சனி, 1 ஜூலை, 2017

இது ஞானக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத்தாழ்ப்பாள் அல்ல!


இது ஞானக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத்தாழ்ப்பாள் அல்ல!
===========================================================

தோழர் மோசிகீரனார்


மோசிகீரா
மகிழ்ச்சியினால்
மரியாதையை நான்
குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும்  நீ
சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக் கவிதை யாதொன்றும்
படித்ததில்லை நான் இன்னும்!
ஆனால், உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு
அரசாங்கத்துக் கட்டடத்தில்
தூக்கம் போட்ட முதல் மனிதன்
நீதான் என்னும் காரணத்தால்.
                                 - ஞானக்கூத்தன் (1938-2016)

(இது ஞானக்கூத்தன் பாட்டு )ஞானக்கூத்தன் அவர்களே!
உங்களுக்கு
தமிழ்ப்பற்று பற்றி
கவிதை எழுதிக்கொள்ள‌
நியாயங்கள் இல்லை தான்.
ஆயினும்
தமிழ் இலக்கியத்துக்கும்
மகுடம் சூட்டியிருக்கிறீர்கள்
இது நிச்சயம்
உங்களுக்கு ஒரு நிழற்குடை
அமைத்துக்கொள்ள அல்ல.
ஆனாலும்
மோசிகீரன் அந்த‌
மன்னனுக்கு தமிழின் உருவகம்.
அங்கே படுத்து உறங்கியது
பயணக்களைப்பால் அயர்ந்த‌
ஒரு தமிழ்!
அதனால் அவன் கவரி வீசியது
தமிழுக்குத் தான்.
ஆனால் தமிழுக்கு
புகழ் சூட்டப்படும்போதெல்லாம்
அதை புழுதியாக்கி
நையாண்டிக்கவிதைகள் எழுதி
உங்கள் உள் நச்சரிப்புகளை
ஏன் இப்படி சொறிந்து கொள்ளுகிறீர்கள்?
நீங்கள் சிறந்த கவிஞர்
உங்கள் தமிழ்ப் புதுக்கவிதைகள்
எங்களுக்கு புதிய இலக்கிய ஊற்று.
அதனால்
நீங்களும் அந்த முரசு கட்டிலில்
அதை அவமானப்படுத்தும் நோக்கில் இல்லாமல்
கொஞ்சம் படுத்து
கண்ணயர்ந்து விட்டீர்கள் என்று தான்
பொறுத்துக்கொள்கிறோம்!
எங்கள் பாராட்டுக்கவரிகளை
உங்களுக்கு வீசுகிறோம்.
வாழ்க தமிழ்!
வாழ்க உங்கள் தமிழ்ப்புதுக்கவிதைகள்!
=============================================ருத்ரா இ பரமசிவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக