சனி, 12 மே, 2018

"நில் "

"நில் "
==========================================ருத்ரா இ பரமசிவன்.


நிழலை தேடி நடக்கிறேன்.
நேற்றுச்சொற்பொழிவில் தான் சொன்னார்கள்
எனக்குள்ளே
மாந்தோப்பும் தென்னைமரங்களும் இருக்கின்றன என்று.
கடவுள் தேடி கை கூப்பினேன்.
முதுகுக்குப்பின்னே
எல்லாவேதங்களையும் மூட்டை கட்டி வைத்திருப்பதாய்
ஏதோ ஒரு ஆனந்தா சொன்னார்.
அந்த கனமான மூட்டையை பிரிப்பானேன் என்று
மயிற்பீலிகள் என்னை பிசையட்டும்
என்று விட்டு விட்டேன்.

காதலில் விழுந்தேன்.
அவள் சிதறிய புன்முறுவலே போதுமானது.
இனி என்ன பாஷ்யங்களின் தேவை இருக்கப்போகிறது?
மின்னல் விழுதூன்ற‌
தலையணை முகட்டினிலே
தூக்கத்துள்ளும்  தூக்கம் தொலைத்த ஆரண்யங்கள்.

அரிசி புளி வத்தல் என்று
அந்த அஞ்சறைப்பெட்டி இடுக்குகளுக்குள்ளும்
தேடிப்பார்ந்தேன்.
வெள்ளிமீசையில் மினுக்கிய‌
நுண்ணிய பூச்சிகள் கூட‌
தன் வசம் "ஒரு நோவா" கப்பல் இருப்பதாகவும்
எல்லாப்பிரளயங்களுக்கும்
இங்கு புகலிடம் என்று
மீசையை மீசையை ஆட்டி
எதோ பிரசங்கம் செய்வது போல் இருந்தது.
என்ன சொல்கிறாய் என்று
என் சுண்டுவிரலை அதன் மீது வைத்தேன்.
அப்புறம் அதைக்காணவில்லை.
நசுங்கிப்போயிருந்தது.

வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் கேட்டேன்.
அகராதி புரட்டப்போனவர்கள்
கல்லறைகளில் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
என்னைச்சுற்றி
என்னையும் சேர்த்து தான்
அநியாயங்களும் அக்கிரமங்களும்
மலிந்து போயினவே
என்ன செய்ய‌
என்று அவர்களைக்கேட்டேன்.
கையில் நிறைய
வில் அம்புகளையும்
மழுவாயுதங்களையும்
கோடரிகளையும் கலப்பைகளையும்
சங்கு சக்கரங்களையும்
மயில் ரெக்கை கொத்துகளோடு
புல்லாங்குழல் வாசிக்கும்
கிரீடங்களையும் கொடுத்தார்கள்
நீயே அவதாரம் எடுத்துக்கொள் என்று.
சரி என்று கிளம்பினேன்.
"நில்
இதையும் எடுத்துக்கொள்."
என்ன இது?
அரிதாரம் என்றார்கள்.
இதோ
அதை அங்கே தூவுகிறேன்
நம் சட்டமன்றங்களிலும் நீதி மன்றங்களிலும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
நாரதரின் சப்பளாக்கட்டையிலிருந்து
நாதன் முடி மேலிருக்கும் நல்ல பாம்பு வரைக்கும்
எல்லாம் இங்கு அரசியல் தான்.

======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக