ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

(வேலன்டைன் டே)


இந்தப்புயலின் பெயர் "இதயம்"
============================================ருத்ரா
(வேலன்டைன் டே)


வானிலை அறிவிப்பாளர்கள்
ஏதாவது பெயர் சூட்டி
புயலை எதிர்கொள்வார்களே
அது போல்
இது ஒரு புயல் "இதயம்"
இதை உண்மையாக மொழிபெயர்த்தால்
"ஹார்மோன்" என்று தான்
சொல்லவேண்டும்.
வயதுகள்
பதினாறு எனும்
அக்கினி ஆற்றுக்குள்
நடத்தும் நவீன "ஜலக்கிரீடை"
பட்டாம்பூச்சிகள்..
மின்னற்காடுகள்..
மயிற்பீலி வருடல்கள்..
ரோஜா இதழ்களில்
பதியம் ஆகும் பிருந்தாவனங்கள்.
கைபேசிக்காட்டுக்குள்
சிரித்துப்பேசும்
சந்திரோதயங்கள்.
பெரியவர்களின் நமைச்சல்களும்
பின்னோக்கி பார்த்து
"மெல்ல நகும்"
ரசாயனத்துடிப்புகள்.
ராணுவ மிடுக்கில்
சல்யூட் வைக்கத்தேவையில்லாத‌
"ஒரு தேசியக்கொடியேற்றம்"
இந்த "வேலன்டைன் டே"
இளம்பிஞ்சுகளே!
கவனம்...
சனாதனக் காண்டாமிருகங்கள்
சவட்டிப்போகக்
காத்திருக்கும்!
இளம்பூக்களே
சம்ப்ரதாய வெறியின்
கோரைப்பற்களும்
சாதி மத நச்சுப்பாம்புகளும்
உங்களை குறிவைப்பதையும்
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் காதல் வரலாற்று ஏடுகளில்.
காளிதாசர்களையும்
வித விதமாய் காதல் லீலைகள்
நடத்திய‌
புராணங்களையும்
இவர்கள் பரண்களில் வீசி
ஒளித்து வைக்கும் நாள் இது!
காதல் வாழ்க!
காதல் வெல்க!

=========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக