திங்கள், 17 ஆகஸ்ட், 2020

எஸ்பிபி

 எஸ்பிபி

‍‍‍‍‍‍_____________________ருத்ரா


இசைக்கடலே!

உன்னில் ஆர்ப்பரித்த அலைகள்

எல்லாம்

ராகங்களின் குமிழிகளாய்

எங்கள் நுரையீரலுக்குள் தான்

உலா வருகின்றன.

கொரோனா அரக்கனே

உனக்கு நுரையீரல் தானே 

வேண்டும்.

எங்கள் நுரையீரலைத்தின்று

பசியாறு.

அவன் இசை இன்னுமா

உன்னை 

அந்த கள்ளிப்பூவிலிருந்து

ரோஜாக்களாய்

பரிணாமம் அடையச்செய்யவில்லை.

"என்ன சத்தம் இந்த நேரம்"

என்ற அவன் பாட்டு

மௌனத்தை மட்டும் பிசையவில்லை.

அந்த அருவி

அந்த கிளைகள் எல்லாவற்றிலும்

"அவதார்" படத்தின்

அந்த உயிர்க்காட்டின் 

அபூர்வங்களைப்போல‌

தன் குரல் அமுதத்தையல்லவா

பூசி வைத்திருந்தான்.

புயல் காற்றுப் பிழம்பு கூட‌

மூச்சிறைத்து மூச்சிறைத்துப்போய்

தோற்று நின்றது

மூச்சு விடாமல் பாடல் வரிகளை

ஒரே தேன்சொட்டில்

இனிமைக்கடலாக்கினானே

ஒரு பாட்டில்.

அந்த மெல்லிய மூச்சின்

மயில்பீலிகளை

உன் கோர நகங்களால்

கிழித்து விடாதே.

ரீ ஆக்சி ரிபோ நியூக்கிளிக் ஆசிட்

என்று எப்படியாவது

உன் உச்சரிப்பை வைத்துக்கொள்.

ஆனால் 

எங்கள் எஸ்பிபி எனும் உயிரொலியை

எங்களிடையே உலா போக விடு.

அவன் பாடும் இன்ப அதிர்வுகள் முன்

பூகம்பங்கள் கூட‌

பச்சைப்புல்லாய் படுத்துக்கிடக்கும்.

கொரோனா எனும் 

கடவுளே

எத்தனை எத்தனை லட்சம் பேர்களை

குணமாக விட்டு எங்களிடம் 

தந்திருக்கிறாய்.

இவனையும் எங்களுக்கு தந்து விடு.

முட்கிரீடம் தரித்த தெய்வமே.

இவன் இசைக்கிரீடம் மீண்டுவந்து

இந்த உலகத்தை தேன்மழையால்

நனைத்துக்கொள்ளட்டும்.

ஓ!வைரஸ் கடவுளே

இந்த மனிதன் 

எங்கள் கடவுள்களின் கடவுளுக்கெல்லாம்

உள் நின்று உருக்கி

இசையின் உயிர்ப்பானவன்.

அவனை வாழ விடு.

உனக்கு கோடி கோடி நன்றி.

============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக