புதன், 2 செப்டம்பர், 2020

சிதறல்

 


சிதறல்

___________________________ருத்ரா


தினம் தினம் 

சூரியன் எனும் செர்ரிப்பழம்

இதோ இதோ

என்று காட்டி மறைந்து கொள்கிறது.

என்ன ஏமாற்று வித்தை இது?

உன் விடியல் மகரந்தங்கள்

ஏன் இன்னும் சிதறவில்லை.

இந்த மலட்டுப்பூக்கள்

காய்க்க வில்லையே!

கனிய வில்லையே!

கடவுள் எனும் முகமூடிகள்

கானல் நீர்த்திடலில்

கைலாசங்கள் காட்டுகின்றன.

பர மண்டலத்தின் குரல்கள்

என்று

வண்டு ரீங்காரங்களை

உமிழ்ந்து கொண்டிருக்கின்றன.

வேதங்கள் என்று

மனிதர்களின் தொண்டைக்குழியிலிருந்து

தவளைகள் கத்திக்கொண்டே

இருக்கின்றன.

மனிதனுக்கு மனிதன்

இடையே உள்ள தோழமை

புரிந்து கொள்ளப்படவே இல்லை.

அருவருப்பான உயர்வு தாழ்வுகளின்

கோரைப்பற்கள்

ரத்தம் ஒழுக அச்சம் காட்டிக்கொண்டே

இருக்கின்றன.

எங்கள் இதய விளிம்புகளின்

அடிவானத்தில்

ஓ எங்கள் அன்பான விடியலே!

இன்னும் பூச்சட்டிகளின்

சிதறல்களாய்த்தான் சிரிக்கிறாய்.

போலி மனிதர்களின் தோல் உரிக்கும்

அறிவுக்கிளர்ச்சிகளை

என்றைக்கு உன் கிழக்கு

முகம் காட்டி அகம் காட்டும்?

ஒரு நாள் அந்த பிரம்மாண்ட‌

லண்டன் நூலகத்தில்

ஒரு விடியலின்

மின்காந்தப்பாய்ச்சலை

மார்க்ஸ் என்ற மாபெரும் சூரியன்

தீக்குச்சி கிழித்தானே.

அந்த சிந்தனை 

ஓ மனிதர்களே

இன்னுமா உங்கள் இருட்டு மூலைகளுக்கு

வெளிச்சம் பாய்ச்சவில்லை.

போதும்.

இந்த பொய் மண்டலப்

புழுக்கூடுகளை

கிழித்துக்கொண்டு

அறிவுச்சிறகை

அகல அகல விரியுங்கள்.

உங்கள் துன்பங்கள் 

அகல 

அதுவே ஒரு அகல்வானம்!


==================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக