திங்கள், 14 மே, 2018

இரும்புக்குதிரை

இரும்புக்குதிரை
=========================================ருத்ரா

இது படத்திற்கான
விமர்சனம் அல்ல.
படம் வந்த விதத்திற்கான‌
விமர்சனம்.
காற்று வேகத்தில் பறக்க‌
காத்திருக்கும்
மற்ற படக்குதிரைகளின் முன்னே
இந்த "இரும்புக்குதிரை"
எப்படி முன்னே வந்தது?
லாயக்காரனும் குதிரையும்
ஒன்றாக இருக்கும் வசதியினால்
இது முன் வந்ததா?
திரைப்படத்துறையில்
நலிவடைந்த
காயம்பட்ட‌
குதிரைகளுக்கு எல்லாம்
மருத்துவம் செய்து
புத்துயிர் ஊட்டிய‌
விஷாலா
இப்படி கேள்விக்கணைகளால்
துளைக்கப்படுகிறார்?
உண்மையிலேயே இது ஒரு திரைப்படம் தானா?
இல்லை நூல்விட்டுப்பார்ப்போம்
என்று
யாரோ தங்கள் ராஜ்யத்துக்கு
யாகம் செய்ய வலம்வர விட்ட‌
அஸ்வமேதயாகக்"குதிரையா"?
இதில் என்ன உள்குத்து இருந்தாலும்
ஒரு கியூ வின் நியாயம்
முறிக்கப்படுவதில் எந்த‌
நியாயமும் இல்லை.
செப்பண்டி! ஜருகண்டி என்றால்
புளகாங்கிதம் அடைபவர்
தமிழா!நீடு வாழ்க!
என்பதில்
ஒரு கடாமுடா ஓசையைத்தான்
அவர் கேட்கிறாரோ?
என்ற ஐயமே
இங்கு தலைதூக்குகிறது?
"போங்கடா..
நீங்களும் உங்கள் தமிழ்ப்பற்றும்!
"மாட்டாடு மாட்டாடு மல்லிகே"
என்று
அங்கம் மகிழ்ந்து பாடியவர்க்கு
தங்க அரியாசனமும்
செங்கோலும் வெண்கொற்றக்குடையும்
சமர்ப்பிக்க‌
மந்தை மந்தையாய்
அந்த வசூல் சந்தைக்கு
வரிந்து கட்டிக்கொண்டிருப்பவர்கள் தானே
நீங்கள்.
மாற்றான் தோட்டத்து மல்லிகையை
நாமே மணம் முகர்ந்து பாராட்டுவது
நம் பண்பு தான்.
அதற்காக
அப்பூக்கள் நம் காதில்வைக்கப்படும்
தந்திரம் கூட புரியாமல் இருந்தால்
என்ன செய்வது?
அதற்காக‌
போர்வாளை எடடா என்று
அடடா புடடா என்பதில்
அர்த்தங்கள் ஏதும் இல்லை.
நம் காவிரியின் உயிர் ஓட்டத்தை
திசை திருப்ப
தினம் தினம் இந்த ஊடகங்கள்
கெட்டி மேளம் தட்டிக்கொண்டு தான்
இருக்கின்றன.
போகட்டும்
இந்த இரும்புக்குதிரைகள்
நேர்த்தடத்தில் ஓடட்டும்
என்ற கோரிக்கையுடன்
நம் பயணம் தொடர்வதே அறிவுடைமை!

=====================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக