செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஒரு வெள்ளை ரோஜா


ஒரு வெள்ளை ரோஜா
======================================================ருத்ரா

காஷ்மீர் என்றால்
நம் கண் முன் வருவது
ரோஜாவும் ஆப்பிளும் தான்.
அரசியல் அமைப்பு சாசனத்தில்
ஒரு நம்பிக்கையும்
மனிதநேயமும்
கொண்டு எழுதப்பட்ட
அந்த ஷரத்துக்களில்
பீரங்கிக்குண்டுகள்
எப்படி கூடு வைத்தன?
சுதந்திரம் பெறத்துடித்த‌
இந்தியக் கைகளின் கூட்டணிக்குள்
ஒரு நச்சுத்தனமான‌
கோடரியை செருகிவைத்த‌
வெள்ளயன் தந்திரம்
காஷ்மீரை செங்காடு ஆக்கிவிட்டது.
நம் நாட்டின் மதங்களுக்குள்
வழிபாடுகளுக்கு
குவிந்த கைகள்
மனித நட்புக்கும்
கைகள் குலுக்கிக்கொண்டுதானே
இருந்தன.
நேற்று வரை
நம் ஜனநாயக கணிப்பொறிக்குள்
முட்டையிட்டவற்றில்
எந்த அசுரக்குஞ்சுகளும்
சிறகடிக்க வில்லையே.
உலகமெலாம் கவ்விக்கொண்டிருக்கும்
தீவிரவாதப்புகை மூட்டம்
இங்கேயுமா
வைரஸ் ஆகவேண்டும்?
அமர்நாத் பனிலிங்கம்
அன்பே சிவம் எனும்
உருவகமாய் உலகத்துக்கு
காட்சி தந்தது.
இதற்குள் வர்ணங்களின் மயக்கம்
எப்படி வந்தது?
ஒரே இந்து மதம் என்று
சொல்லி
அதில் ஆயிரம் சாதிகளை
செருகி
வைத்துக்கொள்ளுவதற்குப்பதில்
ஒரே மனிதம் எனும்
மதம் படைப்போம்.
ஒரு மனிதனுக்கு
ஓராயிரம் இறைவர்களா?
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்பது
எம்மதமும் சம்மதம் என்பதன்
முழக்கம் தானே.
முள்ளோடு ஒரு சிவப்பு ரோஜா
நமக்கு இனி வேண்டாம்.
அமைதியின் மகரந்தங்கள் தூவும்
வெள்ளை ரோஜாவே
நம் தோட்டத்தில் பூக்கட்டுமே!

=============================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக