ஆடு மாடு வெட்டறது..
தீபம் ஏத்தறது
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு
தார் பூசி
சரஸ்வதி தேவி
மற்றும் காளிகளின் வாழ்த்துக்கு
அரிதாரம் பூசி
அடி தடி அரசியலை
"ஆஃப்" ஆகாமல் வைத்திருப்பது...
சாதி வர்ணக்
கோட்டை கொத்தளங்களையும்
கொடி ஏற்றி
வெறியேற்றி வைத்திருப்பது.
சமுதாயம் கண்விழிக்கவே கூடாது
என்பதற்காக
கல் அடுக்கி செதுக்கி
பொம்மைகளையும் வடித்து
கோபுரங்கள் உயர்த்திக்கட்டி
கும்பிட்டுக்கொண்டே இருப்பது.
தமிழா!
இது தான்
உன் உலக மானிடமா?
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றானே
அவன் மூச்சு எங்கே சிறகடித்துப்போனது?
அறிவின் உச்சம் எங்கோ
எட்டாத உயரங்கள்
தாவிக்கொண்டிருக்கும் போது
மூடத்தனத்தின்
கிடு கிடு பள்ளங்களில்
வீழ்ந்து கிடப்பதா "மனிதம்?"
உலகின் முக்கால் வாசி மக்களுக்கு
உணவு உடை உறைவிடம்
என்று ஏதும் இல்லாமல் இருக்கும்
நிலை கண்டும்
மரத்துப்போய் மடிந்து கிடக்கும்
நிலையில் மக்கிக்கிடக்கிறதா
உலக சமுதாய ஜனநாயம்?
எப்படியோ கிடக்கிறது..விடுங்கள்..
சிந்தனைகள் எழுச்சியுற
வலுவின்றி
அதோ குத்தாட்டம் போட
கொத்து கொத்தாக
வக்கரித்துப்போய்க்கொண்டிக்கும்
சைகோ டெமோக்ராஃபிக்
நிழற்சித்திரங்களின்
இருட்டு நிழற்காடுகளின்
மின்னட்டாம்பூச்சிகளா நீங்கள்?
_________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக