வியாழன், 12 மே, 2022

சூரியோதயங்கள்.

 

சூரியோதயங்கள்.

-------------------------------------------------------ருத்ரா 


டாக்டர் ஜோசஃப் மர்பி எனும்

அறிஞரின் "விண்குழல்" உரை ஒன்றை 

தமிழில் கேட்டேன்.

"ஆழ்மனது"பற்றி

நீண்டதொரு சொல்லருவி அது.

மனிதனுக்குள்

இன்னொரு மனிதனை

தோண்டியெடுத்து

அதற்கு கடவுள் முலாம் பூசுவதாகத்தான்

அது இருந்தது.

ஒன்று எல்லோராலும் கவனிக்கத்தக்கது.

உடலை வளைத்து நெளித்து

முறுக்கிப்பிழிந்து 

யோகா என்று சொல்லி

"ரப்பர் ஷீட் ஜியாமெட்ரி"

எனும் டோபாலஜி கணிதத்தை

கடா முடா மொழியில் செய்வது போல்

மனித மனத்தையும்

ஜிம்னாஸ்டிக் வளைவு நெளிவுகள் கொண்டு

அறிய முயலும் பயிற்சியே

அவரது சொற்பொழிவு.

தனி மனித லாபம் ஒன்றையே

நேர்கோட்டு நம்பிக்கை எனும்

பாசிடிவ் திங்கிங் ஆக பசப்பும் வேலையே

இந்த "ஆன்மீகம்" எனும் அத்துமீறல்.

இது சமுதாயப்பார்வையையே

எதிர்மறைப்பார்வை என்று

புறம் தள்ளுகிறது.

சாக்கடையை வடிகட்டி

அதை விட மோசமான சாக்கடையை

ஏந்தி பருகச்சொல்வதே

இந்த அறிவற்ற அறிவுப்பரிமாணம் ஆகும்.

சாதியும் மதமும் சம்பிரதாய சடங்குகளும்

நம் உயிர்ப்பான‌

ரத்த ஓட்டத்தை 

சாக்கடையின் தேக்கத்துள்

தேக்கத்தூண்டுவதே இந்த‌

பாசிடிவ் பிறாண்டல் நோய் தான்.

நம்பிக்கை 

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக‌

பொய்மையின் படுகுழியை

வெட்டிக்கொண்டே இருக்கிறது.

நம்பிக்கை -அவநம்பிக்கை என்று 

ஒரு மையக்கயிறு இல்லாமலேயே 

இந்த "கயிற்று இழுப்புப்"  போட்டியை 

நடத்திக்கொண்டேயி ருக்கிறது.

ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம்

என்பார்கள்

நாணயமே இல்லாத ஒரு நாணயத்தின் 

விளையாட்டு இது.

இதுவம் ஒரு பொய்யின் வடிவம் தான்.

இரண்டு பரிமாணமான நீளம்  அகலம் என்பவற்றின் 

"ஒரு பக்கம்"

எப்போதும்  "ஒரு பக்கமே"தான்.

அதன் மறு பக்கம் என்று பேசுவது 

இரண்டு பக்கங்களுக்கும் இடையே உள்ள 

ஒரு மர்மமான "கன பரிமாணத்தையும்"

சேர்த்து 

மூன்று பரிமாணம் ஆக்கி விடுவதை 

நாம் அறிவதில்லை.

இந்த பிரபஞ்சம் இப்படித்தான் 

ஒன்று 

இரண்டு 

மூன்று 

நான்கு 

ஐந்து 

ஆறு 

பத்து 

பதினொன்று 

இருபத்திநான்கு 

என்று சுட்டி மடக்கி வைக்கப்பட்ட 

பரிமாணங்களில் 

அதாவது "கர்லடு அப் டைமன்ஷன்ஸ் "

தோற்றம் தருகிறது.

நம் நம்பிக்கையும் அப்படியே.

அவநம்பிக்கைகள் சுருட்டி மடக்கி 

வைக்கப்பட்ட 

நம்பிக்கையே நம் வாழ்க்கை.

மாறி மாறி 

நம் முதுகு  சொரிந்து கொள்வது போல் தான் 

கடவுள் என்றும் சைத்தான் என்றும் 

நாம் புலம்பிக்கொண்டிருப்பது.

சிந்தனை தெளிவு ஒன்றே 

தினம் தினம் நம் முன் தோன்றும் 

சூரியோதயங்கள் !


--------------------------------------------------------------------------------------------------

!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக