வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

காலடியில் கேள்விகள்

காலடியில் கேள்விகள்
===================================================ருத்ரா

வாக்காளப்பெருமக்களே.
இப்படி அழைக்கும்போது
எங்காவது ஒரு இடத்தில்
தேர்தல்
நடந்து கொண்டு தான் இருக்கும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர் யார்?
தேர்ந்தெடுப்பவர் யார்?
எதற்கு தேர்தல்?
எப்படி தேர்தல்?
இந்த கேள்விகள்
எழுபது வருடங்களாக‌
ஊஞ்சல்
ஆடிக்கொண்டே இருக்கின்றன.
பழைய நூற்றாண்டுகளில்
சர்வாதிகாரம்
ராஜ மகுடங்களில்
கூடு கட்டிக்கொண்டிருந்தன.
வாட்களும் ஈட்டிகளும்
கொய்த தலைகள் பந்தாடப்படுவதே
புனித "அரசாங்கம்" எனப்பட்டன.
அறமொழிகள்
ஆயிரம் ஆயிரம் ஓதப்பட்ட போதும்
மனிதன்
மிருகங்களுக்குள் தான்
கிடந்தான்.
மனிதனைப்படர்ந்திருந்த அச்சம்
மனித மூளைக்குள்
ஏற்படுத்திய "உருவெளிப்படலங்களே"
கடவுள்கள் ஆயின.
வலுத்தவன் இளைத்தவனை
ஆட்சி செய்தான்.
மூளை வலுத்தவனோ
நரிகள் போல்
ஆட்சியாளர்களின்
அந்தரங்கம் புகுந்து கொண்டான்.
அவன் வகுத்த வேறுபாடுகளை வைத்து
மனிதனை மனிதனேஆளும் அமைப்பையே
அரசாங்கம் ஆக்கிக்கொண்டான்.
தனிமனிதன்
மக்களை
தன் பொன்னாடைகளாக போர்த்திக்கொண்டான்.
மக்கள் கந்தல்களாக கிழிந்து கிடந்த போதும்
ஆளுபவன்
மக்களைப் பயமுறுத்தியே
ராஜ்ய பரப்பையும் விரிவாக்கிக்கொண்டான்.
மதம்
சாதிகள்
சம்பிரதாயங்கள்
எனும் பொறி வைத்து
மக்கள் எலிகளையெல்லாம்
பிடித்து நசுக்கினான்
ஆளுபவன்.

போகட்டும்.
வரலாற்றுப்பக்கங்கள்
சர சரவென்று திருப்பப்பட்டன.
நுண்மை புரிந்து கொண்ட மனிதர்கள்
ஒன்று கூடி
அந்த ராஜமகுடங்களை
கழற்றி எறிந்தார்கள்.
இன்று எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்
என்று
ஒரு ஜனநாயகத்தை
தேர் கட்டி இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதே நரிகள்
அதே மகுடங்களை
மீண்டும் உயிர்ப்பிக்கின்றன.
அதே
மதம்
கடவுள்
சாதி
சம்பிரதாயங்களை
பொறியாக்கி
அதாவது
கணினிப்பொறியாக்கி
இந்த வாக்கு எலிகளுக்கு ஏற்ற‌
மசால் வடைகளை
உள்ளே கிராஃபிக்ஸ் செய்து
தந்திரங்கள் செய்கின்றன.
ஆண்டவன் சொல்றான்
நாமெல்லாம் கேட்கணும்
என்கின்ற‌
வாக்காளர்களே
இன்னும்
வரிசை கோர்க்கிறார்கள்.
பாவம் புண்ணியம்
ஆத்மா சொர்க்கலோகம்ம் நரகம்
நான்கு வர்ண சநாதனம்
மற்றும்
அம்புலிமாமா புராணங்கள் எல்லாம்
அலங்கார வண்டிகளாய்
இவர்களது சுதந்திர ஊர்வலத்தில்
ஊர்ந்து கொண்டிருக்கின்றன.
இன்னும்
இருபது ஆண்டுகளில்
நம் வறுமைக்கோடுகள்
உடைபட்டுப்போகும்
என்று
எத்தனையோ இருபது ஆண்டுகளாய்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
புதிது புதிதாக‌
மைக் பிடித்து
உங்களுக்கு புதிய கோட்டையின் கதவுகளை
திறந்து வைக்கப்போவதாய்
சில காக்காய் கூட்டங்களும் வருகின்றன.
ஓ!
அன்பான வாக்காளர்களே
உங்கள் நிரந்த இருப்பிடம்
இந்த கியூ வரிசை தானா?
வரிசையில் நின்றுகொண்டாவது
யோசித்துக்கொண்டிருங்கள்.
சிற்றெரும்பு வரிசைகள்
தடங்கலாய் விழும் இடைஞ்சல்களை
எப்படி
தங்கள் வெற்றிப்பயணம் ஆக்கி
முன்னேறுகின்றன
என்பதை பார்த்தாவது
உங்கள் காத்திருப்பு வரிசையில்
கொஞ்சம் கனல் மூளும் கனவுகள்
கருவுயிர்க்குமா என்று
யோசியுங்கள்.
ஓட்டுகள் வெறும் கற்கள் அல்ல.
உங்கள் கல்லறையைக்கட்டவா
அதை சுமக்க இப்படி
வரிசை கட்டுகிறீர்கள்?
நகரும் காலடிகளே!
உங்கள் காலடியிலேயே
கிடக்கின்றன இக்கேள்விகள்!

================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக