ஞாயிறு, 13 மே, 2018

ரஜனி அவர்களே!

ரஜனி அவர்களே!
===========================================ருத்ரா


ரஜனி அவர்களே!
இவர்கள் அலைமோதுகிறார்கள்
நீங்கள் தான்
ஆட்சி அமைக்க வேண்டும்
என்று.
நீங்கள்
"2.0" வுக்கும்
"காலா"வுக்கும்
அல்லது
இனிமேல் எடுக்கப்போகும்
"கேங்க்ஸ்டரு"க்கும்
இந்த ரசிக அலைகளை
வைத்துக்கொண்டு
கோட்டை கட்டுகிறீர்கள்.
இவர்களும் ஒரு கோட்டையைத்தான்
கட்டுகிறார்கள்.
நீங்களும் ஒரு கோட்டையைத்தான்
கட்டுகிறீர்கள்.
எது அட்டை?
எது அசல்?
உலகம் எல்லாம்
உங்கள் முகவரி தான்.
உங்கள் முகத்தில் தான்
எங்கள் முகவரி இல்லை.
தமிழ் மண் வேர்த்து விறு விறுக்கும்
காவிரியின் வேர்வையில்
கரையெழுப்பிய கரிகாலன் வேர்வை தானே
ரத்தமாய் இருந்தது.
தமிழர்களை யுத்தத்தில்
ரத்தம் குடிக்க நினைத்த‌
அந்த சாளுக்கியர்களிடமா
இருந்தது காவிரி?
இந்த வரலாற்றைச் சொல்வதாய்
தெரியவில்லையே
காலா.
சொல் (கரி)காலா!
ஒரு மும்பை தாதாவுக்குள்
கருப்பு வைரத்தின் கிம்பர்லிகள்
இருக்கலாம்.
தமிழனின் தாகமும் வேகமுமாய்
இருக்கிற காவிரிக்கு
கொந்தளித்த தமிழனைப்பார்க்காமல்...
அந்த தமிழ் மண் கந்தலாய் ஆனதையும்
கணக்கில் எடுக்காமல்
சில அசம்பாவிதங்களால்
கசங்கிய சில காக்கிச்சட்டைகளுக்கு
நீங்கள் கர்ஜித்ததன்
அர்த்தம்
இன்னும் இந்த விசில் அலைகளுக்குப்
புரியவில்லையே!
காவிரியைச்சுருட்டி
வடவர்கள் பையில் போடும்
திட்டம் ஏதோ இருக்குமோ
என்ற அச்சம் இங்கே
படர்ந்து கிடக்கும்போது
தென்னிந்திய நதிகளை இணைப்போமா
என்று நீங்கள்
கிச்சு கிச்சு தாம்பாளாம்
கியா கியா தாம்பாளம்
என
மணலைக்குவித்துக்கொண்டு
விளையாடுவார்களே
சிறுவர்கள்
அதைப்போல அல்லவா பேசி
விசில் மழையில் நனைந்திருக்கிறீர்கள்!
காலாவில்
அந்த அடித்தட்டு மக்களுக்கு
நரம்புகள் சூடேற்றி
பஞ்ச் டயலாக்குகளிலும்
பாஞ்சு பாஞ்சு எகிறும் காட்சிகளிலும்
நீங்கள்
பின்னி பெடல் எடுத்திருக்கலாம்.
ஆனாலும்
கண்ணா! இன்னும் காலம் வரவில்லை அரசியலுக்கு!
என்று
உங்கள் கானல் நீர் படகுப்பயணம்
யாருடைய கொடி அசைப்புக்கு
காத்திருக்கிறது என்று
உங்களை மொய்த்துக்கிடக்கும்
பொய் அலைகளுக்கு தெரியவில்லை
என்று
இந்த "மெய்" அலைகளுக்கு நன்கு தெரியும்.
எங்கள் தமிழின்
ஒவ்வொரு "உயிர்மெய்"ஒலிப்புக்குள்ளும்
அந்த உண்மையின் குரல்
ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

====================================================




1 கருத்து:

NARAYANAN சொன்னது…

இவனுக்கெல்லாம் தமிழில் கவிதையா?

கருத்துரையிடுக