புதன், 23 மே, 2018

ஓலைத்துடிப்புகள் ( 10 )

ஓலைத்துடிப்புகள் ( 10 )
======================================================ருத்ரா


அம்மூவனார் எழுதிய "நெய்தல் செய்யுட்"கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் காட்டுகின்றன என்பதை சங்கத்தமிழ் ஆர்வலர்கள் நன்றாகவே அறிவார்கள்.

"வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை"..

என்ற இந்த இரண்டு வரிகள் அவர் தீட்டும் ஓவியம் ஏழு கடலும் கொள்ளாது அலை கொண்டு அதன் கலை கொண்டு அதன் மணல் கொண்டு அதன் குருகும் சிறகும் குருகின் குஞ்சும் கொண்டு தீட்டப்பட்ட உணர்ச்சிப்பிழம்பு. அந்த இரண்டு வரிகளில் வரும் "செத்த" என்ற சொல் பலவிதமாய் பொருள் கொள்ளப்பட்ட போதும் "செத்தவன் கையில் வெத்தலை பாக்கு "இன்றும் நாம் வழங்குகிறோமே அந்த "செத்த நிலையை" தான் புலவர் மனத்தில் கொண்டிருக்கிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றன. தொள தொள என்று அல்லது தத்தக்க பொத்தக்க நடை தான் இங்கு குருகின் மட நடை என குறிக்கப்படுகிறது.இருப்பினும் தன் குஞ்சு தொலைந்ததோ (செத்ததோ) என்ற துயரத்தில் அந்த தளர்நடை வெளிப்படுவதாகவும் கொள்ளலாம்.இன்னமும் நமக்கு புரியவேண்டுமென்றால் "தங்கப்பதக்கம்" திரைப்படத்தில் மிடுக்கு நிறைந்த அந்த அதிகாரி துயரம் தாங்காது தளர் நடையிடுவதை நம் நடிகர் திலகம் நடந்து காட்டுவாரே அதுவும் நம் கண் முன் விரிகிறது.

"செத்தென" என்ற சொல் மிகவும் அழகானது;நுண்மையானது.

ஐங்குறுநூறு 151லிருந்து 160 வரைக்கும் உள்ள அத்தனை பாடல்களிலும் அந்த வெள்ளாங்குருகின் பிள்ளை (குஞ்சு)யின் "மடநடை"அவ்வளவு செறிவு மிக்கது.தலைவியின் காதல் "மடம்" அதில் காட்சி ஆக்கப்படுகிறது.செத்த என்பதற்கு ஒரு பாடலில் மட்டுமே காணாமல் போன அல்லது இறந்து போய் விட்ட குஞ்சை தேட தளர தளர நடையிட்டதாக அம்மூவனார் பாடுகிறார்.மற்ற பாடல்களில் "போல" என்ற உவமை உருபாகத்தான் எழுதுகிறார். இருப்பினும் செத்த என்ற சொல் "போல" என்று வழங்கப்படுவதில் "சங்கத்தமிழின் சொல்லியல் முறை" ஒரு அ றிவு நுட்பத்தையும் சிந்தனைத்திட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.இறந்தவனுக்கும் இருப்பவனுக்கும் அப்படி யென்ன
வேறுபாடு வேண்டிக்கிடக்கிறது இங்கே என்ற ஒரு தத்துவ உட்குறிப்பு நமக்கு புலனாகிறது.மக்களுக்கு ஊறு செய்பவன் அல்லது எந்த பயனும்
இல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும் "செத்தையாருக்குள் வைக்கப்படும்" என்கிறார் வள்ளுவர்.இன்னொரு குறளில் "உறங்குவது போலும் சாக்காடு" என்கிறார்.பெரும்பாலானவர்கள் இப்படி "நடைப்பிணங்களாய்"(செத்தவர்கள் போல்) இருப்பதால் தானே எல்லா பிரச்னைகளும் தீர்வு இல்லாமல் தத்தளிக்கின்றன.இங்கே "செத்த" "போல" என்ற இரு சொல்லும் ஒரு பொருளில் இழைகிறது.எனவே "வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென"என்ற வரிகளைப்பற்றியே வெள்ளம்போல் சிந்தனை பெருகுகின்றது.அதனால் நான் எழுதிய சங்கநடைக்கவிதையே இது.


வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென.."
=============================================ருத்ரா இ பரமசிவன்


பூவின் அவிழ்முகம் நோக்கும் தாதுள்
உயிர்பெய் அவிர்மழை நனையல் அன்ன‌
தீயின் தீஞ்சுவை நுண்ணிய நோக்கும்.
நிலவின் பஞ்சு வெள்ளிய வெள்ளம்
விண்ணின் பரவை வெரூஉய் நோக்கும்.
வெண்ணிப்பறந்தலை ததையநூறி
குருதி பொத்திய அகல் அறை மன்று
ஆயும் ஓர்க்கும் தன் சேய் தேடும்
மறத்தினை உடுத்த மணித்திரள் அன்னை
முலையின் தேக்கிய உயிர்ப்பால் அழிய‌
மூசு மூச்சின் உடற்கூடு திரிய‌
கண்ணீர் இழியும் கடுஞ்செறி தேடல்
அன்ன யாமும் அழல்குண்டு மூழ்கும்.
வெள்ளாங்குருகு பிள்ளை செத்தென
மடநடை பயிலும் மடப்பத்தின் மாய்ந்து
வெள்மணல் ஒற்றி விரிகுரல் வீசி
அவன்விழி தேடும் விசும்பின் உயர்த்தும்
வெறுங்கை வீச்சும் வானம் சிதைப்ப‌
காணா ஒள்வாள் செங்கடல் பாய்ச்சும்.
கதிர்மகன் இருந்தலை மலையிடை வீழும்.
எக்கர் சிவக்கும்;யாழல் சிவக்கும்;அண்ணியநீரின்
பொறிநுரை நிழலும் சிவக்கும் கண்ணே
அயிரைப் பிஞ்சும் அழல்சிறை காட்டும்.
படுபரல் துறைதொறும் அவனே நோக்கும்.

=====================================================
(பொழிப்புரை தொடரும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக