புதன், 2 செப்டம்பர், 2020

ஒளியில் ஒளியும் ஒளி!


 ஒளியில் ஒளியும் ஒளி!

=========================================ருத்ரா


மஞ்சள் பூசிய மங்கையாக‌

ஒரு நாணத்தின் பொந்துக்குள்

பதுங்கிக்கொண்டாயே?

எங்கே யிருந்து இந்த மஞ்சள் ஒளியை

உன் மீது பூசிக்கொண்டாய்?

சூரியன் அவிழ்த்துப்போட்டு 

உலர வைத்த ஆடையை

உன் முகத்திரை ஆக்கிக்கொண்டாயோ!

சூரியனுக்கு ஏது நிர்வாணம்?

இந்த ஆயிரம் கண் இலை இடுக்குகளில்

உன் நிர்வாணம் கூட‌

தூறல் மழைபோல் ஒரு

ஊசி மழை பெய்கிறதே!

என்ன அற்புதக்காட்சி இது.

"என்னது நான் நிர்வாணமாகத்தெரிகிறேனா?"

திடுக்கிட்டு

அவள் வெளியேறினாள்.

அவள் ஒளியின் 

முழு உடையைப் போர்த்துக்கொண்டு தான்

நின்றாள்.

இயற்கை ஓவியமே!

உனக்கு கிச்சு கிச்சு மூட்டும்

தூரிகைகள் இங்கு ஏதும் இல்லை.

ஒரு நிர்வாணத்தைக்கொண்டு 

ஒரு நிர்வாணம் 

ஒரு நிர்வாணம் என்று 

தலைப்பிட்டு

ஓவியம் தீட்டிய போதும்

இருட்டு எனும்

அழகிய கவிதையே

உன் மரக்கிளையின் அக்குள் களில்

மரகத துளிர்ப்புகளை

கசிய விட்டுக்கொண்டிருக்கிறது.

காட்சி எனும் போதை

கண்களின் கண்ணாடி விழிகளில்

நொதி நிலை அடைவதில்லை.

அகக்கொதிப்புகளின்

செங்குமிழிகள் 

ஒரு ஏக்கம் பாய்ச்சி நின்று

மில்லியன் மில்லியன் ஒளியாண்டு நீள‌

நாக்கினால்

ருசி பார்த்துக்கொண்டு நிற்கிறது.

தூரத்து நட்சத்திரங்கள்

அசையாமல் அசைந்து 

துகிலுரி நடனங்களை 

சிலுப்பிக்கொண்டிருக்கின்றன.

அதில் கூர்மையான ஒரு கடும் வெப்பமான‌

தாகம் 

என் தொண்டையை வற‌ளச்செய்யும் அளவுக்கு

தகிக்கிறது.

இந்த தாகமே

எல்லா உயிர்களுக்கும் உயிர்களாய்

உள்ளிருந்து உந்துகிறது.

அதன் முட்டல் முனைகளின்

உறுத்தல்களை உணர்கிறீர்களா?

உணரும்போது உணருங்கள்.

அது வரை

இந்த இடைவேளை

பல யுகங்களின் திவலைகளை

உங்கள் மீது 

தெறித்துக்கொண்டிருக்கட்டும்.


======================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக