சனி, 3 பிப்ரவரி, 2018

பட்ஜெட்

பட்ஜெட்
======================================ருத்ரா

வழக்கமான நெல்லிக்காய் மூட்டைதான்.
அவிழ்த்து விட்டு
ஒவ்வொரு நெல்லிக்காயோடும்
புள்ளிவிவர கோலி விளையாட்டு
ஆடிக்கொண்டிருக்கும் திருவிழா உல்லாசங்களுக்கு
அந்த பட்ஜெட் காகிதங்களே தோரணங்கள்!
சாக்குகளில் காகிதப்பணம்.
கைக்குள் கூட அடங்காத நுகர்வோர் பண்டங்கள்.
இரண்டும் சந்திக்கும்
புள்ளி இங்கு தெரிவதே இல்லை.
பொருளாதார வல்லுனர்களின்
"டாய்சரஸ்" விளையாட்டுப்பொம்மைகள் தான்
பட்ஜெட்டுகள் என்பது.
அரசாங்கம் தன் முகங்களை
ஒளித்து விளையாடும்
கண்ணாமூச்சி இருட்டு மூலைகளே இவை.
இன்னும் கோடிக்கணக்கான‌
குடிகளின்
உணவு உடை உறைவிடம்
எனும் மூன்று நட்சத்திரங்கள்
எங்கோ தொலைந்து போன ஒரு
வானத்தில் இருப்பதாக‌
ஆண்டுகள் தோறும் சொல்வார்கள்.
திட்டங்களும்
நூற்றுக்கணக்கான "கால மைல்களை"த்தாண்டிய‌
அடர்ந்த காட்டுக்குள் இருக்கும்.
குடிசைகள் நடுவே
பகாசுரப்பணங்களின்
பளிங்கு மாளிகைகள் மட்டும்
எந்த சட்டமும் இல்லாமல் திட்டமும் இல்லாமல்
உயரம் உயரமாய் முளைத்துக்கொண்டே இருக்கும்.
இவற்றோடு ஒரு சுரண்டல் வியாதியின்
சொரி பிடித்த சிரங்கு மொய்த்த‌
நம் கோட்பாடுகள்
ரத யாத்திரைகளாய் தூசிகிளப்பி
உலா போகின்றன.
ஜனநாயகத்தின்
வாக்குப்பெட்டியும்
கணினிகளாய்
போகமுடியாத தூரங்களுக்கு கூட‌
கழுதைகளில் பயணிக்கின்றன.
போகட்டும்!
புனிதமான வாக்குசீட்டுகளுக்கு
மஞ்சள் குங்குமம் வைத்து
கும்பிடுவோம் வாருங்கள்.

==============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக