சிறுவளை முரல சில்பூ அவிழ்ந்தன்ன
------------------------------------------------------------------சொற்கீரன்
குளித்து மணற்கொண்ட கல்லா இளமை
புன்னை பொறி இணர் தூங்குமரம் வாங்கி
சுழித்த பொருனையின் செழித்த வாய்க்கால்
தோய்ந்த நாட்களின் நினைவுகள் மூசும்
பண்டு பெரிய காலம் தடங்கள் காட்டும்.
திணிமணற் பாவை உருகெழு கையின்
தேன்படு சிதரினும் பலவே பலவே.
சிறுவளை முரல சில்பூ அவிழ்ந்தன்ன
பிஞ்சுவயதின் பூஞ்சினைக் கையள்
குண்டுநீர் துழாஅய் யான் காட்டிய
வெள்ளைச்சிறு கல்லினும் வெள்ளிய
நகைத்து என்னுள் பூத்தாள் கலித்தே .
-----------------------------------------------------------------------------
வாய்க்காலில் குளிக்கும் போது ஆழமாய்
முக்குளி போட்டு கையில் மண் எடுத்து மேலே வருவது
ஒரு களிப்பு தரும் விளையாட்டு.இந்த சங்கத்தமிழ்
விளையாட்டு இன்றும் நம் ஆற்றங்கரை நாகரிகத்தின்
எச்சமாய் நம் ஊர்களில் காணப்படுகிறது.அப்படி ஒரு சிறுவன்
ஒரு சிறு வெண்கல்லை எடுத்து தன் தோழிக்கு காட்டுகிறான்.
அதைக்கண்ட அவளிடம் தோன்றும் அந்த வெள்ளைசிரிப்பே
அவன் உள்ளம் முழுதும் பூத்து படர்கிறது.
இது நான் எழுதிய சங்கநடைசெய்யுட் கவிதை.
-------------------------------------------------------------------சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக