============================================ருத்ரா
வெடிவேய்க் கடிவாய் எயில் ஆர்க்கலிய!
பிடி இலை எஃகம் கடல்படை திரைய!
பல் சான்றீரே!பல் சான்றீரே என
திரள் நூல் பாவலர் மறை எதிர் மறைகள்
கேட்டீர் ஆயினும் மீமிசை ஈண்ட
ஒருசொல் கேண்மின் உறு சொல் அஃதே
தமிழின் இமிழொலி பண்டும் நீடிய பண்டேயாம்.
இமையம் நிமிரும் முன்னொரு ஊழின்
இயன்ற கல்லின் பல்முனை அடுக்கம்
எரி குழம்பின் நிரவிய பரற்கண்
ஊழி எழுதிய கல்வெட்டன்ன தொல்லிய
தகைமையின் நனிசால் தமிழின்
ஒலி அங்கு ஊதிய நுண்குமிழ்ப்படுகை
ஏடாய் எழுத்தாய் பீடு உயர்ந்து சிமைய
நந்தம் செந்தமிழ் நவின்றது ஆங்கே.
============================================
தமிழ் மொழி கல் தோன்றி மண் தோன்றா காலத்தும் முன் தொன்றிய மொழி என்ற வரியில்
நிலபிறள்வு கடல் கோள் போன்ற நிகழ்வுகள் மறைமுகமாய் குறிப்பிடப்படுகிறது.ஆழிப்பேரலைகளால்
அமிழ்ந்த நிலப்பகுதி வெள்ளம் வடியும் போது முதலில் உயரமான பகுதியாய் இருக்கும் "மலைகள்"
(கல்) தோன்றும்.பிறகு தரைமட்டம் அதாவது மண்ணின் பகுதி தெரியத்தொடங்கும்.இத்தகைய நிகழ்வுகளுக்கும் முன்னரே தமிழ் மக்கள் பெரும் நாகரிக (நகர வாழ்க்கை) நிலையில் இருந்தார்கள்:
என்பதையே குறிப்பிடுகிறது.இதையொட்டிய ஒரு கற்பனை நிகழ்வாக அதாவது பூமியில் முதன் முதல்
எரிமலை தோன்றிய பிறகே மலைகள் பாறைகள் பாறைக்குழம்பின் குமுழி போன்ற கற்பரற்படுகை
கள் முதலியன தோன்றின.தமிழில் குறிஞ்சித்திணை எனும் மலையும் மலை சார்ந்த வாழ்வு நிலைகள் பற்றிய சங்கப்பாடல்கள் உள்ளன.
______________________________
புறம் 302
பாடியவர்: வெறிபாடிய காமக் கண்ணியார் (காமக் கணியார் எனவும் பாடம்).
திணை: தும்பை
துறை : குதிரை மறம்
வெடிவேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும், மாவே; பூவே, விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட; நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் | 5 |
கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய, நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்; நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி, வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின், விண்ணிவர் விசும்பின் மீனும், | 10 |
தண்பெயல் உறையும், உறையாற் றாவே. |
புறநானூறு பாடல் 302 ஒரு அருமையான பாடல்.தமிழரின் குதிரை மறம் எனும் குதிரையின் மீது இருந்து போர்புரியும் வலிமையை நன்கு விளக்குகிறார்
"வெடிவேய் "அதாவது தன் கட்டிலிருந்து விடுபடும் அந்த மூங்கில் மரக்கிளையைப்போல சீறிpபாயும் குதிரையை செலுத்தும் வீரத்தை பாடுகிறார் புலவர்.அவர் பாடிய முதல் சொற்கள் என் கற்பனை"குதிரையை" பாயச்செய்ததன் வெளிப்பாடே"ஊழி எழுதிய கல்வெட்டு" என்னும் எனது இந்த சங்கச்செய்யுள்.
அன்புடன் ருத்ரா
=================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக