சனி, 26 செப்டம்பர், 2020

கண்ணீர்க்கடலின் சுநாமி

 கண்ணீர்க்கடலின் சுநாமி

================================ருத்ரா

எழுந்து வா

இசைக்கடலே 

என்றோம்.

ஒரு கண்ணீர்க்கடலின்

சுநாமி அல்லவா

கிளர்ந்து நிற்கிறது.

எங்கள் இதயநிலாவான‌

எஸ்பிபி அவர்களே!

கோடிக்கணக்கான‌

இசை ரசிகர்களுக்கு

மீளாத்துயரம் இது.

எத்தனை பாடல்?

எத்தனை மொழிகள்?

அத்தனையும் எங்களுக்கு

உன்  இசையில்

தமிழின் அமுதாக இனித்ததே.

உன்னிடம் 

புறமுதுகு இட்டு ஒடிய‌

கோரோனா கூட‌

இப்போது சொல்கிறது

எழுந்து வந்து ஒரு பாட்டு பாடு

இந்த உலகைவிட்டே 

நான் ஓடிவிடுகிறேன் என்று.

அது கூட உன் பாட்டுக்கு ஏங்கி

அழும் மௌனராகம்

எங்களுக்கு கேட்கிறது!

அந்த "கொரோனா" "இடைவெளியில்"

உன் இசைப்பிரபஞ்சம்

குழைந்து நெளிந்து எந்த‌

கொடிய வியாதிக்கும் மருந்து ஆகிவிடும்

என்று 

இப்போது அது புரிந்து கொண்டிருக்கும்.

என்ன பயன்?

உன் இழப்பு 

இந்த மக்களின் தவிப்புக்கடலாய் 

அலை வீசுகிறது.

இப்போது உன்

நுங்கம்பாக்கத்துக்கும்

தாமரைப்பாக்கத்துக்கும்

இடையே

புகழ் வீச்சின் 

கோடிக்கணக்கான ஒளியாண்டு தூர‌

இசைக்கதிர்களின்

கல்பாக்கம் உன் அன்பு மிகு

கோடம்பாக்கம் தானே!

உன் இனிய பாடல்கள்

தீயினால் எரிக்கப்படமுடியாது.

மண்ணால் புதைக்கப்பட முடியாது.

மழை கூட சில நாளில் தேனாகலாம்

மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்

என்று 

அந்த கவிஞன் எழுதினான்.

மண் கூட இசையாகி

மரம் ஆகலாம் பூ ஆகலாம்

என்று இன்று எழுதுவான் 

அந்தக்கவிஞன்.

அந்த மண்ணுக்கு அடியில்

உன் இசை மகரந்தங்கள்

சங்கீதத்தின் ஒரு ஆரண்ய காண்டத்தை

பதியம் இடும்.

இசைப்பேரரசே!

இந்த இயற்கை கூட‌

உனக்கு கவரி வீசும்

தன் செவிகளால்.

வாழ்க! உன் இசை!

======================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக