பிம்பங்களாக
________________________________
ருத்ரா
என் அருமை
உடன்வரு பயணாளிகளே!
ஒரு வாழ்க்கையை நோக்கிய நம் பயணம்
இன்னும் ஒரு
நடவே படாத மைல்கல்லுக்கு அருகில்
நாம் மூச்சிரைத்து வரும்போது தான்
புரிகிறது
அது நம் "பிள்ளையார் சுழி" என்று.
தனி மனிதனாய்
தனித்தனி மத்தாப்பு கொளுத்திக்கொண்டு
நாம் வெளிச்சம் ஏற்படுத்தும் போதும்
நமக்கு புரிகிறது
அது கும்மிருட்டு தான் என்று,
எல்லோருமாக
எல்லோருக்குமாக
பயணம் துவக்குவது
எந்நாளோ
அதுவே நம் திருநாள்
எனும் பெருநாள்.
தனித்தனியாய்
மதமாக சாதியாக
நாம் சின்னாபின்னமாய்
ஆகும் போது
மனிதம் என்ற
உள்ளொளியே பட்டுப்போய் விடுகிறது.
எங்கோ ஏதோ
ஒரு மைல் கல்லில்
ஒரு மஞ்சத்துணியை
சுற்றி வைத்து
அதற்குள்ளிருந்து
ஒரு சாமியைத்தோண்டி எடுத்து
சப்பரங்களும் தேர்களும்
உலவ விட்டு
இறுதியில்
நம் தடம் விட்டு
நம் இடம் விட்டு
நம் இனம் விட்டு
நம் மொழி விட்டு
நம்மை நாமே
யார் என்று கேட்டு விட்டு
அலைந்து குலைந்து போய்
நிற்கின்றோம்.
பாதை எங்கே?
பயணம் எங்கே?
என்று நாம் தேடும் முன்
மந்திர இரைச்சல்கள்
நம்மை
வெறும் குப்பை கூளங்களாய்
வீதியில் எறிகின்றன.
அவை
நம் வரலாற்றின்
சுவடுகள் அழித்து
நம்மை பிம்பங்களாக்கி விட்டன.
அந்த நிழல்கள் பிசைந்து செய்த
சட்டி பானைகளாக
நாம் நொறுங்கிக்கிடக்கிறோம்.
அதனோடு
நொறுங்கிக்கிடப்பது
நம் சரித்திரங்களும் தான்.
_________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக