புதன், 28 பிப்ரவரி, 2018

ஜெயேந்திரர்

ஜெயேந்திரர்
==========================================ருத்ரா

இவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
சுருதிகளை நெட்டுரு போடுவதால்
ஜன சங்கத்துள்
சுருண்டு கிடக்கும் அந்த‌
பிரம்மத்தை எப்படி தரிசிக்க முடியும்?
வேள்விக்குள் வேள்வியாக‌
வளர்த்த முதல் கேள்வியின்
வெப்பம் தாங்காமல்
"ஜனகல்யாண்" என்றை
அமைப்பை விதையூன்றிய‌
பெருந்தகை இவர்!
"புதுப்பெரியவா"
என்று
ஒலியிறுதியில்
உதடு தொட்டு எச்சில் படுத்தாமல்
இவரை
வெகு மரியாதையாய்
அழைத்தார்கள்  பிராமணர்கள்.
இந்து மதம்
ஒரு "இந்து மகா சமுத்திரமா?"
இல்லை
நான்கு வர்ணத்துள்
முதல் வர்ண‌
வெள்ளிக்குடுக்கைக்குள்
அலை அடிப்பதா?
ஆதி சங்கரரின்
விவேக சூடாமணி
பிரம்மம்
தன் க‌ண்ணாடி பிம்பத்தை
நமக்கு காட்டுவதே "மாயை" என்கிறது.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
ஒன்றுக்கொன்று ஆபாசம்.
அதனால் தான்
அத்வைதம் அத்வைதம் என்கிறார்கள்.
நாய் மாமிசம் சாப்பிடுபவனும்
தயிர்ச்சாதம் சாப்பிடுபவனும்
அந்த ஒரே நரம்பு ஓட்டத்தில் தான்
பிரம்மத்தை துடிக்கிறார்கள்.
இதில்
ஐ ஐ டிக்குள் பாடப்படும்
கணபதி ஸ்லோகம் தான்
எல்லாம் என்று
"சாதி"ப்பது
எந்த வகையான சாதி?
மகா சமாதி அடைந்த
துறவியின்
சாகாத கேள்வியும்
இதுவாகத் தான் இருக்கும்
என்பதில் நமக்கெல்லாம்
ஐயம் இல்லை.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி

==================================================


மயிலு

மயிலு
=========================================ருத்ரா


பட்டிக்காட்டு புழுதி மண் துளி
ஒவ்வொன்றும்
வைரப்பொடியாய் ஆனது ஒரு நாள்.
அந்த "சப்பாணியும்" மயிலுவும்"
திரைப்பட இலக்கியத்தில்
ஒரு புதிய மைல்கல் நட்டுவைத்தனர்.
கிராமத்துக்கட்டப்பஞ்சாயத்து
நம் ஜனநாயகத்தின்
வெறும்
சமுக்காளம் சொம்பு நாட்டாமை
ஃபார்முலா மட்டும் அல்ல.
நம் நாடி நரம்புகளின்
ஆல விழுதுகள் ஊஞ்சல் ஆடும்
வடிவம்.
இந்தப்பின்னணியில்
காதலின் கிராமத்து மின்னலை
ஜூஸ் பிழிந்து கொடுத்தவர் அல்லவா
ஸ்ரீ தேவி!
அந்த அகன்ற விழிகளும்
சிற்ப உணர்வு துடிக்கும்...
அந்த மூக்குத்திகள் கூட‌
பேசும்..
அழகிய மூக்கும்
நடித்துக்கொடுத்த‌
காவியம் மறக்கவொண்ணாதன.
பம்பாய் மார்க்கெட்
அவரது மூக்கை மாற்றி
முகத்தையும் மாற்றிய போதும்
நடிப்பு சிலிர்க்கும் அவர் சாதனைகள்
மறக்க முடியாதவை.
இன்று குளியல் தொட்டியில்
அவரது முற்றுப்புள்ளி
விழுந்த பின்
தொடரும் புள்ளிகளில் கூட‌
கல கல வென்று
முத்துக்கள் உதிரும்
அவரது சிரிப்பொலி
இந்தியாவின் எல்லா மண் வாசனையிலும்
இதயம் வருடுகிறது.
மூன்று முடிச்சுகளில்
இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கும்
இடையில் ஒரு
திடுக் கதையை
அற்புதமாய் காட்டி அசத்தினார்.
சிவப்பு ரோஜாவில்
அவர் திகில் குரலின் அலறலில்
தியேட்டருக்குள்
ஏழுக்கும் மேல்
ரிக்டர் ஸ்கேலில் பூகம்பம்.
மூன்றாம் பிறையில்
அந்த செல்ல பப்பியுடன்
இன்னொரு பொமரேனியன் போல்
மூசு மூசுவென்று கொஞ்சுவதும்
கடைசியில் அந்த ரயில் காட்சியில்
கமலின் குரங்கு சேட்டைகளைக்கண்டு
கல்லாய்ப்போன ஒரு உணர்ச்சியை
மரப்பாச்சி சிரிப்பாய்
மத்தாப்பு வெளிச்சம் காட்டுவதும்
நம் நெஞ்சை பிசைகிறது.
அவரது
தென்னிந்திய படங்கள்
"மருதாணி"ச்சித்திரங்கள் என்றால்
வட இந்தியப்படங்கள்
கலை மிளிரும்
மெகந்திப்பிழியல்கள்.
இறுதி ஊர்வலத்தில்
அந்த பெட்டகத்தில் இருந்தது
அவர் உடல் அல்ல!
அவை யாவும் நமக்கு
கலையின் அமரத்துவம் காட்டும்
"பிலிம் சுருள்"கள்.
அதில்
இன்னும்
அவர் இதயம்
சூடாய் துடிக்கிறது
அதில் நம்
பழங்கனவுகள்
உயிர்த்து உயிர்த்து
ஆனால்
நம் கண்ணீரை
உதிர்த்து உதிர்த்து
செல்கின்றன.

============================================================

சனி, 17 பிப்ரவரி, 2018

காவேரி


தட்டுகளுக்கு தட்டுப்பாடு.
=============================================ருத்ரா

தீர்ப்பு வந்து விட்டது.
ஐநூறு பக்கத்தில் வந்தால் என்ன?
ஒரு வரியில் வந்தால் என்ன?
"தண்ணீரா வேண்டும் தண்ணீர்?
ஒரு சொட்டு கூட கிடையாது"
வேண்டுமானால்
நீங்களே..பெய்து கொண்டு
குடித்துக்கொள்ளுங்கள்
என்று
கர்ஜித்தவர்களின்
பூதக்கண்ணாடி முகங்கள் தான்
மிக உச்சமாய்
நிழல் காட்டுகின்றன.
மிச்சமானது
நமக்கு கண்ணீரும் கவலைகளும் தான்.


தேர்தல் எனும் பட்டாக்கத்தியில்
வெட்டுண்ட தலைகளாய்
இங்கு
நியாயங்களும் தர்மங்களும்!
வாக்கு வங்கிகள்
என்றால்
நாட்டின் மிகப்பெரிய‌
நீதி மன்றங்களும் கூடவா
அரசாங்க எந்திரத்தின்
ஜோல்னாப்பைக்குள் அடங்கிப்போகும்?
மத்தியில் நின்று ஆளவேண்டிய
மத்திய அரசு ஓரம் சாயலாமா?

காலூன்ற முடியாது என்று
எவர் சொன்னார்?
எங்கள் முதுகுகள்
வரிசையாய் வளைந்து கிடக்கும்.
வாருங்கள்!
தாராளமாய் நீங்கள் அவற்றில்
நடந்து வாருங்கள்!

தமிழர்களே
இனி
மொழி எதற்கு?
இனம் எதற்கு?
நாடு எதற்கு?
மொத்தமாய் இப்போது
நீங்கள் இருப்பதே
ஒரு அகதி முகாம் தான்!
நாளைக்கே
ஆத்மீகம் தழைக்க‌
சமஸ்கிருதத்தில்
இதற்கு இவர்கள் இப்படி
நாமகரணம் செய்யலாம்.
"பிக்ஷா தேசம்" என்று.

கங்கையை சுத்தப்படுத்துகிறேன்
என்று சொல்பவர்களே!
காவிரியும்
உங்கள் புராணப்படி
கங்கைதானே!
இதை மட்டும் சாக்கடையாக்கும்
அசுத்த அரசியலை வைத்துக்கொண்டு
என்ன ஜனநாயகம்
காக்கப்போகிறீர்கள்?

எதுக்கு தட்டுப்பாடு வந்தாலும் வரலாம்.
நியாயத்தின்
சரியான தராசுத்
தட்டுகளுக்கு இங்கே
தட்டுப்பாடு வரலாமா?

==================================================

வியாழன், 15 பிப்ரவரி, 2018

கமல் அவர்களே ...

கமல் அவர்களே ...
=========================================ருத்ரா

ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
மா மனிதர் அப்துல் கலாம்
பிறந்த இடத்திலிருந்து
சுடர்ந்து வரப்போகிறது என்று
அரசியல்  ஏட்டாளர்கள்
எழுத்துக்கூட்டி
சோழி
குலுக்கிக்கொண்டிருக்கிறார்களே !
ஒரு மாற்றத்தின் புயல்
கருமையம் கொள்ளுமா?
புயலுக்கு கூட
பெயர் சூட்டியாகி விட்டதே
"நாளை நமதே "என்று .
ஆனால்
"இன்று ரொக்கம் நாளை கடன் "
என்று
கடைகளில் "போர்டு" மாட்டுவது போல்
அல்லவா இருக்கிறது.
ஜனநாயகம் என்றாலே
பெரும்பான்மையின் ஆட்சி
என்பது தானே
அரசியல் பரிணாமத்தின் மலர்ச்சி.
அதைப்பற்றி
யாருமே
இங்கு கவலைப்படவில்லையே !
மத்திய அரசின் "சனாதன"சவுக்கு நுனி
மக்கள் மீது சுரீர் என்று குத்துகிறது.
சமூக நீதிக்கு ரத்தம் கசிகிறது.
நம் தமிழ் எனும்
உயிருக்கோ
ஆழமாய்ப் படுகுழி வெட்டப்படுகிறது.
தமிழின் தொன்மை பற்றிய
சிறந்த ஆராய்ச்சி  முடிவுகள் எல்லாம்
"காயலாங்கடை" எழுத்தாளர்களால்
கசாப்பு செய்யப்படுகிறது.
உலக நாயகன் அவர்களே !
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்ற கணியன் பூங்குன்றனின்
உலக மானிட ரோஜாவை
அந்த "ஹார்வர்டு இருக்கையில்"
பதியம் போட
அங்கு முகம் காட்டினீர்கள்.
எங்களுக்கெல்லாம் பெருமை தான்
ஆனாலும் தமிழன்
இந்திய நாட்டு குப்பைத்தொட்டிகளிலா
கிடப்பது?
மோடிஜியின் "தூய்மை இந்தியா" திட்டத்தில்
ரகசியமாய்
தமிழனின் சுயஆட்சிக்குரல்கள் அல்லவா
கூட்டிப்பெருக்கித்தள்ளப்படுகிறது.
உங்கள் பயணம் இன்னும்
சில தினங்களில் துவங்க இருக்கிறது.
"வழியில் ஆறு குறுக்கிடும் போது
பார்த்துக்கொள்ளலாம்"
என்ற பழமொழியை அசைபோட்டுக்கொண்டு
எதோ " பாத யாத்திரை"
கிளம்புவது போல் கிளம்பினீர்கள்
என்றால்
உங்கள் நண்பர் சொன்னது போல்
அப்புறம்
இந்த தமிழ் நாட்டை
ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

=======================================================










எதைப்பற்றி...



எதைப்பற்றி...
=======================================ருத்ரா

எதைப் பற்றி கவலைப்படுவது?
அல்லது எழுதுவது?
இதோ மூச்சிறைக்கும் ஏக்கவிழுதுகளின்
இறகுப்பேனாவில்
கிறுக்கத்துவங்கினேன்.
இளம்பிராயத்தின் இடுப்பு அரைஞாண் கயிறுகள்
திடீரென்று ஒரு நாள்
மின்னல் கயிறுகள் ஆனபோது...

அந்த பூச்சி மயிர்களின்
மீசை வரிசை
திடீரென்று
ஏதோ ஒரு வானத்தின்
ஏதோ ஒரு விண்மீன் கண்ணடிப்புகளில்
பிரளய அலைகளாய்
புரட்டி போடும்போது...

வெறும் கூழ்ப்பூச்சியும் சிறகுமாய்
இருப்பதை
"பட்டாம்பூச்சியாய்" ஆக்கி
தன் பகல்கனவுகளின்
ஹார்மோன் எழுச்சிகளை
அதில் "பிக்காஸோ" ஓவியக்கூடமாக்கி
பிரமை தட்டிப்போய் கிடப்பது...

எதற்கு
இப்படி வார்த்தை ஜாலங்களைக்கொண்டு
என்னைச்சுற்றி
ஒரு "கோக்கூன்"கட்டிக்கொண்டு...

சட்டென்று
புதிய சிறகுகளைக்கொண்டே
பழைய சிறகுகளை முறித்துத் தள்ளிவிட்டு
ஒரே சொல்லில்
உயிரோடு எனக்கு
பளிங்கு சதையில் பொன் குழம்பு ரத்தத்தில்
கல்லறை கட்டிக்கொண்டேன்...

சாக அல்ல‌
சாகாமல் சாவதை
ஒத்திகை பார்க்க..
காதல் என்று....

============================================
22.12.2016 ல் எழுதியது.

ஓஷோ

ஓஷோ
===============================ருத்ரா


அறிவில் கொஞ்சம் கூர்மை தீட்டி
காமக்காடுகளை
பிருந்தாவன தோட்டம் ஆக்கி
கடவுளர்களுக்குப்பதில்
இந்த மனிதர்களை அங்கே
ஓட விட்டு
தன் ரன்னிங்க் கமெண்ட்ரியை
புத்தகங்களாக்கினாலும் போதும்
டாலர்கள் குவியும்.
இவர்களுக்கு
"செக்ஸில் பூஜை"
சில ஆங்கில ஃ பிரேஸ் களுடன்
எழுதிக்காட்டினால் போதும்.
"பெஸ்ட் செல்லர் " வரிசைக்குப் போய்விடும்.
சம்ஸ்கிருத வார்த்தைச்  சிணுங்கலுடன்
சில பத்திகளை
செருகி விட்டால் போதும்
இந்திய அறிவு ஜீவிகளுக்கு
செமத்தீனி தான்.
மறந்தும்
சமுதாய ப்ரக்ஞை
அது இது என்று
இந்த ஞானி
எழுத்துக்களை உருட்ட விடுவதில்லை.
அப்படி எழுதினாலும்
உலகத்திலேயே உயர்ந்த ஞானம்
"தனித்துவம்" தான் என்பார்.
பொது நீதி சம நீதி எனும்
ஆபாசங்களை கலக்கல் ஆகாதென்பார்.
உடற்கலவிகளால்
உயிர் கழுவிக்கொள்ளலாம் என்பார்.
சமுதாய வலைகளை
அறுத்தெறிந்து
"ஆத்மா" என்ற மாய வனம்
புகுந்திடுங்கள் என்பார்.
அழுகிய மதக்கருத்துகளுக்கு
அலங்காரம் செய்வதே
அவர் எழுத்துக்களின் வேலை.
மேட்டுக்குடி மக்களின்
புத்தக அலமாரியை
இந்த குப்பைக்கிடங்குகள் தான்
"இன்டீரியர் டெக்கரேஷன்" என்ற பெயரில்
ரொப்பிக்கொள்கின்றன.
என்ன
உங்கள் மூளைக்காடுகளிலும்
இந்த "சீக்குப்"பிடித்த
மேகக்கூட்டங்கள் தானா?
இந்த வெற்று இலைக்காகிதங்களைத்
தின்று கொழுக்கும்
"புழுக்கூட்டு"மண்டலங்களாய்
தொங்கித் தூங்காதீர்கள்
ஓ! அறிவு ஜீவிகளே!
சமுதாய முரண்களை
அக்கினிச் சிறகுகளின்
இலக்கியங்கள் ஆக்கும்
மறு பக்கம் நோக்கி
கொஞ்சம்  ஊர்ந்து வாருங்கள்.
இந்த "ஃ பேண்டாசி" பலூன்களில்
ஊஞ்சல் ஆடும்
ஏமாற்று வித்தைகள்
போதும்!போதும்!

===============================================

புதன், 14 பிப்ரவரி, 2018

ஜென்

ஜென்

========================================ருத்ரா



ஜென் என்றால் என்ன?

இப்படி கேள்வி கேடபதே ஜென்.

கேள்வியே இல்லாத போது

கேள்வியைத் தேடும் பதில் ஜென்.



கடவுள் பற்றி

தியானம் செய்யும் வகுப்பில்

முதலில் உட்கார்வது கடவுள்.

வகுப்பை துவக்குவது ஜென்.



பிற‌ந்து தான்

வாழ்க்கையை ப‌டிக்க‌ வேண்டும்.

இற‌ந்து தான்

வாழ்க்கைக்கு கோடைவிடுமுறை.



அடுத்த‌வ‌குப்பு துவ‌ங்கும்போது

புத்த‌க‌மும் புதிது.

மாண‌வ‌னும் புதிது.

ஆசிரிய‌ர் ம‌ட்டும் அதே ஜென்.



ஜென் ஒரு புதிர்.

ஜென்னை அவிழ்ப்ப‌தும்

இன்னொரு புதிர்.

ம‌று ஜென்ம‌ம் உண்டு.

அதுவும் இந்த‌ ஜென்ம‌த்தில் தான்

உண்டு.

அதுவும் "ஜென்"ம‌ம் தான்.



ஞான‌ம் ஒவ்வொரு த‌ட‌வையும்

தோலுரிக்கிற‌து.

அதுவும் ஜென்ம‌மே

இந்த‌ ஜென்ம‌த்தின் க‌ருப்பை

அறிவும் சிந்த‌னையும்.



வ‌ழியை மைல்க‌ல்க‌ளில்

சொல்வ‌து புத்தியின் அடையாள‌ம்.

மைல்க‌ல்க‌ளை பிடுங்கியெறிந்து விட்டு

வ‌ழியை தேட‌ச்சொல்வ‌து ஜென்.



க‌ண்க‌ளை மூடுவ‌து அல்ல‌ தியான‌ம்.

க‌ண்க‌ளை திற‌ந்து வைத்து

பார்வையை மூடுவ‌து தியான‌ம்.

காட்சிப்பொருள‌ல்ல‌ ஜென்.

காட்சியின் பொருள் ஜென்.



ம‌னம் ஊசிமுனையில்

க‌ழுவேற்ற‌ப்ப‌டும்போது

ஆகாய‌த்தில் முக‌ம் துடைக்க‌ச் சொல்வ‌து

ஜென்.



ஆசை முத்த‌ங்க‌ளின் ருசி கேட்கும்போது

அங்கு சிக்கி முக்கிக்க‌ல் ஜென்.

தீக்குள் விர‌ல் வைத்து தீண்டி

ந‌ந்த‌ லாலாவை சுவைக்கும்போது

தீயின் லாலி பாப் ஜென்.



ஜென்

எது?

ஜென்

யார்?

ஜென்

எங்கே?

ஜென்

எத‌ற்கு?



ஜென் ஒரு ஜ‌ன்ன‌ல்.

இங்கிருந்து மூட‌ல‌ம் திற‌க்க‌லாம்.

அங்கிருந்து மூட‌லாம் திற‌க்க‌லாம்.

ஆத்திக‌ன் திற‌ந்தால் நாத்திக‌ம் தெரிவான்.

நாத்திக‌ன் திற‌ந்தால் ஆத்திக‌ன் தெரிவான்.



எல்லோரும் பாயை சுருட்டி ம‌ட‌க்கி

எடுத்துக்கொண்டு போவார்க‌ள்.

உட்கார்ந்து தியான‌ம் செய்ய‌.

எல்லோரும் பாயை சுருட்டி ம‌ட‌க்கி

எடுத்துக்கொண்டு வ‌ந்து விடுவார்க‌ள்.



சுருண்டு ம‌ட‌ங்கி விரிந்து

சுருண்டு ம‌ட‌ங்கி விரிந்து

தியான‌ம் செய்தது

அந்த‌ பாய் ம‌ட்டுமே.

அந்த‌ பாய் ம‌ட்டுமே ஜென்.



த‌ய‌வு செய்து வீசிஎறியுங்க‌ள்

ஜென் ப‌ற்றிய‌ புத்த‌க‌ம் ஒன்றை

வான‌த்திற்கு.

க‌ட‌வுள்க‌ள் விண்ண‌ப்பித்திருக்கிறார்க‌ள்.



===========================================================ருத்ரா

எழுதியது :-  23 ஜனவரி 2014

மனமே நலமா?




மனமே நலமா?
===========================ருத்ரா இ பரமசிவன்

நிலவு அழகாய் இருக்கிறது
என்று சொல்வதை விட‌
அந்த அசையாத நீரின்
பளிங்குப்படலத்தில்
ஒரு சிறு கூழாங்கல் எறி.
அந்த நிலவின் பிம்பம்
கசக்கி கசக்கி பிழியப்பட்டு
உன் கண்களையும்
கசக்கிப் பிழிந்து விட்டு
சிறிது நேரத்தில்
நிலைத்து நிற்கும்.
இந்த நிலவின் அழகில்
நூறு நிலவுகளை சலவைசெய்த‌
வெள்ளை நிலா தெரியும்.
இப்போது நீ புரிந்து கொண்டிருப்பாய்
இது வரை சுக்கல் சுக்கலாக‌
உடைத்து நொறுக்கப்பட்ட‌
உன் மனது
ஒரு பளிங்கின் கவிதையாகி இருப்பதை!

============================================
01.02.2017 ல் எழுதியது.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

வேலண்டைன் குறும்பாக்கள்

வேலண்டைன் குறும்பாக்கள்
========================================ருத்ரா


அது என்ன அவன்கையில்
மயிர்ப்பீலிகளின் பிசிறுகள்?
அவனது "மயிலு"வின்
பெருமூச்சுகள்!

_____________________________________

ஒவ்வொரு தடவையும்
அவன் "வானவில்லை"
இரவில் தேடுகிறான்.
அதிலிருந்து அவளுக்கு
வளையல்கள் செய்து கொடுக்க.

__________________________________

ஓ அனுமார் சேனைகளே!
உங்களுக்கு வடைமாலை
மட்டும் தான் தெரியுமா?
"அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்"
என்ற வரிகள் தெரியாதா?

____________________________________

செமஸ்டர்கள்..
காதல் சிவ பூஜையில்
எதற்கு இந்த கரடி?

_____________________________________

அவர்கள் கைபேசிகள்..
கொட்டிக்கவிழ்த்தால்
கடல் கடலாய் சொற்கள் அற்ற‌
மூளி மவுனங்கள்.
கம்பெனிகளுக்கு
பில்லியன் பில்லியன் டாலர்கள்.

______________________________________

இதயங்கள்..
இதைத்தொலைத்து விட்டதாக‌
தேடி அலையும் நெரிசல்களின்
காலடியில் நசுங்கின‌
அந்த "லப் டப்"பு கள்!

‍‍‍‍‍‍‍‍_____________________________________


அரசியல் குறும்பாக்கள் (1)

அரசியல் குறும்பாக்கள் (1)
__________________________________ருத்ரா


ஓட்டு


அந்த பட்டனுக்கும்
சொரணையில்லை.
அதை தட்டுபவனுக்கும்
சொரணையில்லை.


ஜனநாயகம்.


அம்பத்தொன்று விழுக்காடு
உயிர் அற்றதும்
நாப்பத்தொன்பது விழுக்காடு
உயிர் உள்ளதும் ஆன‌
ஒரு "ஃப்ராங்கென்ஸ்டீன்"


கமலும் ரஜனியும்


காமிராக்களின் தேசத்தில்
வறுமையையும் ஊழலையும்
ஒழிக்க‌
இவர்கள் ரெடி.

__________________________________________________






ஒரு குழந்தை பிறக்கிறது !






ஒரு குழந்தை பிறக்கிறது !

=====================================ருத்ரா இ பரமசிவன்


தாய் வயிறு கிழிந்து

இப்போது தான் வந்தேன்.

அவள் மூச்சுகள் எனும்

வைரக்கம்பிகள்

வைத்து நெய்த சன்னல் பார்த்து

கனவுகள் கோர்த்தபின்

அவள் அடிவயிற்றுப்

பொன்னின் நீழிதழ்

அவிழ்ந்த கிழிசலில்

வந்து விட்டேன் வெளியே!



நீல வானம் கண்டு வியப்புகள் இல்லை.

சூரியசெப்புகளும் கொண்டு

விளையாட மனம் வரவில்லை.

வண்ணத்துப்பூச்சிகள்

சிமிட்டும் சிறகில்

வண்ணங்கள் ஏதும் உதிர்ந்திட வில்லை.

பூக்கள் எனக்கு

புன்னகை சொல்ல

வந்தன என்றார்.

புன்னகைக்குள் ஒரு

இருண்ட நீள் குகை

எப்படி வந்தது?

மான் குட்டிகள் மந்தை மந்தையாய்

மனதை அள்ளும் என்றார்.

மண்பொம்மைகளாய் அவை

யாவும் கரைந்து மறைந்தே போயின.

அடி வான விளிம்போரம்

தொடு வான இதழோரம்

சன்னமாய் ஒரு கேவல் ஒலியின்

கீற்று என்னை அறுப்பது

உணர்ந்தேன்.

என் தாயின் இதயச்சுவர்களில்

பாயும் குருதியில்

வலியின் குதிரைகள்

விறைத்து எகிறும்

காட்சிகள் கண்டேன்.

அழகாய் பூத்த அவள்

தாமரைச்சிரிப்பிலும்

மறைந்த ஓர் மெல்லிழை

கோடி கோடி உலகங்களின்

கனங்கொண்ட சோகமாய்

அழுகையின் லாவா

அடங்கித்தேய்ந்து

அவள் கருப்பைக்குள்ளேயே

கருங்கடலாய் உறைவது உணர்ந்தேன்.

பிரம்ம வாசலில்

பெண் ஒரு கேவலம்!

பெரும் தீட்டு.

அவள் கதவு திறந்து

வெளிச்சம் காட்டும் உயிரொளி கூட‌

கேவலம் கேவலம்.

முக்தியும் நாசம் அதன்

பக்தியும் நாசம்

என்றொரு

மூளிக்குரல் மூள எரியும்

பிணத்தீ மூட்டிய‌

வேள்விகள் கொண்டா..ஞானக்

கேள்விகள் வளர்த்தீர்!

வெற்றுச்சுவடிகள் எரியட்டும்!

என் விடியல் அங்கு பூக்கட்டும்!

அப்போதே நான் ஒரு பூம்புயல்.

புறப்பட்டு வருவேன்

புதிய தோர் காலம் படைத்திடுவேன்.



======================================================
18.09.2016 ல் எழுதியது 

திங்கள், 12 பிப்ரவரி, 2018

திறந்து பாருங்கள்

திறந்து  பாருங்கள்
===========================================ருத்ரா

ராமன் ஆண்டால் என்ன?
ராவணன் ஆண்டால் என்ன?
என்று
நீங்கள்
கண்ணை மூடிக்கொண்டிருப்பதில்
யாருக்கும் இங்கு
மில்லி மீட்டர் கூட கவலையில்லை.
கவலையில்லாத மனிதனாக
உலா வர‌
மில்லிகளில் மூழ்கினாலும்
இங்கு எவருக்கும் கவலையில்லை.
நூறு அடிக்கும் மேல்
ஒரு சிலையின் முன்
கண்கள் மூடி உறைந்து கிடந்தாலும்
கவலையில்லை.
இயற்கையே முண்டியடித்து
ஒரு மனிதனாக முகிழ்த்தது.
முகிழ்த்தது சிந்தித்ததே
கடவுள்!
ஆம்.அது வெறும் கற்பனை விளையாட்டு.
ஈசாவாசம் என்று
ஒரு சமஸ்கிருதப்புகைமண்டலத்தில்
உட்கார்ந்து கொள்ளுங்கள்!
அதற்கு உட்கார‌
அழகிய தமிழ் எனும் மானின்
பதப்படுத்தப்பட்ட தோல் தான் கிடைத்ததா?
குட குடமாய்
ஹெலிகாப்டரில் இருந்து கூட‌
அந்த சிலை
நெய்யால்
தேனால்
குளிப்பாட்டலாம்.
இதுவும் ஒரு
"கட் அவுட்" பால்குட
கலாச்சாரம் தான்.
மனம் முளைக்காதவர்களின்
அறிவு முளைக்காதவர்களின்
இந்த பொம்மை விளையாட்டைப்பற்றியும்
இங்கே யாருக்கும் கவலையில்லை.
இருட்டுக்குள்ளே
நடத்துகிற உங்கள்
கூத்துகள் என்னவென்று
உங்களுக்கு கொஞ்சமாது
வெளிச்சப்பட வேண்டாமா?
அதற்காவாவது
அறிவுச்சுடர் கொளுத்தி
 உங்கள் சன்னலை
கொஞ்சம்   திறந்து பாருங்கள்!

========================================================

சன்னலைத்திறந்து பாருங்கள்


காதலர் தினம்

காதலர் தினம்
============================ருத்ரா இ.பரமசிவன்

நகருக்குள் அனுமார் படை
அணிதிரண்டு வந்தது.
குண்டாந்தடிகளுடனும்
கதாயுதங்களுடனும்.
ஒரு அழகிய பூங்காவில்
இரு
உடல்கள்
ஒரு மனத்தோடு
தழுவிய
ஆண் பெண் சிலையை
அடித்து தூளாக்கியது
ஆவேசமாய்.
அதில் இரண்டு சில்கள்
தெறித்து
எங்கோ விழுந்தன.
அழிந்து போய் மங்கலாய்
இரு பெயர்கள் அதில்.
ஒன்றில் ராதா
ஒன்றில் கிருஷ்ணன்.

=========================================
பெப்ருவரி 2016ல் எழுதியது.

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

(வேலன்டைன் டே)


இந்தப்புயலின் பெயர் "இதயம்"
============================================ருத்ரா
(வேலன்டைன் டே)


வானிலை அறிவிப்பாளர்கள்
ஏதாவது பெயர் சூட்டி
புயலை எதிர்கொள்வார்களே
அது போல்
இது ஒரு புயல் "இதயம்"
இதை உண்மையாக மொழிபெயர்த்தால்
"ஹார்மோன்" என்று தான்
சொல்லவேண்டும்.
வயதுகள்
பதினாறு எனும்
அக்கினி ஆற்றுக்குள்
நடத்தும் நவீன "ஜலக்கிரீடை"
பட்டாம்பூச்சிகள்..
மின்னற்காடுகள்..
மயிற்பீலி வருடல்கள்..
ரோஜா இதழ்களில்
பதியம் ஆகும் பிருந்தாவனங்கள்.
கைபேசிக்காட்டுக்குள்
சிரித்துப்பேசும்
சந்திரோதயங்கள்.
பெரியவர்களின் நமைச்சல்களும்
பின்னோக்கி பார்த்து
"மெல்ல நகும்"
ரசாயனத்துடிப்புகள்.
ராணுவ மிடுக்கில்
சல்யூட் வைக்கத்தேவையில்லாத‌
"ஒரு தேசியக்கொடியேற்றம்"
இந்த "வேலன்டைன் டே"
இளம்பிஞ்சுகளே!
கவனம்...
சனாதனக் காண்டாமிருகங்கள்
சவட்டிப்போகக்
காத்திருக்கும்!
இளம்பூக்களே
சம்ப்ரதாய வெறியின்
கோரைப்பற்களும்
சாதி மத நச்சுப்பாம்புகளும்
உங்களை குறிவைப்பதையும்
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் காதல் வரலாற்று ஏடுகளில்.
காளிதாசர்களையும்
வித விதமாய் காதல் லீலைகள்
நடத்திய‌
புராணங்களையும்
இவர்கள் பரண்களில் வீசி
ஒளித்து வைக்கும் நாள் இது!
காதல் வாழ்க!
காதல் வெல்க!

=========================================================


நகைச்சுவை (1)

நகைச்சுவை (1)
 ========================================ருத்ரா

ஒரு மாணவன்: 

ஏண்டா ஏதோ ஹார்வர்டு யுனிவர்சிட்டியில் "தமிழ் வாத்தியார்" சேர்
இல்லேன்னு சொல்றாங்களே !

இன்னொரு மாணவன்.:

அதுக்கு என்ன செய்யலாம்னு நெனைக்கிறே ?

அந்த மாணவன்:

பேசாமே நம்ம தமிழ் வாத்தியாருகிட்ட கேட்டு  அதை எடுத்து பேக் பண்ணி
ஹார்வர்டுக்கு அனுப்பிடலாமாடா!

================================================================


சனி, 10 பிப்ரவரி, 2018

சினிமாவுக்கு வேண்டும் ஒரு "இனிமா"!

சினிமாவுக்கு வேண்டும் ஒரு "இனிமா"!
================================================
ருத்ரா இ.பரமசிவன்


இளம்புயல் ஒன்று
கோலிவுட்டுக்குள் தரையிறங்கி இருக்கிறது.
குறும்படங்களை
குறும்படங்களாகவே
எடுத்துக்கொண்டிருந்தவர்கள்
அதை கொஞ்சம் பட்ஜெட்டால் பலூன் ஊதி
குறுநெடும்படமாக்க எடுத்து
குவிக்கிறார்கள்.
மொத்த அண்டாவில்
கதை அவியல் வேகிறது.
சில மிளகாயை கடிக்கும்.
சில ஜிகர்தண்டாவில் சாம்பார் வைக்கும்.
சில குள்ளநரிக்கூட்டக் குருமா வைத்திருக்கும்.
சில பெருங்காய டப்பாடக்கர் என்று இருக்கும்.
தலைப்புகள் கூட‌
ஒண்ணாய் ஒடக்காம் அடிச்சி
ஒண்ணுக்கு பெஞ்சதை
கதைக்கு சூட்டப்பட்டிருக்கும்.
அப்புறம்
அவங்களுக்கே நாற்றம் சகிக்காமல்
"ஒண்ணாப்படிச்சதை"
தலைப்பாக்கியிருக்கும்.
"மொசக்குட்டி".."தெஹிடி"..என்று
வடிவேலுக்கள் தேவையே இல்லை
படம் பார்க்காமலேயே
கிச்சு கிச்சு மூட்டுவதில்
வல்லவர்கள் தான்!
கதாநாயகத்தனம் தேவையில்லாத
நரைத்த கதைளைக்கூட‌
விறைப்போடு காட்டுகிறார்கள்.
ஒரு தலைப்புக்குள்
ஒன்பது கதைகள் சிரச்சேதம் ஆகியிருக்கும்.
ஒரு கதைக்குள்
வருகிற வசனங்கள் எல்லாமே
அந்த படத்துக்கு தலைப்புகள் தான்.
பல்லக்கடித்து
உதட்டை இறுக்கி
கண்விழிக்குள் குரூரம் ஊற்றி
பீடி பிடிப்பவன் கடித்துத்துப்புவானே
அது போல்
துண்டு ஒலிகளில்
வசனம் பேசி
குவிந்த சினிமாக்களே
இன்றைய கோடம்பாக்கத்துக்குவியல்.
யார் கேட்டது
"நூறு நாட்களை"?
நூறு மணி நேர ஆயுள் போதும்.
பால் குடத்துக்கும்
பனையுயர கட் அவுட்டுக்கும்
ஆகிற சில்லறைகளே போதும்
பத்துப்படம் எடுக்க.
மின்னல்கள் போல படங்கள்.
தடமும் இல்லை..
மீண்டும் பார்க்க படமும் இல்லை.
இருட்டையும்
சொல் "கசாப்பையுமே"
மணிரத்னம் வைத்துக்கொண்டு
மணிமகுடம் சூட்டினார் என்று
இந்த பிஞ்சுகள்
செய்யும் புரட்சிக்குள்
ஒரு தீ மூள்வது
சிகரெட் பற்றவைக்கும்
பிஞ்சு நொடிக்குள்ளேயே மாயம்!
கருப்புப்பணத்து
பாதாள உலகத்தை
ஒரு வேதாள உலகமாக்கி
கஞ்சி விறைப்பு மாறாத
காக்கிச்சட்டைகளையும்
வைத்துக்கொண்டு
நாய்ச்சோறு விளையாட்டு
விளையாடிக்கொண்டே
தூள் கிளப்புவது
வியக்க வைக்கும் பரிமாணங்கள்.
காதலைக் காட்ட‌
அவ்வப்போது களம் இறங்கினாலும்
அது
சாராயத்துக்கு தொட்டுக்கொள்ளும்
ஊறுகாய்ப்பட்டை தான்.
ஆம்.
பட்டையைக்கிளப்பும் பட்டை மட்டுமே அது.
இருப்பினும்
"சொடக்கு போடுவதற்குள் "
கோடம்பாக்கத்தை
படங்களால் ரொப்பி விடுவதில்
அது
வெறும் கச்சா ஃபிலிம் சுருள்களின்
கிட்டங்கியாய் மாறி விடுமோ
என்று ஒரு கவலை தோன்றுகிறது.

புதிய தலைமுறையை
பழைய தலைமுறை
மச்சம் பார்ப்பது
சேதாரம் சொல்வது எல்லாம்
அநியாயம் தான்.அக்கிரமம் தான்.
ஓ!சூறாவளிகளே!
ஆத்திரமாய் வருகிறது.
இந்த கலர் காமிராக்களை
உடைத்து நொறுக்குங்களேன்.
ஒரு கருப்பு வெள்ளையில் தான்
மொத்த சினிமாவின்
உயிர்ப்பே துடிக்கிறது.
"தேவதாஸ்"ல் அந்த இருமல் ரத்தத்தில்
துடிக்க துடிக்க தெரியாத சிவப்பா?
பாசமலரில்
சிவாஜியின் கருப்பு பூட்ஸில்
நடு நடுங்கி துடித்து தெரியாத மரணமா?
இன்னும்
என்னவெல்லாமோ
அசைபோட தோன்றுகிறது.
சாக்கடைத்தேக்கம் அல்ல‌
சமுதாயம் என‌
தூர் வாரக் கிளம்பியவர்களே
வரலாற்று ஓட்டத்தின்
அந்த அக்கினி நரம்பை
அடைத்துக்கொண்டிருக்கும்
சில மலிவு மத்தாப்புகளை வெளித்தள்ள‌
வேண்டும் ஒரு இனிமா
இந்த சினிமாவுக்கு!
கனவுத்தீயின் மழலைகளே
உங்கள் படைப்புக்குள்
பிரம்மாக்கள்
வெளிவருகிறார்கள்
ஒவ்வொரு நேனோ செகண்டுக்கு ஒருவராக!
படைக்கும் வரை
படைத்துக்கொண்டே இருங்கள்!

============================================================
19.08.2015 ல் எழுதியது.

வெள் நள் ஆறு

வெள் நள் ஆறு
===============================================ருத்ரா

ஞெமலி மகிழ்தரு வெள் நள் ஆறு
நீள ஒலிக்கும் புன்மைசெறி கங்குல்
அல்கு பொலம்வரி அணியிழை நெகிழ‌
மைபொதி விசும்பு விரியுளை அன்ன‌
மஞ்சுபரி ஏகும் உருகெழு வல்மா
நோதல் கதழ்த்து நெஞ்சகம் சிதைக்கும்.
ஓமை ஒளித்து பார்ப்புகள் கூட்டும்
வரிமணல் கீற வடியிலை எஃகம்
பசும்புண் பிளப்ப வெஞ்சமர்  கூர‌
அலமரல் ஆற்றா அளியள் ஆகி
கம்பலை உற்று கண்மழைப் படூஉம்
மடமும் பயிர்ப்பும் உடைபடுத்தாங்கு
ஊழி பெயர்த்த பெருங்கல் கொல்லோ
பொடிபட வீள்க்கும் சேக்கை கண்ணே.
பொருள் மறை செய்து பொருள் நசைபெருக்கி
பொரியும் தீச்சுரம் உள் உள் கடாஅய்
யாது ஆற்றினை?அழியுமென் அணிநிறை.
அரவு வாய்ப்படு மென்சிறை அம்புள்
ஆகுவன் அறிதி.வீடத்தருதி.
மலைபடு ஊர! மல்லல் சீர்த்து.

(பொழிப்புரை தொடரும்)

===============================================
(30.11.2014ல் எழுதிய
எனது சங்கநடைச் செய்யுட்கவிதை)

அண்ணே அண்ணே (1)

அண்ணே அண்ணே (1)
===================================================ருத்ரா

அண்ணே...உள்ளாட்சி தேர்தல் வரப்போவுது..நான் மேயர் தேர்தல்ல
நிக்கப்போறேண்ணே.

என்னது? மேயரா?

ஏண்ணே..மேயர்னா என்னண்ணு தெரியாதா?அதாண்ணே.."நகரத்தந்தை"

ஏண்டா? நீயெல்லாம் "நகரத்தந்தை"யா?

ஏண்ணே? இப்டி சொல்லிட்டீங்க. நானும் நாலு ஆம்பளப்பிள்ளை நாலு
பொம்பளப்பிள்ளைக்கு தந்தையா இருக்கேனே..

"டேய்..டேய்..படவா நில்றா!
(அடிக்கப்போவது போல் கையை ஓங்குகிறார்.)

(அவர் ஓடி மறைகிறார்)


====================================================================
(நகைச்சுவைக்காக)









வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

காலடியில் கேள்விகள்

காலடியில் கேள்விகள்
===================================================ருத்ரா

வாக்காளப்பெருமக்களே.
இப்படி அழைக்கும்போது
எங்காவது ஒரு இடத்தில்
தேர்தல்
நடந்து கொண்டு தான் இருக்கும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர் யார்?
தேர்ந்தெடுப்பவர் யார்?
எதற்கு தேர்தல்?
எப்படி தேர்தல்?
இந்த கேள்விகள்
எழுபது வருடங்களாக‌
ஊஞ்சல்
ஆடிக்கொண்டே இருக்கின்றன.
பழைய நூற்றாண்டுகளில்
சர்வாதிகாரம்
ராஜ மகுடங்களில்
கூடு கட்டிக்கொண்டிருந்தன.
வாட்களும் ஈட்டிகளும்
கொய்த தலைகள் பந்தாடப்படுவதே
புனித "அரசாங்கம்" எனப்பட்டன.
அறமொழிகள்
ஆயிரம் ஆயிரம் ஓதப்பட்ட போதும்
மனிதன்
மிருகங்களுக்குள் தான்
கிடந்தான்.
மனிதனைப்படர்ந்திருந்த அச்சம்
மனித மூளைக்குள்
ஏற்படுத்திய "உருவெளிப்படலங்களே"
கடவுள்கள் ஆயின.
வலுத்தவன் இளைத்தவனை
ஆட்சி செய்தான்.
மூளை வலுத்தவனோ
நரிகள் போல்
ஆட்சியாளர்களின்
அந்தரங்கம் புகுந்து கொண்டான்.
அவன் வகுத்த வேறுபாடுகளை வைத்து
மனிதனை மனிதனேஆளும் அமைப்பையே
அரசாங்கம் ஆக்கிக்கொண்டான்.
தனிமனிதன்
மக்களை
தன் பொன்னாடைகளாக போர்த்திக்கொண்டான்.
மக்கள் கந்தல்களாக கிழிந்து கிடந்த போதும்
ஆளுபவன்
மக்களைப் பயமுறுத்தியே
ராஜ்ய பரப்பையும் விரிவாக்கிக்கொண்டான்.
மதம்
சாதிகள்
சம்பிரதாயங்கள்
எனும் பொறி வைத்து
மக்கள் எலிகளையெல்லாம்
பிடித்து நசுக்கினான்
ஆளுபவன்.

போகட்டும்.
வரலாற்றுப்பக்கங்கள்
சர சரவென்று திருப்பப்பட்டன.
நுண்மை புரிந்து கொண்ட மனிதர்கள்
ஒன்று கூடி
அந்த ராஜமகுடங்களை
கழற்றி எறிந்தார்கள்.
இன்று எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்
என்று
ஒரு ஜனநாயகத்தை
தேர் கட்டி இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதே நரிகள்
அதே மகுடங்களை
மீண்டும் உயிர்ப்பிக்கின்றன.
அதே
மதம்
கடவுள்
சாதி
சம்பிரதாயங்களை
பொறியாக்கி
அதாவது
கணினிப்பொறியாக்கி
இந்த வாக்கு எலிகளுக்கு ஏற்ற‌
மசால் வடைகளை
உள்ளே கிராஃபிக்ஸ் செய்து
தந்திரங்கள் செய்கின்றன.
ஆண்டவன் சொல்றான்
நாமெல்லாம் கேட்கணும்
என்கின்ற‌
வாக்காளர்களே
இன்னும்
வரிசை கோர்க்கிறார்கள்.
பாவம் புண்ணியம்
ஆத்மா சொர்க்கலோகம்ம் நரகம்
நான்கு வர்ண சநாதனம்
மற்றும்
அம்புலிமாமா புராணங்கள் எல்லாம்
அலங்கார வண்டிகளாய்
இவர்களது சுதந்திர ஊர்வலத்தில்
ஊர்ந்து கொண்டிருக்கின்றன.
இன்னும்
இருபது ஆண்டுகளில்
நம் வறுமைக்கோடுகள்
உடைபட்டுப்போகும்
என்று
எத்தனையோ இருபது ஆண்டுகளாய்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
புதிது புதிதாக‌
மைக் பிடித்து
உங்களுக்கு புதிய கோட்டையின் கதவுகளை
திறந்து வைக்கப்போவதாய்
சில காக்காய் கூட்டங்களும் வருகின்றன.
ஓ!
அன்பான வாக்காளர்களே
உங்கள் நிரந்த இருப்பிடம்
இந்த கியூ வரிசை தானா?
வரிசையில் நின்றுகொண்டாவது
யோசித்துக்கொண்டிருங்கள்.
சிற்றெரும்பு வரிசைகள்
தடங்கலாய் விழும் இடைஞ்சல்களை
எப்படி
தங்கள் வெற்றிப்பயணம் ஆக்கி
முன்னேறுகின்றன
என்பதை பார்த்தாவது
உங்கள் காத்திருப்பு வரிசையில்
கொஞ்சம் கனல் மூளும் கனவுகள்
கருவுயிர்க்குமா என்று
யோசியுங்கள்.
ஓட்டுகள் வெறும் கற்கள் அல்ல.
உங்கள் கல்லறையைக்கட்டவா
அதை சுமக்க இப்படி
வரிசை கட்டுகிறீர்கள்?
நகரும் காலடிகளே!
உங்கள் காலடியிலேயே
கிடக்கின்றன இக்கேள்விகள்!

================================================







வியாழன், 8 பிப்ரவரி, 2018

ஓலைத்துடிப்புகள் (2)

ஓலைத்துடிப்புகள் (2)
===========================================ருத்ரா இ பரமசிவன்

ஐங்குறு நாறு பாடல்களில் "புளிங்காய் தின்னும்" தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைபற்றி "ஓரம்போகியார்" எனும் மா கவிஞர் அற்புதமாக பாடியிருக்கிறார் (பாடல் 51). நேற்று நள்ளிரவில் அவர் வரிகள் எனக்குள்ளேயே கவிதை எழுதும் தினவை அந்த புளிங்காய்ச்சுவை ஏற்றி படாத பாடு படுத்தியது.அதன் விளவே இந்த "உன் உரு தின்னும்.." எனும்
என் சங்க நடைச் செய்யுட் கவிதை.


என் உரு தின்னும்...
=========================================ருத்ரா இ.பரமசிவன்

புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.
இலவு தொங்கும் காட்சிகள் மலியும்
நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை
கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.
கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும்
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்
ஊழ்த்த விடத்து என் எஞ்சும்?
கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!

============================================




பொழிப்புரை
===========================================ருத்ரா


புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.




தலைவன் பொருள் ஈட்ட கடுவழி ஏகிய பின் தலைவி அவன் நினைவு வாட்ட துயர் உறும் நிலையே இப்பாடல்.அவள் கருவுற்ற‌ நிலையில் எதைத் தின்போம் என்ற மசக்கைத்துன்பம் அடைந்து பெரிதும் வாடுகிறாள்.புளியங்காய் தின்கிறாள்.மண் அளைந்து சுவைப்பதும் அதன் சுவைக்கு ஒளிபொருந்திய வாயின் நீர் ஊறி வழிந்து நூல்போல அருவியாய்  அசைந்த நீர்ப்படலமாய் பெருகும் காட்சியும் அங்கே விளங்குகிறது. சாம்பல் கூட தின்று பார்த்து அச்சுவையின் அருமையைக்கண்டு வியந்து இது என்ன சுவையாய் என்று இருக்கலாம் என்று ஒப்பு நோக்குகிறாள்.அறுசுவைகள் கூட பிடிக்காமல் போகும் தனிச்சுவை அல்லவா இது.

இலவு தொங்கும் காட்சிகள் மலியும்
நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை
கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.


அவன் பொருள் தேடி சென்ற அந்த இலவங்காட்டில் இலவங்காய்கள் காய்த்து தொங்கும்.நிலாப்பிறைகள் போல பச்சைக்காய்கள் ஊஞ்சல் ஆடி தொங்கும்.அத்தகைய அடர் காட்டின் கடக்க அரியதாய் உள் நுழைய இயலாததாய் விளங்கும் கடுவழியை விலக்கி வேறு வழி செல்ல முடியாத அப்படிப்பட்ட கடும்பயணம் எல்லாம் எதற்கு?" தலைவி தவிக்கிறாள். "பொருள் தேடிய வரை போதும்.தார் குச்சியை செலுத்தி தேரின் குதிரையை விரைந்து செலுத்துவாயாக.என் விழிகளை மலர்கள் என்பாயே.பார் அவை இப்போது உன்னைக்காண முடியாமல் முள் மரங்களில் சிக்கியதைப் போல் வேதனை கொள்கின்றன.இவை என்னால் தாங்க இயலுமோ?" என்கிறாள்



கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும்
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்
ஊழ்த்த விடத்து என் எஞ்சும்?


தலைவின் கருவுற்ற நிலையின் துயரம் அங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது."நெருப்பு மூட்டிய பின் போல் வளரும் அந்த உயிரின் கரு கேட்கும் சுவை என்னைத்தின்கிறது.அச்சுவை எதை ஒத்து இருக்கின்றதென (செத்தென அறியேன்) நான் அறிய மாட்டேன்.இப்படி கருவால் தின்னப்படும் என்னை உன் காதல் பொங்கும் உருவம் வேறு தின்ன வருகிறது.இந்த பெருஞ்சுவைப் பசியில் நோதல் உற்று இம்மலை கடல் விண் மற்றும்விண்மீன்கள் ஆகிய எல்லாம் தின்னத்தொடங்கிவிடுவேனோ என அஞ்சுகிறேன்.நீ வரும் தேரும் வழியும் கூட ஆர்வம் மிக்க என் கண்கள் தேடும் பசியின் சுவையில் தின்னப்பட்டு விடலாம்.அதனால் விரைந்து தேரை செலுத்து.இக்காதலில் கொடிய நோய் (கருவுற்ற மசக்கையோடு) பேரூழியாய் அழித்த பின் என்ன மிஞ்சும் என அறிவாயா?"


கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!



"உடம்பு இற்று விழும்.அதற்கு முன் என் உயிரைக் காப்பாற்று.பறவைகள் எல்லாம் குஞ்சுகளுக்கு இரையூட்ட விரைந்து வருவது போல் விரைவாயாக. வேக வேகமாக குளம்புகள் பதிய‌ஓடிவரும் சிறந்த அந்த குதிரை வலிமை ஆர்ப்பரிக்க அது செல்லும் நீண்ட வழியையும் உன் கைக்குள் அடக்கி மிக மிக வேகமாய் வருக" என்கிறாள் தலைவி நெஞ்சப் படபடப்போடு.


===========================================================ருத்ரா
28.04.2015 ல் எழுதியது.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

தமிழே தமிழே

தமிழே தமிழே
========================================ருத்ரா

தமிழே தமிழே
தினம் தினம் ஒலிக்கின்றேனே!
உன் செவிகளில் நுழைகிறதா?
நீ எங்கோ
கல் தோன்றி
மண் தோன்றா காலத்தே
கலந்து கிடப்பதாய்
செய்யுள் புனைந்தனர்.
இங்கே இவர்களுக்குள்
சமஸ்கிருதம் ஒரு
சமஸ்தானமாய் தைத்துக்கிடக்கிறது.
"தமிழா
உன்னை நீயே
இப்படி கூப்பிட்டுப்பார்"

கூப்பிட்டு பார்க்கிறேன்.
எதற்கும்
அதற்கு ஒரு "முகூர்த்தம்"
பார்த்து "ஹோமப்பரிகாரம்"
செய்த பின் தான்
ஆவாஹனம் செய்யவேண்டும் என்றான்.

சரி தான்.
அந்த இருட்டிலேயே
கல்லாய்க் கிட.

ஆனாலும்
"ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்"
ஆசனம் தயார்.
இனி அங்கிருந்து தான்
ஹரி ஓம் குருவே நமஹ சொல்லி
வித்யாப்யாசம் செய்ய‌
அரிசியில் எழுதவேண்டும் என்று
பவ்யமாய் சொல்கின்றான்.

=============================================





.

நிழல்




நிழல்
=====================================ருத்ரா

ரத்தமும் சதையுமாய்
வண்ணப்பூ வேலை செய்தது போல்
பூமியில்
ஒரு ரத்னக்கம்பளம்
விரித்து வைத்து இருக்கிறேன்.
என் வேலைக்காரன் சூரியன்.
அவனே தினம் தினம்
இதை சுருட்டுவதும் விரிப்பதும் ஆக
இருக்கிறான்.
அவன் சுருட்டி வைத்தாலும்
உங்கள் மின்சார முண்டைக்கண்கள்
விரித்து வைக்கின்றன.
இது அழியாத காகிதம்.
லட்சம் லட்சமாய்
எத்தனைக்காலடிகளைக்கொண்டு
என் மீது சாணி மிதிக்கிறீர்கள்.
இந்த மௌன காகிதத்தில்
உங்கள் உள் மடிப்புகள் 
என்றைக்கும் எழுத்துக்களாய்
தூவப்பட்டதில்லையே !
ஆனாலும்
இங்கே உங்கள்  ஞான பீடங்களும்
சாஹித்யா அகாடெமிகளும்
உரை போட காணாது.
இந்த கம்பளம்
உங்களைப்போல்
வெறும் பாலைவனம் இல்லை.
அதோ
என் கவிஞர்கள் வந்து விட்டார்கள்.
சற்று நேரத்தில்
மரக்கிளைகளில்
குயில்களும் ஊசிக்ருவிகளும்
வந்து விட்டன.
அவற்றின் அமுத மழையில்
அந்த நிழற்கம்பளம்
உயிர் பூசிகிடந்தன!

================================================



ஓக் மர இலைகளுக்குள்..........



ஓக் மர இலைகளுக்குள்..........
=======================================ருத்ரா

சூரியனோடு
ஒரு "ஹைட் அண்ட் ஸீக்".
அது அந்த‌
ஓக் மர இலைகளின்
இதயங்களுக்குள்
ஒளிந்து கொண்டுவிட்டது.
இன்னும்
அது வெளியே வரவில்லை.
அவை
என்ன ரகசியம் பேசிக்கொண்டன?
இயற்கை தனக்குள்
புதைத்துவைத்திருக்கும்
கணினிக்குள் நுழைய‌
கடவுச்சொல்
அந்த ஓக் இலையும்
அதன் நரம்புகளும் தான்.
ஆம்
"பசுமை"யே
இங்கு
ஆயுதமும் கேடயமும்.

================================================
18.05.2016 ல் எழுதியது.

சனி, 3 பிப்ரவரி, 2018

விஜயசேதுபதின்னா கொம்பா?

விஜயசேதுபதின்னா கொம்பா?

 ===============================================ருத்ரா

அப்படித்தான்
சில உள்வட்டங்கள் கேட்கின்றன.
"ஒரு நல்லநாள்....சொல்றேன்" படத்து
டீஸரைப்பார்த்தால்
அவர் போட்டிருக்கும் "கொம்பு கஸ்ட்யூம்"
கதைக்குள்
த்ரில்லாய் காமெடியையும் ரொமான்ஸையம்
பிசைந்து பின்னி
பெடலெடுத்திருப்பார்கள்போலிருக்கிறது.
ரசிகர்களின் ஆவலை
பொங்குமாங்கடல் அலைகள் போல‌
பொங்க பொங்க வைத்திருக்கிறார்கள்!
அந்த கொம்புகிரீடத்தில்
தன் மீசை முறுக்கலை
ஒரு ரொமான்ஸ்க்கு தயார் படுத்தும் காட்சியில்
விஜயசேதுபதியின்
மௌனக்குறும்பு நன்றாகவே கொப்பளிக்கிறது.
ஆனால்
"தின மணி" விமரிசனத்தைப்  பார்த்தால்
"ஜல்லிக்கட்டு " விழா  முடிந்த பின்
"கொம்புகளால்"
அந்த திடல் கிழிந்து கிடக்குமே
அது போல்
திரைக்கதை  ஒரே கந்தல் தான்.
இருப்பினும்
அந்த "பொத்தல்கள்" வழியே
விஜய சேதுபதி கம்பெனி
காமெடியை நன்கு "ஜொள்" வடிக்கிறது.
அந்தக்காலத்து ஒரு படத்தின்  "பிரம்ம சுவடியில்"
கவுண்டமணி
செந்தில்
கார்த்திக்
இந்த மூவரும் அசத்தோ அசத்து என்று
அசத்தியிருப்பார்களே !
அதைப்போல
இந்த கொம்புக்கூட்டங்கள்
கிச்சு கிச்சு மூட்டியதில்
கிளுகிளுப்பு ரொமான்ஸ் கொஞ்சம் அதிகம்.
அதென்ன
"டேனியல்" இப்படி வெளுத்துக்கட்டியிருக்கிறாரே!
கார்த்திக்  கௌதம்
இன்னும் மணிரத்ன வாசனைக்குள்
மடங்கிக்கிடக்கிறார் போலிருக்கிறது.
ஒரு பொம்மலாட்டக்காரர்
எல்லா பொம்மைகளையும் அசைத்துகாட்டுகிற மாதிரி
விஜயசேதுபதியின்
வசன அசைப்புகளும்
நடிப்பு சேட்டைகளும்
படம் முழுக்க எல்லா பாத்திரங்களிலும்
நுரைத்து வடிவது போல் இருக்கிறது.
சும்மா சும்மா திருடிக்கொண்டிருக்க
அமாவாசையை நாள் பார்த்துக்கொண்டிருந்த
திருடன்
அவள் "போட்டோவைப்பார்த்து "
நெஞ்சைத் திருடிப்பார்க்க முயலும்
திருப்புமுனையில்
படம் பவுர்ணமி நோக்கி நகர்கிறது.
"சாது மிரண்டால்" என்று ஒரு பழைய படம்.
அதன் இயக்குனர்கள்  "திருமலை மகாலிங்கம்
டி .எஸ் பாலையா  நாகேஷை வைத்து
படம் பூராவையும் "நகைச்சுவையால்"
ரொப்பி விடுவார்கள்.
இந்த இயக்குனர் ஆறுமுகசாமி
அதற்காக நன்றாகவே
"தைப்பூச" காவடி ஆடி சிரிக்க வைத்திருக்கிறார்.
விஜயசேதுபதி "விஜய சிரிப்பு பதியாய்"
எம சிங்க புரத்தை
தன்  தோள்முழுவதும் சுமந்து
சிரிக்க வைத்ததில்
அவருக்கு "காதலிக்க நேரமில்லை".
நம்மை சிரிக்க வைக்க முயலுவதில் இதுவும்
"காதலிக்க நேரமில்லை" தான்.

==================================================





காந்தள் நெகிழும் கடிவிரல்

காந்தள் நெகிழும் கடிவிரல்
===========================================ருத்ரா
(சங்கநடையில் எழுதிய செய்யுட்கவிதை)


"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்
ஐம்பால் வகுக்கும் கொடுநிலை அன்ன‌
அலையின் அலையின் நெளிதரும் நினைவின்
ஆரிடை மிதப்ப களிகூர் போழ்தின்
இன்னிசை ஏந்தினேன் தோழி நீ ஓர்க!
காலிடை ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்
பண் அஃதின் அமிழ்தும் சுவைப்பாய் மன்னே!"

பொருள்
==========================================


தலைவி தன் காந்தள் மலர் ஒத்த‌ மெல்லிய விரல்களால் கோதி கோதி தன் கூந்தலில் வகிடுபிரித்த போது வளைவு வளைவுகளாய்இருக்கும் அந்த கூந்தல் சிக்கலில் ஈடுபட்டிருக்கிறள்.அந்த கூந்த‌லைப்போலவே அலை அலையாய் அவள் மீது கவிழும் இனிய நினவுகளில் அவள் மிதந்து களிப்புற்ற போது "ஒரு மெல்லிசையை தவளவிட்டேனே! தோழி அதனை நீ கேட்டாயா?" என்று அவள் தன் தோழியுடன் பேசுவதாய் உணர்கிறாள்."அந்த இசை ஒலி காற்றினுள்ளும் ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்.அத்தகைய பாட்டின் அமுதத்தையும் நீ சுவைப்பாயாக" என்று மகிழ்ந்து கூறிக்கொள்கிறாள்.

=================================================ருத்ரா
26.05.2017 ல் எழுதுதியது.



அங்கே ஓர் இடம் வேண்டும்.

அங்கே ஓர் இடம் வேண்டும்.
===================================கல்லிடைப்பரணன்.


தமிழை ஒலித்தால்

காதுகளில் கம்பளிப்பூச்சிகள்.

தமிழ் பேசினால்

கசப்பு தான்.

தமிழ் எண்ணினால்

சோறில்லை.

தமிழ் எழுதினால்

இடமில்லை.

தமிழில் கவிதை

கொலவெரி தான்.

தமிழை மொழியென்றால்

நாடு கடத்து.

தமிழ் இனமென்றால்

தமிழனே

தமிழனுக்கு கல்லறை.

அது ஏன்?

தமிழ் வரலாறு

புழுக்களின் வரலாறு.

தமிழ் ஆத்திகம்

தமிழும் நாத்திகம்.

தமிழில் ஆங்கிலம்

தமிழே ஆங்கிலம்.

இனிக்கிறது என்று

தமிழில் தான்

இவன் பெயர் சொன்னான்

வடமொழியில்.


கல் தோன்றி மண் தோன்றுமுன்

வந்தவன் என்று

நைந்து கிடக்கிறான்

கல் குவாரியிலும்

மண் குவாரியிலும்.



உலகம் தமிழில்

ஒரு நாள்

இமை உயர்த்தும் என்று

நம்புவோம்.


அந்த‌

"ஞாயிறு" தோன்றும் வரை

திங்கள் முதல்

சனி வரை

இந்த

பஞ்சாங்கத்தில்

படுத்துக்கிடப்போம்.


உறுமுவது மட்டும்

உரிமைகள் ஆகும்?


தமிழை

உருவாக்கும் முன்னே

தமிழை

கருவறுக்கவோ

இங்கு

இத்தனைக்கூச்சல்?



உலகம் எல்லாம்

கப்பல் விட்டவன்

ஒரு தீவில்

பிணங்களாய் குவிந்தான்.


அது ஒரு தாகம் என‌

கவிதைகள் சொன்னான்.

தமிழில் கூட

குண்டுகள் உமிழ்ந்து

தமிழ் உயிர்கள்

குடித்திடும் கொடுமை

எப்படி வந்தது?

மூவேந்தர் என்று

வில்லும் அம்பும்

ரத்தம் தின்றபின்...தமிழ்ச்

சத்தம் மட்டுமே

இங்கு மிச்சம்.


"தண் தமிழ் வேலி தமிழ் நாட்ட கமெல்லாம்

நின்று நிலைஇப் புகழ்பூத்தல் அல்லது

குன்றுதல் உண்டோ....."




பரிபாடலில் எட்டாம் பாட்டு இது.

புலவனின் முகம் தெரியவில்லை.

முகவரியும் இல்லை.

பாடலும் முழுமையில்லை.


இடிந்த கோட்டையின்

உருவகமாய்

தமிழின் புலம்பல் வரிகள்

கேளா இடமில்லை.




எங்கே தமிழ்?எது தான் தமிழ்?

அங்கே எனக்கு

ஓர் இடம் வேண்டும்!




===============================கல்லிடைப்பரணன்.
08.02.2016 ல் எழுதியது.

பட்ஜெட்

பட்ஜெட்
======================================ருத்ரா

வழக்கமான நெல்லிக்காய் மூட்டைதான்.
அவிழ்த்து விட்டு
ஒவ்வொரு நெல்லிக்காயோடும்
புள்ளிவிவர கோலி விளையாட்டு
ஆடிக்கொண்டிருக்கும் திருவிழா உல்லாசங்களுக்கு
அந்த பட்ஜெட் காகிதங்களே தோரணங்கள்!
சாக்குகளில் காகிதப்பணம்.
கைக்குள் கூட அடங்காத நுகர்வோர் பண்டங்கள்.
இரண்டும் சந்திக்கும்
புள்ளி இங்கு தெரிவதே இல்லை.
பொருளாதார வல்லுனர்களின்
"டாய்சரஸ்" விளையாட்டுப்பொம்மைகள் தான்
பட்ஜெட்டுகள் என்பது.
அரசாங்கம் தன் முகங்களை
ஒளித்து விளையாடும்
கண்ணாமூச்சி இருட்டு மூலைகளே இவை.
இன்னும் கோடிக்கணக்கான‌
குடிகளின்
உணவு உடை உறைவிடம்
எனும் மூன்று நட்சத்திரங்கள்
எங்கோ தொலைந்து போன ஒரு
வானத்தில் இருப்பதாக‌
ஆண்டுகள் தோறும் சொல்வார்கள்.
திட்டங்களும்
நூற்றுக்கணக்கான "கால மைல்களை"த்தாண்டிய‌
அடர்ந்த காட்டுக்குள் இருக்கும்.
குடிசைகள் நடுவே
பகாசுரப்பணங்களின்
பளிங்கு மாளிகைகள் மட்டும்
எந்த சட்டமும் இல்லாமல் திட்டமும் இல்லாமல்
உயரம் உயரமாய் முளைத்துக்கொண்டே இருக்கும்.
இவற்றோடு ஒரு சுரண்டல் வியாதியின்
சொரி பிடித்த சிரங்கு மொய்த்த‌
நம் கோட்பாடுகள்
ரத யாத்திரைகளாய் தூசிகிளப்பி
உலா போகின்றன.
ஜனநாயகத்தின்
வாக்குப்பெட்டியும்
கணினிகளாய்
போகமுடியாத தூரங்களுக்கு கூட‌
கழுதைகளில் பயணிக்கின்றன.
போகட்டும்!
புனிதமான வாக்குசீட்டுகளுக்கு
மஞ்சள் குங்குமம் வைத்து
கும்பிடுவோம் வாருங்கள்.

==============================================


அது என் நீண்டவாக்கியம்....


அது என் நீண்டவாக்கியம்....
===============================================ருத்ரா


அந்த நீண்ட வாக்கியம் எனக்கு சுகமாக இருக்கிறது.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைப்பற்றி
இந்த தூசு துரும்புகள் கவலைப்பட்டுக்கொண்டதில்லை.
பிரமிடுவின் ஒரு மாடாக்குழியில் ஆந்தைப்படத்துடன்
ஒரு ஆத்மா நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்
ரத்தம் கசிந்ததை சித்திரசங்கிலியில் எழுதியிருப்பதை
சிலாகித்து கிளர்வு கொண்டு
அந்த நீண்ட வாக்கிய மலைப்பாம்பை நெளியவிட்டிருப்பேன்.
இல்லாவிட்டால்
ஹோமரின் ஒடிஸியில் அந்த அற்புத தீவும்
போதைப்பழம் உண்ணும் (லோட்ட்ஸ் ஈட்டர்ஸ்) மனிதர்களும்
பற்றியும் கூட்ஸ் ஓட்டியிருப்பேன்.
எனக்கு அது பரமசுகம்.
இல்லாவிட்டால்
பிரச்னோபனிஷத் பிப்பிலாதன் நம் தமிழ்க்கவிஞன் கபிலன் தான்
என நீண்ட வாக்கியங்களுக்குள்
ஒரு உலகத்தமிழ் மாநாடு கூட்டியிருப்பேன்.
இல்லாவிட்டால்
காதல் எனும் சில்லாட்டை வழியே பதனி இறக்கி
சுண்ணாம்பு தடவாத நறவை கலயங்களில் பெய்து
அந்த வாக்கியம் பூராவையும் நனைத்து பிழிந்து கொண்டிருப்பேன்.
அவனும் அவளும் செல்ஃபோன்களின்
பூனைக்கண்களை அழுத்தி அழுத்தி
எலி பிடிக்கும் விளையாட்டை
வளையல் கிலுகிலுப்புகளில்
சதை புடைத்த ஆண்புஜ வருடல்களில்
எழுத்துக்களால் வழிந்தோடச்செய்த‌
அந்த நீண்டவாக்கியத்தை
ஒரு சீன ஓட்டலில் பாம்பு உரித்து தட்டில் வைத்து தருவதுபோல்
பரிமாறிக்கொண்டிருப்பேன்.
சங்ககாலப்புலவன் போல ஒரு "செம்பரணன்"என்ற பெயரை
ஓலையில் நீளமாய் கீறியிருப்பேன்.
நமக்கோ தமிழ் என்றால்
நமைச்சலும் அரிப்பும் பாடாய் படுத்தும் என்பதால்
"மாளவிக்காக்னி மித்ரன்"என்று பெயர் சூட்டி
என் வாக்கியத்தின் நீளப்பட்டியல் கல்லை கிடத்தியிருக்கிறேன்.
ஞான பீடங்கள் இமைஉயர்த்தலாம்.
அகாடெமிகள் விருதுக்காக‌ என்னைப்புரட்டிப்பார்த்து அச்சு கோக்கலாம்.
என் படுக்கையை உதறி தூசி தட்டி விரித்துவிட்டேன் படுத்துக்கொள்ள.
ஆம்..அது
என் நீண்ட வாக்கியம்...

=====================================================ருத்ரா
07.12.2014 ல் எழுதியது.

வியாழன், 1 பிப்ரவரி, 2018

எழு தரு மதியம் கடற் கண்(டு) ஆங்கு .....


நன்றி  "தினமலர்" 19.01.2017



எழு தரு மதியம் கடற் கண்(டு) ஆங்கு .....

=============================================ருத்ரா இ பரமசிவன்



நிலவுப்பிஞ்சுகளாய்

கல்லூரி வானில்

குறுந்தொகையும்

கூடவே

கணினித் தமிழும்

கரை கண்ட

தமிழ்ப்புயல் கீற்றுகளே!

மெரீனாக்கடற்கரையோரம்

அமைதியான ..ஆனால்

அழுத்தமான

"வார்தா"வை அல்லவா

பதியம் இட்டுக்கொண்டிருக்கிறீர்கள்!

உலகத்தமிழின் பேரெழுச்சியின்

"போன்சாய்"மரங்களாய்

நம் பட்டி தொட்டிகளிலும்

தமிழ் மாண்பு காக்க

அலை விரிக்கிறீர்கள்.!

பதவி என்றால் கொம்பு முளைத்தது என்று

பாதக அரசியல் செய்யும்

பதர்கள்கள் எல்லாம் தூசிகளாய் பறக்க

வீரத்தின் கொம்பு முளைத்த

புறநாநூற்றுப்புயலாய்

ஆனால் பச்சைப்பல்விரிப்பாய்

பண்பு காட்டி போரிடும்

உங்கள் புரட்சி

வரலாற்று ஏடுகளில் காண இயலாதது.

அண்ணல் காந்தியின் "அஹிம்சை"என்றால்

என்ன என்று

இந்த இற்றுப்போன இம்சை வர்க்கத்துக்கு

தெளிவாய் காட்டினீர்கள்.

அடங்கிப்போகும் ஆட்டுக்குட்டிகள் அல்ல

நீங்கள்.!

நீங்கள் ஒவ்வொருவரும்

தஞ்சைப்பெருங்கோயிலின்

அந்த "சீற்றம் கொண்ட"காளையே  தான்!

ஜல்லிக்கட்டு

வெறும் கொம்பும் திமிலும் அல்ல.

அதனுள்

நம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு

முன்னமேயே

"டவுன் லோடு"செய்யப்பட்டு விட்டது.

தன்னுயிரை காளைஉயிரில்

காணும்

வள்ளலாரின் தண் தமிழ் தத்துவமே

அதில் உண்டு.

டாலர்களில் புரண்டுகொண்டிருக்கும்

போலித்தனம் கொண்ட

பீட்டாவுக்கு

தமிழன் இதயம் எப்படிப்புரியும்?

தமிழன் கப்பல் ஓட்டி

"வளியிரு முந்நீர்"என்னும்

கடல்களையே

தனக்கு வேலியாகக்கொண்டவன்.

அன்று

பெயரில் தான் "ரோஜாப்புயல்".

இன்று கண்முன்னே

ஆயிரம் ஆயிரமாய் வீரப்பெண்களின்

ரோஜாக்கள் சிலிர்த்து சிலிர்த்து

சித்திரம் ஆனது.

உங்கள் "எழு தரு மதியம் கடல் கண்டு"

தன மடியில்

ஒரு சுனாமியை சுருட்டி வைத்திருக்கிறது.

தமிழ் வாழ்க!

தமிழ் இனம் எழுக!

எழுக! எழுக !எழுகவே !



===============================================================
20.01.2017 ல்  எழுதியது.

நாகேஷ்

நாகேஷ்
==================================ருத்ரா இ பரமசிவன்

"நீங்களும் ஒரு கோடி வெல்லலாம்"
என்ற நிகழ்ச்சிக்கு
மடி நிறைய ஒரு கோடியை
கனமான கனவாக்கி
சுமந்து சென்று அதில்
ஒரு ரூபாய் கூட வெல்லாத‌
"தருமி"யின் புலம்பல்
எப்படியிருக்கும்?
இன்றும் தமிழ் நாட்டு தியேட்டர்களில்
எல்லாம் எதிரொலிக்கிறது.
சிம்ம கர்ஜனையின் எதிரே
இந்த நகைச்சுவைப் பூனையின்
கணீர் கணீர் களில்
மியாவ் களை கேட்கவில்லை.
ஒரு டைகர் நாகேஷ்
அந்த மண்டபத்துத் தூண்கள்
கிடுகிடுக்க நம்மை சிரிக்கவைத்தார்.
"கேள்வியை நீ கேட்கக்கூடாது
நான் தான் கேட்பேன்"
என்ற வசனத்தில்
அந்த வெல வெலப்பு.
ஒரு பொய் மிடுக்கு
சிவ பெருமானையே
கடுப்பேற்றிப் பார்க்கும்
ஒரு துறு துறுப்பு...
இந்த நடிப்பெல்லாம்
சொல்லிக்கொடுக்க‌
கேம்பிரிட்ஜ் ஆக்ஸ்ஃபோர்டு
பல்கலைக்கழகங்கள் எல்லாம் பற்றாது.
இவரை
அமெரிக்க ஜெர்ரி லூயிஸ்ன் நிழல்
என்பார்கள்.
ஆனால் "சர்வர் சுந்தரம்" எனும்
படத்தில் நாம் கண்டது
நகைச்சுவை....
அடக்கிச் சிரித்து அழுகை....
காதலைக்காட்டும் அற்புத நளினம்...
இதுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல்
ஒரு டைரக்டரிடமே தண்ணி காட்டி
நடிப்பு என்று அவர் தெரிந்து கொள்ள முடியாத‌
இயல்பைக்காட்டி அவரை தவிக்க வைத்தது...
இதெல்லாம்
கோடம்பாக்கத்துக்காரர்கள்
இவரிடம் தோண்டி எடுத்த கிம்பர்லி.
இப்படி
எத்தனை படங்கள்.
எத்தனை பாத்திரங்கள்.
கே எஸ் கோபாலகிருஷ்ணன்
எஸ் வி ரங்கராவ்
நாகேஷ்
...இந்த அபூர்வ‌
பெர்முடா முக்கோணம்
திரைக்கடலில்
எத்தனை சூறாவளிகளை
கிளப்பியிருக்கிறது?
ஒரு "நீர்க்குமிழியில்"
நடிப்பின் ஏழுகடல்களையும்
தளும்பச்செய்தவர்.
இவரை மறக்க முடியாது.
இவர்
ஹிட்லருக்கு முன் நேருக்கு நேர்
நிற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால்
ஹிரோஷிமா நாகசாகிகள்
சின்னாபின்னம் ஆகியிருக்காது.
நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ்
என்று நாம் சொன்னால்
அங்கிருந்தே கத்துவார்
ஐ ஆம் செலபா யூ கோ அஹெட்ரா
......
காதலிக்க நேரமில்லையில்
பாலையாவுக்கு கதை சொல்லும்
பாணியில்
அராபிய "ஆயிரத்தொரு இரவுகளுக்கு"
அது நீண்டு கொண்டே
விலாப்புடைக்க
சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும்.
சொல்லிக்கொண்டே போகலாம்..
எமனின் எருமையைக்கூட இந்நேரம்
அங்கே சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார்.
அந்த எமன் எப்படியோ
ஆனால் இவர்
சிரிக்கவைப்பதில் எமன்.
அவர் சாகடித்தது
நம் கவலைகளைத்தானே.

===============================================================
30.09.2016 ல்  எழுதியது