தட்டுகளுக்கு தட்டுப்பாடு.
=============================================ருத்ரா
தீர்ப்பு வந்து விட்டது.
ஐநூறு பக்கத்தில் வந்தால் என்ன?
ஒரு வரியில் வந்தால் என்ன?
"தண்ணீரா வேண்டும் தண்ணீர்?
ஒரு சொட்டு கூட கிடையாது"
வேண்டுமானால்
நீங்களே..பெய்து கொண்டு
குடித்துக்கொள்ளுங்கள்
என்று
கர்ஜித்தவர்களின்
பூதக்கண்ணாடி முகங்கள் தான்
மிக உச்சமாய்
நிழல் காட்டுகின்றன.
மிச்சமானது
நமக்கு கண்ணீரும் கவலைகளும் தான்.
தேர்தல் எனும் பட்டாக்கத்தியில்
வெட்டுண்ட தலைகளாய்
இங்கு
நியாயங்களும் தர்மங்களும்!
வாக்கு வங்கிகள்
என்றால்
நாட்டின் மிகப்பெரிய
நீதி மன்றங்களும் கூடவா
அரசாங்க எந்திரத்தின்
ஜோல்னாப்பைக்குள் அடங்கிப்போகும்?
மத்தியில் நின்று ஆளவேண்டிய
மத்திய அரசு ஓரம் சாயலாமா?
காலூன்ற முடியாது என்று
எவர் சொன்னார்?
எங்கள் முதுகுகள்
வரிசையாய் வளைந்து கிடக்கும்.
வாருங்கள்!
தாராளமாய் நீங்கள் அவற்றில்
நடந்து வாருங்கள்!
தமிழர்களே
இனி
மொழி எதற்கு?
இனம் எதற்கு?
நாடு எதற்கு?
மொத்தமாய் இப்போது
நீங்கள் இருப்பதே
ஒரு அகதி முகாம் தான்!
நாளைக்கே
ஆத்மீகம் தழைக்க
சமஸ்கிருதத்தில்
இதற்கு இவர்கள் இப்படி
நாமகரணம் செய்யலாம்.
"பிக்ஷா தேசம்" என்று.
கங்கையை சுத்தப்படுத்துகிறேன்
என்று சொல்பவர்களே!
காவிரியும்
உங்கள் புராணப்படி
கங்கைதானே!
இதை மட்டும் சாக்கடையாக்கும்
அசுத்த அரசியலை வைத்துக்கொண்டு
என்ன ஜனநாயகம்
காக்கப்போகிறீர்கள்?
எதுக்கு தட்டுப்பாடு வந்தாலும் வரலாம்.
நியாயத்தின்
சரியான தராசுத்
தட்டுகளுக்கு இங்கே
தட்டுப்பாடு வரலாமா?
==================================================
2 கருத்துகள்:
அருமையாக சொன்னீர்கள்
"நெஞ்சு பொறுக்குதில்லையே..இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்..."
கருத்துரையிடுக