வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

எங்கள் அன்பான திரு வசந்த குமார் அவர்களே

 எங்கள் அன்பான திரு வசந்த குமார் அவர்களே


கவலைக்கிடம் 

என்ற செய்தியை

விரட்டிக்கொண்டு 

வந்து விட்டதே நீங்கள்

காலமான செய்தி.

காங்கிரஸ் எனும் பேரியக்கத்தினை

வெறும் பேருக்கு ஒரு இயக்கம் 

என்றில்லாமல் 

அதன் நரம்போட்டத்தில்

விறு விறுப்பேற்றிய தீரர் அல்லவா

நீங்கள்.

உங்கள் இழப்பு 

நடைபெற வேண்டிய 

ஒரு குருட்சேத்திரத்தின்

பெருந்தேர் ஒன்று 

அச்சு முறிந்தது போன்ற‌

இழப்பு அல்லவா?

தமிழ் நாடே அறியும் 

அண்ணணின் தமிழ் ஓசைக்கும்

ஆதார சுருதி யாக துணை நின்று

காந்தியம் வளர்த்தவர் நீங்கள்.

பொருட்களைத்தான் 

தவணையில் விற்றீர்கள்

உங்கள் இதயத்தை

இயக்கத்துக்கு மொத்த வியாபாரம்

செய்துவிட்டீர்களே!

கன்னியாகுமரி முனையில்

சூரியனும் சந்திரனும் ஒரு சேரத்

தோன்றுவது போல்

உங்கள் வாழ்கையும் அரசியலும்

ஒரே முனையில் நின்று

காமராஜர் கனவு நோக்கிய‌

பயணத்தை நீங்கள் 

தவற விட்டதில்லையே.

மீண்டு வருவீர்கள் என்று...

இந்த வரியை முடிக்கும் முன்

கொரோனாவின்

கொடும் நாக்கு வாரிச்சுருட்டிக்கொண்டதே!

நேரு அவர்களின்

புன்னகை ரோஜாவைத்தான்

டி.வி காட்சியில்

உங்கள் முகம் தனில் கண்டுநின்றோம்.

காந்தியத்தின் பூச்செண்டே!

மீண்டும் அந்த சாதி மத பேதமற்ற‌

யுகம் பூக்க‌

எங்களிடையே 

ஒரு விசையாகி நிற்பாய்!

அதன் திசையாகியும் நிற்பாய்!

வாழ்க உங்கள் புகழ்!


==============================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக