ஞாயிறு, 27 மே, 2018

தாமிரம்

தாமிரம்
=================================ருத்ரா

நீ
பொருளாதாரத்தின்
உலோக வடிவம்.
ஆனால்
அதில் எப்படி இந்த‌
துப்பாக்கிகள் வார்க்கப்பட்டன?
அந்த பொருளாதாரம்
மக்களை
வெறும் சாக்கடையாக‌
புற்று நோய்க் கிடங்காக‌
புகையை கக்கி இவர்களின்
உயிர்க்காற்றுகளை
அழிக்கும் எமன்களாக‌
ஆக்கும் போது
அதை எதிர்க்கும் கேள்விகள்
முணுமுணுக்கப்படும்போது
அவை வெறும்
வழக்குக்காகிதங்களாய்
இருக்க நாடகம் போட்ட நீ
கொஞ்சம் ஆவேசத்தோடு
ஆனால் அறத்தோடு
உன்னிடம் அணிவகுத்து
வந்த போது அவர்களை
குறி பார்த்து அந்த‌
அணித்தரமான கேள்விகளை
விழுங்கிவிடும் வெறியில்
மரணங்களை அல்லவா
உமிழ்ந்திருக்கிறாய்.
தூத்துக்குடியின்
இந்த உப்புக்கரித்த உடல்கள் மீது
கார்ப்பரேட் உப்பரிகைகள்
கல்லறை எழுப்பவா
ஓ! தாமிரமே
நீ இங்கு உருக்கப்படுகிறாய்?
மனிதனின்
உழைப்பில்
அந்த நரம்பின் மின்சாரத்தில்
புதிய புதிய பிரபஞ்சங்களை
உருவாக்கும்
ஆற்றலை நீ உணரவில்லையா?
மனிதனை மனிதன் சாப்பிடும்
பேராசையின்
வெறும் வணிக வடிவமல்ல‌
நீ!
"தாமிரமே" உனக்குள்
உழைப்பாளர்களின் ஒரு
ஒரு "பொன்னுலகம்"
வார்க்கப்படும் கனவு
நசுங்கி உருத்தெரியாமல்
போவதற்கா
இப்படி ராட்சசத்தனமாய்
தாக்குவதற்கு உயர்ந்து நிற்கிறாய்?

============================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக