கிளர்ந்து கொண்டிருக்கும் அந்த‌

டிஜிடல் சுனாமியை

எதிர் கொள்ள 

ஓ மனிதா!

மனிதம் எனும் ஆற்றலை

ஒரு எரிமலையாய்

உன்னிலிருந்து 

உமிழச்செய்.

சமுதாய உணர்வின் பிரளயம்

ஒன்றே இதைத்தடுக்கும்.

அமிழ்ந்து விடாதே

சுயநல‌ வெறியின்

இந்த அகங்காரக்கடலில்.


_________________________________________________







அகழ்நானூறு 13

அகழ்நானூறு 13

__________________________________________

சொற்கீரன்.



நீர்வாழ் முதலை ஆவித்தன்ன‌

ஆரக்கால் வேய்ந்த அகல் படப்பையின்

அணிசேர் பந்தர் இவரிய பகன்றை

அணிலொடு கொடிய அசைவளி ஊர்பு

தேரை ஒலியில் பசலை நோன்ற‌

சேயிழை இறையின் செறிவளை இறங்க‌

சென்றனன் வெஞ்சுரம் மாண்பொருள் நசையிஇ

காந்தளஞ்சிறு குடி கௌவை முரல

பல்லியம் கறங்க பாழ்நீடு இரவின் 

அரிவாய் குரலின் அஞ்சிறைப்பூச்சி

பகுவாய்த் தெள்மணி அலம்பல் மாக்கடல்

ஓதம் நிறைத்தன்ன பாயல் பரவி

ஊடிய நுண்மாண் நுழை ஊசி ஊர்பு

துன்பியல் செவ்வழி உய்த்த பண்ணின்

யாழ ஊழ்த்த நோய்மிகு இரவில்

நகையும் செய்வாள் அவனை ஆளும்

அன்பின் சுடுகணை மைவிழி உயிர்த்தே.


_____________________________________________________‍








புதன், 25 ஜனவரி, 2023

அகழ்நானூறு 12

 அகழ்நானூறு 12 

___________________________________________________

சொற்கீரன்




குவிந்த குரம்பை நிமிர்காட்டி 

உயர்மனை இடிக்கும்  வான்பூச்சூடி

வேறு தனி விடியல் எற்றைத்திங்கள்

கூர்முகம் காட்டும் சொல்லா நின்று.

குவி இணர் முகத்தோடு முகம் சேர்த்து

முன்றில் நின்ற மடமஞ்ஞையின்

மயங்கிய சாயலில் முறுவல் பூத்தனள்.

பறைதரும் சான்றோன் முதுகூத்தன்

வரித்த சொல் இது உள்ளுந்தோறும்

உவகை கூட்டும் அகமும் அகவும்.

"நெடுநல் யானை நீர்நசைக்கு இட்ட‌

கை கறி"க்கும் பான்மை போன்ம்.

அணியிழை அவன்பால் அன்றொரு கங்குல் 

சேர்ந்த நினைப்பின் நீள்சரம் கடிக்கும்.

அலர்கள் கடியும் வலிக்கத்தோன்றா

ஆழிய அன்பின் அகத்தூறு இன்பு.

பனிபடு சிமைய பன்மலை அடுக்கத்தும்

புலியும் கயலும் வில்லும் பொறித்த 

நிழல் தோன்றும் தமிழின் உருகெழு

கொடியின் தோற்றிய சுடரேந்தியாய்

தெரிந்த காட்சியில் அவன் அங்கு

வீட வியன்பெரு நகை முகம் தந்தோன்

ஆறு மீண்டு அத்தம் அணித்தான்.


_______________________________________________


செவ்வாய், 24 ஜனவரி, 2023

பிக்காஸோவின் தூரிகை நமைச்சல்கள்.

 

பிக்காஸோவின் தூரிகை நமைச்சல்கள்.( 1)

...................................................................................................................................


பிக்காசோவுக்கு மட்டுமானதல்ல அது.

அது 

பிரம்மாக்களின் முதல் அகர  முதல  அது.

அந்த ஜோதி லிங்கங்களில் 

எல்லா இருட்டும் தொலைந்து போனது.

கண்ணுக்கே தெரியாத அந்த 

கொலைவெறி பிடித்த 

கொரானா வைரஸ்களுக்குள்ளும் 

அது தான் படைப்பின் மற்றும் 

அழிப்பின் 

அழியாத சுரங்கம்.

அற்புத மனிதன் பிக்காஸோ 

ஆயிரம் ஆயிரம் மில்லியன் 

ஆண்டுகளுக்கும் முன்னரே 

கனன்ற 

அந்த தீயை தன் தூரிகையில் 

ஏந்தி நிற்கிறார்.

நூறு வகைக்கும் மேல் 

டைனோசார்கள் அன்று 

இந்த பூமியை கிடு கிடுக்க செய்திருக்கின்றன.

இந்த மண்ணின் 

முதல் அகநாநூறு புறநாநூறுகளை 

எழுதி 

"ஃ பாஸ்ஸில்கள்"ஆக்கி விட்டுத்தான் 

புழுதி ஆகி புதைந்து போயின.

பிக்காஸோரோவின் தூரிகைமயிர்களின் 

ஒவ்வொரு சிலிர்ப்பிலும் 

சிக்மண்டு ஃ ப்ராய்டுகளும்"

இந்த பூமியை 

பிசைந்து பிசைந்து 

உருவாக்கம் செய்திருக்கிறார்கள்.

மனிதனின் முதல் மூச்சே 

இந்த இலக்கியத்தை தான் 

இலக்கணம் ஆக்கியிருக்கிறது.


-----------------------------------------------------------------------------------------

 ருத்ரா 

 ...........................................................................................................................



      WITH THANKS.......The Dream (Le Rêve), 1932 by Pablo Picasso



The Dream (Le Rêve), 1932 by Pablo Picasso

போவோமா புது உலகம்?!!!

 போவோமா புது உலகம்?!!!

_____________________________________________

ருத்ரா




கூப்பாடு போடுங்கள்.

ஒலி மட்டுமே கேட்கவேண்டும்

அது 

எந்த மதத்தையும் 

எந்த கடவுளையும் 

எந்த இனத்தையும் 

எந்த மொழியையும்

குறிப்பிடக்கூடாது.

அல்லது 

கூப்பிடக்கூடாது.

செய்யுங்கள்

செய்யாதீர்கள் 

என்ற கட்டளைகளும்

அங்கே இருக்கக்கூடாது.

இப்படி 

கூடாது என்றும் கூட‌

இருக்கக்கூடாது அல்லவா?

ஆம்.

அது தான் சரி.

மீண்டும் 

கோடு மீறுகிறீகள்,

என்ன?

இப்படி ஆம் என்பதும் இல்லை என்பதும்

சரியா?

சரியில்லை தான்...

என்ன?

இப்போதும் 

சரி சரியில்லை

என்ற சொல்துண்டுகள்

வந்து விழுகின்றனவே?

இது தான் "சமயம்".

இது தான் சமயமா என்று 

பாருங்கள்.

என்ன மறுபடியும்

செய்யுங்கள் என்னும் வாய்ப்பாடு

வருகிறதே.

செய் எனும் பகுதிகொண்ட‌

வினச்சொல்லோ

பெயர்ச்சொல்லோ

அல்லது வேறு

ஏதேனும் சொல்லின் விஞ்சியதை 

விகுதி என்று அழைக்கப்படும்

ஒலி வடிவோ இருக்கக்கூடாது.

முடிந்தது.

இப்போது அங்கே

பறவைகள் ஒலி யெழுப்புகின்றன.

விலங்குகள் ஒலி எழுப்புகின்றன.

காற்று ஒலிக்கிறது.

கடல்கள் மூச்சுகளை ஒலிக்கின்றன.

ஒலி கூட‌

ஒலியின் அலையற்ற ஒலியை

அதாவது 

கேளா ஒலியை எழுப்புகின்றன.

கேட்கப்படாததே கேட்கப்படவேண்டும்.

பார்க்கப்படாததே பார்க்கப்படவேண்டும்.

பேசப்படாததே பேசப்படவேண்டும்.

சிந்திக்கப்பட முடியாததே

சிந்திக்கப்படவேண்டும்.

அறிந்து கொள்ளப்பட முடியாததே

அறிந்து கொள்ளப்பட வேண்டும்.

மொத்தத்தில் 

செய்யப்பட முடியாததே

செய்யப்பட வேண்டும்.

வேண்டும் வேண்டாமை

என்ற இரண்டும்

எதுவுமே 

அதுவாகவோ

அது இல்லையாகவோ

இருக்க...

சட்..நிறுத்துங்கள்..

இருக்க என்பதோடேயே

இருக்க!!!!!

(வேண்டும் கூடாது என்பது

பற்றி இங்கே

பேச்சும் இல்லை மூச்சும் இல்லை)




SWITCH OFF

_______________________________________________‍





சனி, 21 ஜனவரி, 2023

அகழ்நானூறு 11

 


அகழ்நானூறு 11

______________________________________

சொற்கீரன்



சுரை இவர் பொதியில் குடுமிக் குரம்பை

கவிசினை நீழல் பொறியின் வேங்கை

மாத்தாள் பெயர்த்த அஞ்சுவர் கடவுள் எழுத்தில்

நரைக்கண் இலங்க காழ்த்த கீற்றின் 

பாழ்த்த வெளியில் புல்தலை நுடங்கக்

கண்டு வெதும்பும் இல்லாள் எறியின் மூச்சில்

இல்லவன் நெஞ்சும் நோதலில் வேகும்.

பாம்பின் திரியன்ன ஆலத்து நெடுவீழ்

கடுவளி அசைவில் சூர் உரு காட்டி

ஆறு தடுக்கும் அடர்சுரம் போழ்ந்தும்

அவன் அவள் பூண் அகம் நோக்கும் வெரீஇய‌

நீளிடை அந்தி எழுதகை குருதி வழிய‌

கதழ்பரி மாவின் கலித்த வெளியில்

அவள் விழி வரிய வான் நோக்கி ஏகுவன்.


____________________________________________________




வியாழன், 19 ஜனவரி, 2023

அகழ்நானூறு 10

 அகழ்நானூறு  10

__________________________________________________

சொற்கீரன்



ஆரம் நிவிய அந்தார் அகலன் 

அமை வாங்கு அஞ்சுரம் ஒற்றி

வெண்திங்கள் கண் ஒளித்து வரூஉம்

கடைவிழிக் கடாத்த அற்றைத்திங்கள்

அணிநலம் சிதைஇய அன்பின் நல்அணி

ஊர்ந்தன செய்தான் நல்லூழ் உவப்ப.

அருவரை இழிதரும் மென் திரைத் திவலை

அனைய அஞ்சிறைத் தும்பி ஆர்க்கும் 

கயந்தலை மந்தி பார்ப்பின் கடுபசி

அழிக்கத் தாவும் கடுவன் நீள வீழ்த்த‌

பலவின் தீஞ்சுளைத் தொடத் தொட வெரீஇ

சுரிஇரும் பித்தை சுரும்பு இனம் கவிய‌

நிழற்கவின் நாடன் அழலவிர் வெஞ்சுரம்

எவன்கொல் தரூஉம் என்னொடு படர்

துயர் நனி இங்கு நிரவினன்.



___________________________________________

செவ்வாய், 17 ஜனவரி, 2023

சொல் துண்டுகள்.

 சொல் துண்டுகள்.

______________________________________

ருத்ரா


வருடங்களை வருடிக்கொண்டிருக்கிறேன்.

முசு முசு வென்று

அவை முயல் குட்டிகளைப்போல‌

மடியில் விழுந்து

தரைக்கு நழுவி

அந்த சிறிய மிளகுக்கண் பளபளப்புகளில்

ஏதோ ஒரு திரைப்படத்தை 

ஓட்டிக்கொண்டிருக்கின்றன.

இந்த முயல்கள்

நிழல்களை பிம்பம் காட்டுகின்றன.

நிகழ்வுகளின் ரத்த சதையை

பிய்த்துக்காட்டுகின்றன.

எத்தனை விழாக்கள்?

அதன் தோரணங்கள்.

மரண ஓலங்கள்.

ஜனனங்களின் குவா குவாக்கள்.

ஜனனம் மதுரம்.

மரணம் மதுரம்.

இனிப்பது

சடலமா? சரித்திரமா?

"காலடி" ஸ்லோகங்கள்

காலடிகளில்

புதைகின்றன.

அதென்ன தமிழில் கேட்டால்

முள்ளா குத்திவிடும்?

மெதுவாய் கொல்லும் நஞ்சு போல்

அந்த புரியாத மந்திரங்கள்

அவ்வப்போது வந்து வந்து

வாசலில் பாடை தயார் என்று

சொல்லிவிட்டுப்போகின்றன.

ஆயிரம் ஆயிரம் வருடங்களாய்

முள் படுக்கை தான்.

கூழாகிப்போன் ரோஜாக்களில்

வெற்றியின் ஏக்கங்கள்

மண்புழுக்களாய் 

நசுக்க‌ப்பட்டு வெறும் சுவடுகளாய்

மிஞ்சித் ததும்பிக்கொண்டிருக்கின்றன.

என்ன இது?

சம்பந்தமே இல்லாமல் 

மொட்டை மொட்டையாய் 

சொல் துண்டுகள்.

ஆம்.

மொட்டைக்கனவுகள் இவை.


_____________________________________________________________


அகழ்நானூறு 9

 அகழ்நானூறு 9

_____________________________________________

சொற்கீரன்




புறநானூறு 197

திணை: பாடாண்.

துறை: பரிசில் கடா நிலை.

பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.

பாடப்பட்டோன் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்.


மேலே கண்ட  புறநானூற்றுப்பாடலை நான் படித்த போது நம் தமிழ்ச்சொற்களின் பொருள் ஆழமும் அழகும் என்னை மிகவும் புல்லரிக்க வைத்தன.வழக்கமாய் புலவர்கள் அரசனின் பெரும்போரை அரிய அழகிய சொற்களில் வடித்துக்காட்டுவர்.ஆனால் இந்தப்புலவர் ஒரு (சோழ) அரசரை அதிலும் அவர் வாழ்கின்ற எளிய வாழ்க்கையின் மீது ஈர்ப்பு பெற்று உணர்ச்சி மிக பாடியுள்ளார்.

"...............

இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த

குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,

புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,

சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்

பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;

‍‍‍‍....................."

அந்த மன்னனைப்பற்றி  சொல்கிறார்.

"ஆட்டுக்குட்டி மேய்ந்த பின்னர் வீட்டு முள்வேலியில் துளிர்த்துப் படர்ந்திருக்கும் முஞ்ஞைக் கொடியைச் சமைத்து வரகரிசிச் சோற்றுடன் உண்ணும் சிற்றூர் மன்னர் ஆயினும் என் பெருமையை உணர்ந்து நடந்துகொள்ளும் பண்பாளரே ஆவார்." 


இந்தப்புலவரைப் போன்றதொரு புலவர் சமுதாய அறநிலைப்பண்பில் "போரின் தீமைகளை " எதிர்த்து அது பற்றி விளக்கி ப்பாடுவதாக இந்த "அகழ் நானூறு 9" ஐ  எழுதியுள்ளேன் .


அகழ்நானூறு 9

___________________________‍_________________

சொற்கீரன்



புள்படு பூஞ்சினை பொறிபடு தும்பியொடு

வளி போழ்ந்த தூம்பின் நுண்ணாற்றின் ஓடி

தாதுண் வாழ்வென பரிசில் வேட்டம்

ஓலை கீறு ஒல்கா திணையில்

எழுத்தின் நல் அறக் கூர்  தீட்டினேம்.

பெரும்பேர்ச் செறுவின் எறிகலம் ஈண்டு

தமிழே தமிழே தமிழ் ஊற்றுக் கடலே.

கொடிநுடங்கு மாடம் மயிர்க்கண் முரசம்

வேற்படை கிழித்த பகைஎரி தேஎத்து 

பசும்புண் கண்ணுமிழ் குருதிச்சேற்றின்

குய்யில் விழுந்த அறம் அல்லதில் 

புல்லும் ஆங்கு தலை நீட்டாது.

ஓரினத்தோரில் கொலையின் வேலி

கொடித்தேர் வெண்குடை மற்று

உயிர்பறி வேலும் வில்லும் வேழமும் 

கடலெனத் திரை எழ பயனென்கொல்?

பாறு பாய் தீக்கண் பிணம் நோக்கி அன்ன 

தாழும் இழிவு தமிழுக்கு இல்லை.

பாட்டும் பரிசிலும் வேட்டேம் அல்லேம்.


____________________________________________________________ 


(பொழிப்புரை தொடரும்)


--------------------------------------------------------------------------------------------




ஞாயிறு, 15 ஜனவரி, 2023

நாடென்பது

 


நாடென்பது

______________________________________

சொற்கீரன்



நாடென்பது தமிழ் உள்விசையின் பெரும் பேர் இசை!

நாடென்பது பூவும் புள்ளும் கல்லும் முள்ளும்

நாளும் நாளும் தமிழே பேசும் நற்றிணை ஆகும்

நாடென்பது தமிழெனும் வானம் ஓலையின் வரியில்.

நாடென்பது மக்கள் யாவரும் உடன்பிறப்பென வாழல்.

நாடென்பது நாடு அன்றி நாடா பொய்மை உலகம் அன்று.

நாடென்பது நாடிகள் இசைக்கும் மக்கள் யாழே!

 நாடென்பது நால் மறை நால் நிறம் தவிர்க்கும் அறிவே!

நாடென்பதும் தமிழே என்பதும் ஒருபொருட் பன்மொழி.

நாடென்பது அகத்தின் புறத்தின் செந்தழல் தமிழே.

நாடென்பது மோசிகீரனும் கவரிவீசு மன்னனும் 

நாடிய தமிழின் நற்றமிழ்க்குரலே !

நாடென்பது இமயத்திலும் பொறித்த தமிழே தமிழே

நாடென்பது ஆடும் மாடும் செல்வம் ஆகும் 

நாடென்பது அனைவரும் இயைந்த எம் ஓருயிர் ஆகும்.

நாடென்பது உயர்குடி தாழ்குடி இன்மை ஆகும்.

நாடென்பது வேற்றுமை யற்ற தமிழ்க்குடி ஆகும்.

நாடென்பது திரித்த ஒருநூல் மந்திரம் அல்ல.

நாடென்பது நல்லோர் சான்றோர் தொகுத்த நூலே.

நாடென்பது இம்மை மறுமைக் குப்பைகள் அன்று.

.நாடென்பது பாப புண்ணிய சூழ்ச்சிகள் அன்று.

நாடென்பது எல்லோரும் இன்புற்றிருப்பதே அன்றி

வேறு பராபரம் ஏதும் அற்ற 

சமநீதி சமநீதி ஒன்றே ஆகும்.


-________________________________________________________________________


அகழ்நானூறு 8

 

அகழ்நானூறு 8

_____________________________________________

சொற்கீரன்


ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ்

போர் அழல் தந்த பெரும்புண் காட்டும்.

திரிமருப்பு ஏந்திய இருமா முரணி 

கொன்மருப்பு ஆகி கூர்வாள்  பட்டு அன்ன‌

வீழ்ந்து குருதியின் கொடிவிடு வரி எழுதிச்

சொல்லும் போரின் தீச்சொல் ஆங்கு.

மதிமலி புரிசை நான்மாடக்கூடலும்

முத்துக்கோர்த்த வேழத்துக்கொம்பின் 

அணில் ஆடு ஊஞ்சலும் பால் திங்கள்

நெடுமுற்றம் இவர் பூங்கொடி

ஊர்தந்த மாணெழில் தோற்றமும்

மண்ணாகி மறைவாகி பூழி இறைப்

பேய்க்கூத்தின் பறந்தலை ஆவதோ?

நனி நல் உள்ளத்தே வாலறிவு கூர்வீர்.


_________________________________________________

குறிப்புரை


கடியலூர் உருத்திரங்கண்ணனார் அகநானூறு பாடல் 167 ல் ஆறலை கள்வர்களால் ஓரு ஊரே வெறிச்சோடி விட்டதை "ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ்"என்று எழுதியிருக்கிறார்.மக்களால் பீர்க்கங்கொடிகள் பறிக்கப்படாமல் எங்கு பார்த்தாலும் பீர்க்கங்காய்கள் நிறைந்து கிடக்கும்படி கொள்ளையர்களால் மக்கள் விரட்டப்பட்ட பின் அந்த ஊர் வெறிச்சிட்டு கிடக்கிறது என்று அந்த வரிகளில் காட்டுகிறார்.

அது போல் அழகிய ஊர்களும் நகர்களும் மன்னர்களுக்கிடையே நிகழ்ந்த போரினால் பேய்கள் கூத்தாடும் பாழ்நிலங்களாய் பரந்த வெட்ட வெளிகளாய் மாறிப்போகின்றனவே.போர் மறுப்பு எண்ணங்கள் மக்களின் நல் உள்ளங்களில் தூய அறிவாய் ஒளிர வேண்டும் என்ற நோக்கத்தை குறிக்கவே நான் இந்த சங்கநடைச்செய்யுட் கவிதையை (அகழ்நானூறு 8) எழுதியிருக்கிறேன்.

சொற்கீரன்

_______________________________________________________________________






சனி, 14 ஜனவரி, 2023

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


இன் தமிழ்நாடு!

என் தமிழ்நாடு!

மண்ணும் மலரும்

என் தமிழ்நாடு.

விண்ணும் வியக்கும்

என் தமிழ்நாடு.

இனிய பொங்கல்

தமிழ்ப் புத்தாண்டு 

வாழ்த்துக்கள்!!

யாவர்க்கும் 

வாழ்த்துக்கள்!!

யாதும் ஊரே!

யாவரும் கேளிர்!

பூங்குன்றனின்

பூந்தமிழ் வாழ்த்துக்கள்.

________________________________

ருத்ரா

திங்கள், 9 ஜனவரி, 2023

அகழ்நானூறு 7

 அகழ்நானூறு 7

________________________________________________________

சொற்கீரன்.




நாணற்கிழங்கின் நிரல் தூர் ஈன்ற

செம்மணல் வாயின் வெள்ளெயிற்றன்ன‌

முகைஅவிழ் முறுவல் முன்நின்று ஈர்க்க‌

பரல்படு பருக்கை இடறும் முள்வழி

மடல்வரியன்ன அரவின் வெள்ளுரி 

தடம்பல் கொடுகடாம் நீந்தினன் மன்னே.

உழுவை தின்ற நிணத்தின் எச்சம்

கொடிவிடு கடமா குடர்நீள் மருங்கில்

கதழ் பதி செலவில் அகல்விரி வானின்

திரள்மழை கரிய அவள் தொகுகுரல்

ஐம்பால் பிளந்தது ஒக்க அவள் விழிப்பூ

சேர விரைந்தனன் ஆறு நீண்டனன் ஆங்கே.


________________________________________________________




பொழிப்புரை.

_______________________


ஆற்றின் கரையோரத்து நாணல்களின் வேர்க்கிழங்குகள்

வரிசையாய் முளைவிடுவது செம்மை நிற உதடுகளின் வாய் எனும்

மணற்பாங்கில் அவளது வெள்ளிய  ப‌ற்களின் வரிசையை போல்

விளங்கும்.அவளது அந்த மென் சிரிப்பின் மலர் மொட்டு விரியும் காட்சி

அவன் கண்முன்னே தோன்றி ஈர்க்கும்.ஆனால் அவன் பொருள் தேடி 

புறப்பட்ட வழியோ மிகக்கரடு முரடானது.கல்லும் முள்ளுமாய்

 இடறச்செய்கிறது.மடல் எனும் ஒரு கள்ளிச்செடி தன் சட்டையை 

கழற்றிப்பொட்ட பாம்பின் வெள்ளையான பாம்புரிபோல் புதர்களோடு

 புதர்களாய் வழி மறிக்கிறது.அந்த தடங்கள் பலவாய் கடக்கும் வளைந்த

 வழிகள்உள்ள பாதையைக்கடக்கிறான் அவன்.மேலும் ஒரு புலி காட்டுமாடு 

ஒன்றைக்கொன்று தின்றபிறகு எஞ்சிக்கிடக்கும் இறைச்சியின் 

குடல் பகுதி நீளமாய் கொடிபோல் அந்த பாதையில் கிடக்கிறது.

அதில் கால் பதித்து தான் அவன் நடக்கவேண்டியிருக்கிறது.

அப்போது கரு மேகங்கள் உருண்டு திரண்டு அந்த அகன்ற வானத்தில் 

பல இழைகளாய் தோன்றுகின்றன. அது அவளுடைய வகுந்து விடப்பட்ட 

கூந்தல் தொகுப்பாய் அவனுக்கு தெரிகின்றது.அவள் நெற்றியில் புரளும்

அந்தக்கூந்தல் கற்றைகளிடையே பூத்திருக்கும் அவள் விழிமலர்களைக்

காண‌ விரைந்து அவன் செல்கின்றான்.ஆனல் வழியோ மிக மிக 

நீண்டு கொண்டே இருப்பதாய் அவனை பிரிவுத்துயர் வாட்டுகிறது.


அகநானூறு 212 ல் பரணர் எனும் பெரும்புலவன் எழுதிய சொற்கள் ஒவ்வொன்றும் நம் பண்டைத்தமிழின் ஒலி அழகை பொருள் அழகை வெகு நயத்துடன் சொல்கின்றது.அவர் செய்யுட்களில் தமிழர்களின் காதல் வீரம் அறிவு சமுதாய நிகழ்வுகள் யாவும் ஒளிப்படங்களாய் படர்வதை நாம் கண்டு களித்திருக்கிறோம்.

இந்தப்பாடலில்

....நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற‌

முளைஓ ரன்ன மின்னெயிற்று...

என்ற அவர் வரிகளை எத்தனை தடவைகள் படித்தாலும் சலிக்காதவாறு அந்த காட்சி அழகின்அடர்த்தியை வெகுவாய் காட்டியிருக்கிறார் பரணர்.அந்த சொற்சுவையில் கிறங்கியனாய் இந்த "அகழ்நானூறு 7" என்ற சங்கநடைச்செய்யுட் கவிதையை எழுதியிருக்கிறேன்.


சொற்கீரன்.

_________________________________________________________________________________






pieces of music

 


pieces of music

"painted it black"

and all my notes dance

as motley fools  washing 

all the pains and miseries.

from the deep space

there is a murmur 

spelling a god 

to open sesame the bouldered camp

of wisdom and whimpers

with murals of lamented dicta.

the pages of musical books

rustle to a sleep

in the abyss...

the broken phrases of life

devoid a womb always

scream a creation below which

a child of annihilation 

waves a flower

we can hardly call it

rose or thorn.

the dawn fell a dead-weight

of tomb on our face.

do not bother..bury the hatch

the smiles with the smiles

and again 

the smiles with out smiles.

smudge all the words

to read your meanings

that mean a life and death

as your gift-pack!


________________________________________--

ruthraa




சனி, 7 ஜனவரி, 2023

கூத்தன்

கூத்தன்

______________________________________

ருத்ரா




அந்த கூத்தன் நடனம்

உலக அளவில் 

இந்த பிரபஞ்சத்தின் 

கார்ட்டூன் என்று

பார்வையிடப்படுகிறது.

நேற்று கண்டுபிடித்த‌

ஹிக்ஸ் போஸான் கூட‌

அவன் புலித்தோலில் ஒரு புள்ளிதான்

என்று

சோடா புட்டிக்கண்கள் வழியே

உற்றுப்பார்க்கும் 

அந்த எம் ஐ டி ரிசர்ச் ஸ்காலர் இளைஞன்

பெருமையுடன் சொல்கிறான்

இந்த மைலாப்பூர் வாசனையை

கொஞ்சம் கூட கழற்றிக்கொள்ள‌

முடியாதவ‌னாய்.

ஏன் ஹாலிவுட் படங்களும் கூட‌

ஃபேன்டாசியின் சப்ளாக்கட்டைகளை

தட்டுவதில் 

நடராஜ பெருமான் விரிகூந்தலின்

வியப்பு சித்திரங்களை

வெர்ச்சுவல் ரியாலிட்டியில்

அள்ளித்தெளிக்கலாம்.

அது போகட்டும்.

உலகம் எங்கும் மணக்கும் கலாச்சாரம்

அல்லவா நம் கலாச்சாரம்.

அதில் எப்படி துர்நாற்றம் வந்தது?

நம் நாட்டின் ஏதோ ஒரு

மூலைக்கிராமத்தில்

குடிதண்ணீர் "டேங்கில்"

கலந்த அந்த 

ஆதிக்க அலகால விஷத்தை

விழுங்கி தன் தொண்டையை 

நீலகண்டமாக மாற்றி

எப்போது கோபம் கொப்பளிப்பார்

அந்த ருத்ர தாண்டவர்?

மும்மலத்தை அறுக்கும் தத்துவங்களை

எல்லாம் முழங்குவது இருக்கட்டும்.

மனித வரலாற்றின் வீழ்ச்சியாய்

அரங்கேறிய இந்த மோசமான 

மலத்தை அப்புறப்படுத்தும்

பள்ளியெழுச்சிப்பாடல்கள்

எப்போது எழுச்சியுறும்?

படிப்பு முற்றிய 

அந்த சோடாபுட்டிக்கண்களுக்கெல்லாம்

நெற்றிக்கண் கிடையாதா?

சமூக அநீதிகள் மீது

கொஞ்சம் கூட "ருத்ரம்" காட்டாத‌

அந்த ஜிகினா "ஆருத்ரா"க்கள்

திரையை கிழித்துக்கொண்டல்லவா

சீற்றம் காண்பித்திருக்க‌ வேண்டும்.

திரை விலகவில்லையே என்று

கும்பிடப்போனவர்கள் பக்திக்

குமுறலோடு காத்துக்கிடந்தார்கள்.

அந்த திரை

பலப் பல நூற்றாண்டுகளாய்

மூடியே தான் கிடக்கிறது.


____________________________________________________________













வியாழன், 5 ஜனவரி, 2023

மியூசியத்தில் ஒரு தராசு

 மியூசியத்தில் ஒரு தராசு

________________________________________

ருத்ரா



அது ஒரு அரியவகைப்பொருள்

என்று

எல்லோரும் பார்த்து 

மெய்சிலிர்த்தார்கள்.

புல்லரித்துக்கொண்டார்கள்.

ஒரு பொருளுக்கு சமமான 

எடை கற்களை

போடுவது போல்

அந்த நிகழ்வுகளையெல்லாம்

அள்ளி வைத்தார்கள் ஒரு தட்டில்.

அடுத்த தட்டில்

கடவுள் சிலைகளை அள்ளி வைத்தார்கள்.

கடவுள் சிலைகள் எல்லாம்

மேலேயே நின்றன.

மனிதன் நிகழ்த்திய நிகழ்வுகள்

அடியிலேயே இன்னும் அடியிலேயே

கிடந்தன.

அந்தக்

கன பரிமாணத்தின்

கனத்தில் எல்லாம்

சமூகமே உருண்டு திரண்டு கிடந்தது.

தீர்ப்பு அளிக்கும் 

அந்த தராசு இன்னும்

தீர்ப்பு அளிக்கப்படாமல் 

அப்படியே தான் இருந்தது.

தீர்ப்பு வாசிக்கப்பட்டு விட்டது.

நீதி அநீதி

நியாயம் அநியாயம்

என்ற சொற்களின் ஒலிக்கூட்டங்கள் மட்டும்

அந்த பளிங்குத்தூண்களில்

முட்டி மோதி

எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன.

சர்வாதிகாரம் கொக்கரிக்கிறது.

பாருங்கள் அந்த அலங்காரக் 

கண்ணாடிப்பேழையை.

எவ்வளவு பாதுகாப்பாய் நளினமாய்

வைத்திருக்கிறோம்

அதனுள்

ஜனநாயகத்தின் எலும்புக்கூட்டை.

வர்ணம் பூசிய மரணக்கோட்பாடுகளை.

மறந்து போன 

மறைந்து பொன 

நாகரிகங்களின் 

செல்லரித்த நூற்றாண்டுகளின்

ஃபாஸில்கள் எனும்

புதை பாடுகளை!

ஏதாவது புரிகிறதா?

வரலாறுகள் என்பவை புதிர்களா?

முரண்பாடுகளை

முரண்பாடுகள் தான் 

மோதுகின்றன.

கடவுளே இல்லாமல் 

வந்து விட்ட‌

கடவுள் புத்திரர்கள்

வேதங்களை 

ஒலித்துக்கொண்டிருக்கிறார்கள்.



_______________________________________________________________


புதன், 4 ஜனவரி, 2023

அகழ்நானூறு 6

 அகழ்நானூறு 6

_________________________________________

சொற்கீரன்



முறைவழிப்படூஉம் மல்லல் பேர்யாற்று

ஊழிக்கோட்டு ஊன்று வழி வாழ்ந்து

வானம் ஓச்சி ஞான்ற பொருளின்

செறிபொருள் உரிப்பொருள் கருப்பொருள் உய்த்து

இலங்கிய நெறிகள் தெளிந்ததன் ஆங்கே

வடக்கின் குறித்து அமர்ந்ததால் 

அமரர் ஆகி ஆழப்புதைந்த உயிர்ப்பூ முக்குளி

புரிந்தவர் சான்றோர் நடுகல் பூத்தனர்.

அவர் பதுக்கையின் கோங்கமும் எஃகிலை

குரவமும் மரவமும் உயர் பொருள் காட்டி

உயர்த்தியது இஃதே.காதலும் செருவும் 

திணைப்பால் வகுத்தன.மறைத்த ஆற்றுப்

படையேதும் இல்லை.நான் மறை இல்லை.

அத்தம் நண்ணி வெறுத்த வாழ்வின் 

சுடுகாட்டுப் பேயின் பறந்தலை இல்லை.

காமம் செப்பாது காமம் ஓம்பினர்.

நெய்தல் நீலம் மெல்லிணர் இரீய

ஊது தும்பியின் தூம்பின் நெடுங்காழ்

பண்ணும் முரலும் காதலர் வாழ்வே.


_______________________________________________________


குறிப்புரை

_________________________________________________________


அகநானூறு 157 ஆம் பாடலில் வேம்பற்றூர் குமரனார் "பதுக்கை கோங்கு"என்று ஒரு சொற்றொடர் எழுதியுள்ளார். அது சான்றோர்கள் உயிர் நீத்தபின் மண்ணில் அவர்களின் உடல்கள் "பதுக்கப்பட்டு அதாவது புதைக்கப்பட்டு) அந்த சான்றுக்கல் படுக்கை அல்லது பதுக்கை எனப்பட்டது.சமணர் படுக்கைகள் இந்த கோணத்தில் ஆயப்படவேண்டும்.சங்க கால சான்றோர்கள் வாழ்க்கை ஒரு"ஆற்று ஒழுக்கில்" ஓடுகிறது என எண்ணியவர்கள்.கற்பனையான பாவ புண்ணிய‌ பொதி மூட்டைகளை முதுகில் சுமந்திருக்கவில்லை.காதலும் (அகம்) வீரமுமே (புறம்)  பண்டைத்தமிழர்களின் பாடுகளாய் இருந்திருக்கின்றன.கடவுளர் பற்றிய பாடல்கள் சில அங்கும் இங்கும் இருந்திருக்கலாம்.ஆனால் அதன் முரட்டு பக்தி மானிடக்களிப்பு மிக்க வாழ்க்கையை புறக்கணிக்கவில்லை. மேலும் மனித வெளிச்சமே அவர்கள் இலக்கியங்களில் தெரிகிறது.அவர்கள் வாழ்க்கையின் மெல்லியல்புகள் அந்த‌பாடல் வரிகளின் சொல்லாடல்களின் முருகு எனும் அழகியலிலே தெரிகின்றன.

கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலும் இதையே சொல்கிறது.அதனால் தான் அறம் பொருள் இன்பம் என்று முப்பால் மட்டும் பேசினார். வீடு என்பது அறியாமையிலிருந்து அறிவுடைமைக்குவிடுதலை பெறுவதே ஆகும்.அது மோட்சம் சன்யாசம் என்ற மனித வாழ்க்கையையே வெறுத்து ஒதுக்கும் "வெறுப்புக்கோட்பாடு" அல்ல.இதையே நான் இந்த அகழ்நானூறு 6 ல் உட்பொருளாய் ஆக்கி எழுதியுள்ளேன்.


சொற்கீரன்.


______________________________________________________________________




ஞாயிறு, 1 ஜனவரி, 2023

சுவடு



நிழல் புலம்பியது

மொட்டை வெயிலில்.

எங்கே என் மரம்?


சுவடு

________________________________

ருத்ரா