சிலேட்டுப்பலகை.....4
------------------------------------------------------
erode thamizhanban
எத்தனையோ
தூக்கங்ளோடு பேசினாய்
எத்தனையோ
விழிப்புகளிடம் வாய்மூடி
அமைதி காத்தாய்
எத்தனையோ வினாக்களிடம்
பொருத்தமற்ற விடைகளாய்க்
கைகுலுக்கினாய்
உடையணியாச்
சொற்களோடு யாரையும் போய்ச்
சந்திப்பாயோ?
உடைதேடித்தெருத்தெருவாய்
அலைந்தாய் ஆனால்
ஒருநாளும் உண்மை உன்னோடு
வந்தததுண்டோ?
பாசாங்கை மினுமினுப்பை
உன் வரவேற்பு வாசலிலேநீ எதற்கு
நிறுத்தவேண்டும்?
வந்தவரும் போனவரும்
தமக்கேற்ப உனைஎதற்கு அடித்தடித்துத்
திருத்தவேண்டும்?
ஒருமுறைதான் வாழ்க்கை
ஒத்திகையில் இதைநடத்தி முடித்துவிட்டால்
அரங்கேற்ற மேடை உனக்காக
எங்கிருக்கும் சொல்வாய்!
ஒத்திகையே நாடகமோ?-தலைப்பு
26-02-2025 பிற்பகல்2-10
-----------------------------------------------------------------------
ஒரு காசும்
செலவுசெய்யாமல் உனக்குக்
கிடைத்தது
ஒப்பற்ற ஒன்று;ஒன்றே ஒன்று.
அதுதான் இவ்வுலக வாழ்க்கை!
பரிந்துரை பெற்றும்
யாருடையஅலுவலகத்திற்கு
விண்ணப்பம் போட்டுக்காத்திருந்தும்
இப்பிறவி
உனக்குக் கிடைக்கவில்லை.
முழு இலவயம்
உனக்கான உடம்பு
ஒரு சுண்டு விரலைக்கூட
உன்னையே
செய்துகொள்ளுமாறு யாரும்
விட்டுவிடவில்லை.
வாழ்க்கைக்குள் நுழைய உன் மூச்சு
எவரிடமும் சாவி கேட்டுக்
கெஞ்சவில்லை.
கள்ளச் சாவி தருகிறோம் என்று
முன்வவில்லை எவரும்.
அரசாங்கமோ
தனிமுதலாளிகளோ நீ கேட்டுக்
கொடுத்ததல்ல
தூக்கமும் விழிப்பும்.
நீ
தூங்கினால் கனவுகளை அழைத்து
விளையாடலாம்.
விழித்தால் நனவுகளை
நீ விரும்பியபடி வடிவமைத்துச்
செயற்படுத்தலாம்.
நடந்தால் நாலுபேர் வீட்டில்
விளக்கெரியலாம்
பேசினால்
தடுமாறும் மானுடத்துக்குத்
தடங்கள் திறக்கலாம்
சிரித்தால்
சின்னஞ்சிறியவர்கள் கூடைகளில்
புன்னகை நிரம்பலாம்
அன்பை
நீ விரும்பும் அளவு நீயே
சம்பாதிக்கலாம்
நீயே செலவிடலாம்.
அன்புக்கு
அரசாங்கம் வரிபோட முடியாது.
விலையில்லாத புன்னகையைச்
செலவில்லாமல்
சேதாரம் இல்லாமல்- ஏன்
செய் கூலியில்லாமல்கூட நீயே
செய்யலாம்.அணியலாம்
அணிவிக்கலாம்.
வயதுகள்
உன்னோடு பேசுவதுபோல்
வாழ்க்கை பேசாது
நீயே
தினமும் நலமா? என்று வாழ்க்கையிடம்
நேயம்ததும்பக் கேள்!
வயது
கைகால் வலி காய்ச்சல் இருமல்
பற்றியேபேசும்.
மருந்துப் பெயர்களையே
மந்திரமாக உச்சரித்துக்கொண்டிருக்கும்
வாழ்வுதான்
அன்பு குறைந்ததுபற்றி
அருள் விலகியதுபற்றி
பொறுமை மங்கியதுபற்றிப்
பட்டியல்போடும்.
வாழ்வுதான்
உனக்குள் இருக்கும் அறத்துக்குப்
புத்தரை ஏசுவை நபியை
வடலூர் வள்ளலாரை நினைவுபடுத்திக்
கொண்டே இருக்கும்.
வயது
நீ வளர்க்காமல் தானேயாக
வளரும்
வாழ்க்கையை நீதான்
வளர்த்தெடுக்கவேண்டும்!
வயதும் வாழ்வும்-தலைப்பு
24-02-2025 மாலை 6-20
________________________________________________________________________
வயதும் வாழ்வும்
--------------------------------------------
வயது மரங்களின் "போன்சாய்"
உன் ஒருசொட்டு
சிந்தனையில்
உன் எதிரே உன் மூச்சுகளின்
கிளை அடர்த்தியில்
இலைப் பின்னலுக்குள்
உன்னோடு
கண்ணா மூச்சி விளையாடும்.
உன் வண்ண வண்ணச் சட்டைகளின்
பட்டாம்பூச்சிகளின்
சிறகுத்துடிப்புகளோடு
சிலிர்த்துக்கொள்ளும் .
அந்த மின்னல் சாட்டை வலியில்
காதல் தேன் துளிர்க்குக்ம்..
எந்த வீடு?எந்த முகம்?
எந்த வாய்க்கங்கரை?
எந்த குடத்துடன்
நிலவுகள் முகம் கவிழ்க்கும்?
ஊகும்.... தெரியவில்லை?
வாழ்க்கையை
எச்சமிட்டு செல்லும் வெறும்
காக்கைகளா நாம்?
அதுவும் தெரியவில்லை.
ஒரு நாள்
அந்த மின்கம்பத்துக் கம்பியின்
"ஸ்பரிசத்தில்"
தொங்கிய பொது..
கீழே
கருங்கடலின் குரற்கடல்களாய்..
காக்கைகள்.
---------------------------------------------------------------
சொற்கீரன்.
வயதும் வாழ்வும் பற்றி
24.02.2025 ல்
ஈரோடு தமிழன்பன் அவர்கள்
எழுதிய கவிதை யின்
கவிதை இது.