ஞாயிறு, 20 மே, 2018

வேறொன்றும் இல்லை.

வேறொன்றும் இல்லை.
============================================ருத்ரா.

அந்த கத்திமுனையில்
நின்றுகொண்டு
உண்டு உடுத்து படுத்து
கனவுகளையும் தின்று
கொட்டை போட்டு
வித்தை காட்டுகிறேன்.
அதன் கூரிய முனை
அல்லது
மயிற்பீலி வருடல்
கூட‌
என் குடல்களை
சரிய வைத்து விட்டன.
ஒவ்வொரு எழுத்தும்
எனைத் தின்பதற்காக‌
தூண் பிளந்த சிங்கங்களாய்
புதிய புதிய கூரான‌
நகங்களையும் பற்களையும்
அறிவு ஆக்கி
இருட்டை கிழிக்கிறது.
"ஹரியைக்"காட்ட அல்ல.
ஏற்கனவே நம் அஞ்ஞானங்களால்
கந்தலாய் கிடக்கும்
ஹரியை மறைத்துகொள்ள.
இந்த
எழுத்துக்கள்
சொற்கள்
ஒரு நீண்ட குகையாய்
ஒரு ஜனனமே
மரணத்தின் கொட்டாவியாய்
வாய்பிளந்து அழைக்கிறது.
பிறப்புகளையும் இறப்புகளையும்
கழுவி தூய்மைப்படுத்தி
ஏதோ ஒன்றை
சலவை செய்து காட்டுகிறது.
உண்மையைத்தேடி
விடும் இந்த அம்புகள்
அத்தனையும் பொய்.
பொய்யைத்தவிர
வேறொன்றும் இல்லை.

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக