வெள்ளி, 4 மே, 2018

"சொள்ள‌ மாடா! மாத்தி யோசி!"

"சொள்ள‌ மாடா! மாத்தி யோசி!"

======================================ருத்ரா இ.பரமசிவன்



தாமிரபரணி பாய் விரித்ததில்

நான் படுத்துக்கிடந்தேன்.

பளிங்கு நீருள்

முக்குளி போடுவதில் ஒரு சுகம்.

கணுக்கால் அள்வே

ஓடினாலும் அது

என் அன்றாடக்கவிதை.

அதிலும் இந்த‌ மாலைக்குளிய‌லில்

"உம‌ர்க‌ய‌மும்"கூட‌ குளிப்ப‌து போல்

ஒரு பாவ‌னை.

வெயிலுக்கேற்ற‌ நிழ‌ல் இங்கு

நீருக்குள்

நெருப்பையே க‌ரைத்து

குளிர்பூங்குழம்பாக்கி

கிண்ண‌ங்க‌ளில் ஊற்றித்த‌ரும்.

கல்லிடைக்குறிச்சியின்

இத‌யத்தை வ‌ருடிக்கொண்டே

ஓடினாலும்

உருண்டு வ‌ரும் கூழாங்க‌ல்

ஒவ்வொன்றும்

இம‌ய‌ம் தான்.

"ஜன்னி" கண்ட இம‌ய‌த்துக்கே

ம‌ருத்துவ‌ம் பார்த்த‌

அக‌த்திய‌னின் க‌ண்ணாடிப்பிழ‌ம்பு அல்ல‌வா

தாமிர‌ப‌ர‌ணி.

தின‌மும் இதில் முக‌ம் பார்ப்ப‌து

அக‌த்திய‌னின் த‌மிழைத்தானே.

குளித்துக்கொண்டே பார்ப்பேன்

வ‌ட‌க‌ரையின் "ஊர்க்காடு"

வ‌ய‌ல் காடுக‌ளில் பொதிந்து கிட‌க்கும்.

அங்கு உய‌ர்ந்த‌ ஒரு "சாஸ்தா"

ஒரு அறுவாளின் விஸ்வ‌ரூப‌மாய்

விடைத்து நின்று கொண்டிருப்பார்.

அன்று நான் பார்த்த‌போது

அவ‌ரைச்சுற்றி நிறைய‌ ஆடுக‌ள்.

க‌ழுத்தில் மாலையுட‌ன்.

கோலிகுண்டு க‌ண்க‌ளில்

அவ‌ற்றிற்கே உரிய‌

"மே..மே..மே"க்க‌ளின்

மேள‌க‌ர்த்தா ராக‌ங்க‌ள்.

குல‌ தெய்வ‌ பூச‌னைக்கு

"பொங்க‌"வைக்கும்

அந்த‌ புகைமூட்ட‌த்துள்

புதைந்து போக‌ப்போவ‌து

தெரியாம‌ல்

அந்த‌ விழி உருண்டைக‌ள்

த‌லையை ஆட்டி ஆட்டி

சோழி குலுக்கிப்போட்டுக்கொண்டிருந்த‌ன‌.

அது "ஒற்றையா இர‌ட்டையா" ஆட்ட‌ம் அல்ல‌.

வெட்டு ஒன்று துண்டு ரெண்டு

ஆட்ட‌ம்.

என‌க்கு பொறுக்க‌வில்லை.

"சொள்ள‌ மாடா!

மாத்தி யோசி!"

இப்படி ஒரு கூப்பாடுடன்

கும்பிடு போட்டு

ச‌ட‌க்கென்று

நீர்க்காக்கை போல‌

தாமிர‌ப‌ர‌ணிக்குள் பூந்து கொண்டேன்.

.................................................

..............................................

குமிழிகள்..குமிழிகள்

பூதாகரமான குமிழிகள்.

அங்கேயும்

சொள்ள மாடன் தான்.

அவ‌னைச்சுற்றி

ம‌னித‌ர்க‌ள் த‌லை கொம்புக‌ளுட‌ன்.

க‌ழுத்தில் மாலையுட‌ன்.

பூசாரி இல்லை.

அத‌ற்குப்ப‌தில்

டினோசார் மாதிரி

ஒரு வெள்ளாடு.

கொம்புக‌ளுக்கு ப‌தில் கைக‌ள்

ப‌ள‌ ப‌ள‌க்கும் ப‌ட்டாக்க‌த்தியுட‌ன்.

ஒரு ம‌னித‌னின் த‌லை

அப்போது தான்

சூடாக‌..வெட்டுண்டு...

அய்யய்யோ..சொள்ளமாடா!..

முக்குளிபோட்டுக்கிட‌ந்த‌வ‌ன்

த‌லையை வெளியே நீட்டினேன்.

தாமிர‌ப‌ர‌ணியெல்லாம் ர‌த்த‌மா?

இது என்ன‌ ப‌ய‌ங்க‌ர‌ம்.

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய்

காட்சி க‌ரைந்த‌து.

சூரிய‌னின் ர‌த்த‌வாந்தி மேற்கில்.

இப்போது

சூரிய‌ன் முக்குளி போட்டுவிட்டான்.



===============================================ருத்ரா

10 செப்டம்பர்  2012ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக