வியாழன், 26 மே, 2022

முகத்தைத் துடைத்துக்கொள்.

 



முகத்தைத் துடைத்துக்கொள்.

__________________________________

ருத்ரா



முகத்தைத் துடைத்துக்கொள்.

மூக்கைச்சிந்தி அழுது முடித்து

முகம் கழுவிக்கொள்.

உன் புலம்பல்களே உன் கல்லறைகள்.

போதும்.

ஒப்பாரிகள்.

புன்னகைக் கதிர் வீசு.

உன் வெறிகளையெல்லாம்

வெட்டி முறித்து விடு.


மனிதன் கண்ட தொலைநோக்கி

ஆயிரம் ஒளியாண்டுக்கு அப்பாலும்

"ஈர்ப்பால்"

நடனம் ஆடிக்கொண்டிருக்கிற‌

இரு "கேலாக்சி" எனும்

விண் ஒளித்திரட்சிகளோடு

கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டு

மடியில் வைத்துக்கொண்டு

விளையாடிக்கொண்டிருக்கிறது.

உன் கவலைகள் இப்போது

தூசியிலும் தூசு.

உன் மனக்குறைகள்

கரைந்து போய்விடுகின்ற‌

வெறும் குமிழிகள்.

இன்னும்

வெட்டுவேன் குத்துவேன் என்று

சாதி மதங்களை..

பிணக்கிடங்கின் அந்த‌

குப்பை கூளங்களை... 

கிளறிக்கொண்டிருக்கிறாய்.

இதையெல்லாம் அள்ளி

உன் ஓட்டுப்பெட்டிக்குள்

நிரப்பிக்கொண்டிருக்கிறாய்.

உன் பழைய‌

நூற்றாண்டுகள் எல்லாம்

முடை நாற்றம் வீசுவது

உனக்குத் தெரியவில்லையா?

இன்று

என்பது நேற்றைய பிணம்.

நாளை

என்பது பிறக்கவே முடியாத‌

ஒரு குழந்தை.

காலம் உன் விரல் நுனியில்

கரு தரிக்கிறது

செயலின் சூறாவளிகளாய்.

நிமிர்ந்து கொள்.

விழித்துக்கொள்.

அப்புறம் சிந்திக்கலாம் என்று

இப்போது நீ

பஜனை செய்து கொண்டிருந்தால்

உன் "அந்திமக்கிரியைகள்"மட்டுமே

உனக்கு

மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கும்.

ஆம்.

மறுபடியும் அதே 

வலியுறுத்தல்கள் தான் உன்

வலிகளை எல்லாம் நீக்கும்.

"நிமிர்ந்து கொள்.

விழித்துக்கொள்"


_____________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக