உன் விடியலுக்கு "அகர முதல"
____________________________________ருத்ரா
சுதந்திர தினம்
மரியாதை குண்டுகளை
உமிழ்ந்து விட்டு
அந்தக் கொடியுடன்
சுருண்டு மடங்கித்
தூங்கப்போய் விட்டது.
என் அருமை தமிழ் மக்களே
சுதந்திரம் இன்னும்
உங்களுக்கு கண்விழிக்க வில்லை
என்று
எப்போதாவது புரிந்து கொண்டிருக்கிறீர்களா?
நீங்கள் கண் விழிக்க
உங்கள இமைகளை விரிக்கும்போதெல்லாம்
அந்த ஆதிக்க மொழியின்
பாறாங்கல் உங்களை நசுக்கிக்கொண்டு தான்
இருக்கிறது.
உங்கள் குழந்தகளின் பேரக்குழந்தைகளின்
இனிய பிறந்த நாள் விழாக்களிலும்
"ஜென்ம நட்சத்திர" அர்ச்சனைகளாக
அந்த ஆதிக்க மொழியின் காலடியில் தான்
போய் விழுந்து கிடக்கப்போகிறது.
இன்னும் இன்னும்
நீங்கள் புது மனைகள் புகும்போது
உன் தமிழின் பூரிப்பும் மனப்பொங்கலும்
அவர்களின் கோமியத்திலும்
அவர்களின்
அந்த இரைச்சல் புகை மூட்டங்களிலும்
ஆழப்புதைக்கப்பட்டு விடுகிறது.
மீண்டும் மீண்டும்
ஆயுத பூஜை அது இது என்று
அந்த வேதாளங்களின்
வாய்க்குள் எப்போதுமே விழுந்து
கிடக்கப்போகிறீர்கள்.
தீபாவளி எனும் அவர்களின்
எந்திரன் ஆன நரகாசுரன்
உங்களையே அசுரன் ஆக்கி
உங்கள் மீதே பட்டாசுகொளுத்திப்போட்டு
ஆனந்தக்கூத்து ஆடப்போகிறான்.
வாராது வந்த மாமணி போல்
"கொரோனா" வந்து கொஞ்சம்
திரை போட்டு மறைத்துக்கொள்ள வந்திருக்கிறது.
ஓ என் அருமை தமிழ் மக்களே
இந்த "பண்டிகை" உற்சாகங்களில்
அந்த உல்லாச மத்தாப்புகளை
கொளுத்தி மகிழுங்கள்!
அதற்கு இப்போதே
மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள்.
ஆனால் இம்முறையேனும்
அந்த நரகாசுரன் உங்கள் கையிலிருந்து
நம் தமிழ் இன எழுச்சியின்
ராக்கெட்டுகள் சீறிக்கிளம்பட்டும்
அவர்களின் தந்திரக்கோட்டையை
அது தவிடு பொடியாக்கட்டும்.
அதற்கு என் தீபாவளி வாழ்த்துக்கள்.
ஆம் தீபாவளி வாழ்த்துக்கள்.
அவை தீபங்கள் இல்லை
உன் விடியலுக்கு "அகர முதல"
பாடும் இனிய தீப்பொறிகள்.
வாழ்க தமிழ்!
வெல்க தமிழ்!!
====================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக