ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

பூனைக்கு மணி கட்டுவது யார்?

 பூனைக்கு மணி கட்டுவது யார்?

=================================================ருத்ரா


இந்த கேள்வி

வரலாற்றுத்த‌டங்களின் 

பல நூற்றாண்டுகளின் 

பல திருப்புமுனைகளில்

கரை தட்டி நின்று

கரை உடைத்த 

வெள்ளமாகி இருக்கிறது.

எப்படியோ யாராலோ

அந்த அபாய ஒலி எழுப்பப்பட்டு

யுகப்பிரளயங்கள் 

நிகழ்ந்திருக்கின்றன.

வெள்ளைய ஆதிக்கம் 

நம்மை விட்டு நீங்கி

நொறுங்கி விழ

எத்தனை எத்தனை உயிர்கள்

நம் மூவர்ணத்தீக்காட்டுள் விழுந்து

உயிர்ச்சுடர் ஏற்றி இருக்க்கிறது?

இப்போதும் 

நம் ஜனநாயகத்தின் ஆணிவேரை

கருவறுக்க‌

கரையான் கூட்டங்கள்

மொய்த்திருக்கின்றன.

மானுடம் எனும் மாணிக்க ஒளியை

சாதி மத மத்தாப்பு நெருப்பு கொண்டு

கொளுத்தப் பார்க்கின்றன.

தீனமான எதிர்ப்புக்குரல்களை

ஆட்சி எனும்

ராட்சச எந்திரங்களால்

கூழாக்கத்துடிக்கின்றன.

பெரும்பான்மையினர் 

சிறுபான்மையிலும் சிறுபான்மையாக‌

உள்ள 

சுயநலக்கும்பல்களால்‌

சிதறடிக்கபடும்

"பஞ்ச தந்திர"க்கதைகள்

அரங்கேற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

நம் தேசப்பிதாவைத் தின்ற‌

குண்டுகளுக்கு

கும்பாபிஷேகம் நடத்தும்

சிலந்திவலைகளே

நம் தேசப்படத்தைக் கவ்விப்பிடித்திருக்கின்றன.

மதச்சார்பற்ற நம் அரசியல் சாசனத்தையே

அவர்கள் அமர்த்தலான‌

மான் தோல் ஆசனமாக்கி அமர்ந்து

அடிநிலை மக்களின் வாழ்வுக்குவியலையே

ஆகுதியாக்கி

யாகம் நடத்துகிறார்கள்.

அந்த புகைமூட்டத்திலேயே

கணிப்பொறியை

அதன் கருத்தறியாமல் 

தடவி தடவி இந்த மக்கள்

தடம் புரண்டு வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

இன்னும்

அந்த கேள்வி கூர் நகங்களில்

ரத்தம் சொட்ட சொட்ட 

கேட்கப்படுகிறது.

"பூனைக்கு மணி கட்டுவது யார்?"

=======================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக