ஞாயிறு, 2 ஜூலை, 2017

சௌந்தர் என்றொரு தோழர்

சௌந்தர் என்றொரு தோழர்
======================================ருத்ரா

அடுத்த தெருவில் வசிப்பவர்.
பார்க்கும்போதெல்லாம்
நின்று பேசுவார்.
முகம் நிறைய மத்தாப்பூக்களின்
வெளிச்சம்.
அந்த பேச்சில்
என் கவிதையைக் கொஞ்சமாவது
தொடாமல் அகலுவதே இல்லை.
நான் எழுதிய கவிதையின்
உட்புறம் நுழைந்து
அதில் மிகவும் களிப்புறுவார்.
கவிதை எழுதிய என் காகிதங்களில்
நரம்போட்டமாய் நிற்பவர்.
நான் சாவதற்குள்
ஒரு இலக்கிய விருது பெறுவேன்
என்று நம்பிக்கை
எனக்கு இருந்ததில்லை.

அன்று திடீரென்று செய்தி வந்தது
அவர் இறந்து விட்டார் என்று.
எனக்காக உயிர்ப்புடன் நின்ற
அந்த "ஞான பீடம்"
சரிந்ததாய் நான் மிகவும்
துயர் உற்றேன்.
என் கவிதைகள் என் முன்னே
அலங்கரிக்கப்பட்ட
பூத உடலாய்  படுத்துக்கிடந்தது.
மரணம் எனும் கவிதை
காற்றாய் என் காகிதத்தில்
பட படத்தது.
அது அவர் எழுதியது.
சாகித்ய அகாடெமிகளில்
எனக்கு ஒரு
சாகாத அகாடெமியாய்
எங்கோ ஒரு தொலைத்தூர
விண்பூக்களில் இருந்து கொண்டு
என் கவிதைக்குள்
தினமும் வருகிறார்.

=========================================
இரவு  11.30 மணி ..02 ஜுலை 2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக