ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்
=========================================ருத்ரா
ஆசிரியர்கள் முன்னே
மாணவர்கள் பின்னே
அது அந்தக்காலம்
மாணவர்கள் முன்னே
ஆசிரியர்கள் பின்னே
இது இந்தக் காலம்.
சிலபஸ் எக்ஸாம்
என்று ஆசிரியர்கள்
திட்டம் இடும்போது
மாணவர்கள் "செல்களில்"
ஏதோ ஒரு சுவர் ஏறிக்குதித்து
இன்னொரு உலகில்
பயணம் போகிறார்கள்.
இவர்கள் வருங்காலம்
ஏதோ ஒரு சோப்புக்குமிழி என்றாலும்
அந்த சோப்பு
அவள் போட்டுக்குளிப்பதல்லவா
என்று புதிய அகநானூற்றின்
இன்னும் ஒரு புதிய மணிமிடைப்பவளத்தில்
விழுந்து கிடக்கிறான் மாணவன்.
உடம்பெல்லாமே நாக்குகள் ஆகி
ஜிலேபி அண்டாவுக்குள்
விழுந்து கிடப்பது போல்.
இது பரம்பொருளின் பரமானந்தத்துக்கு
பரமஹம்சர் சொன்ன உவமை.
இன்பத்தில் பெரிது ஏது? சிறிது ஏது?
மாணவர்களின் மனங்கள்
எனும் வகுப்புக்குள்
ஆசிரியர்களுக்கு முதலில்
அட்மிஷன் கிடைக்கவேண்டும்.
அதன் பிறகு தான்
இவர் வகுப்புக்குள்
இவர் உலா வர முடியும்.
முட்டி போடச்சொல்லி
பிரம்புகளை உருட்டி
மாணவர்களுக்கு இஸ்திரி போட்டால்
மடிப்புக் கலையாத
மனப்பாட உருத்தட்டல்களின்
சாதனையாக சில கிரீடங்கள் கிடைக்கலாம்.
சிறந்த சமூக விஞ்ஞான சிந்தனைகளின்
சிறகுகள் விரிக்கும்
வேடந்தாங்கலாக
மாணவர்களின் கூட்டத்தை
ஆசிரியர் மாற்ற நினைத்தால்
அவரும் மாணவர்களோடு மாணவராய்
"வேடந்தாங்கல்" வேண்டும்.
அவரது அறிவின் ஆறும்
நிற்காத ஓட்டத்தில்
இயங்கிக்கொண்டேஇருக்க வேண்டும்.
அப்போது தான் மாணவர்கள்
சிதறும் திசையில்
சினிமா இருட்டுக்குள் தேங்க மாட்டார்கள்.
மாணவர்கள் மாணவர்களுக்காக படிக்கவேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்காக படிக்கவேண்டும்.
அது வகுப்பறையா? நூலகமா?
இரண்டின் பயிலகமே அது.
இது ஒரு எதிர் நீச்சல்.
இதிலும் கரை கடந்து
அறிவின் கடல் பலக்கடந்து
மாணவர்களை அற்புதமான
பொன் விளிம்பின் விடியல் காட்டும்
ஒளிர் முனைக்கு இட்டுச்செல்லும்
ஆசிரியர்கள் எத்தனை எத்தனை பேர்
வெற்றி முகம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை
வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
தலை வணங்கி!
=========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக