ஞாயிறு, 16 ஜூலை, 2017

மீண்டும் ஒரு அலை

மீண்டும் ஒரு அலை





மீண்டும் ஒரு அலை
==============================ருத்ரா

ஏதும் தோன்றவில்லை.
எதிரே
இரைச்சல் போடும்
அலைகள் கேட்கவில்லை.
மூழ்கப்போகும்
சூரியன் கூட‌
ஏதோ சொல்லத்துடித்து
சொல்லாமல்
சிவப்பாய் கக்கிவிட்டு
கரைந்து விட்டான்.
என்ன சொன்னாள்?
அந்த ஒலி மட்டும்
கோடரியாய்
என் நெஞ்சை பிளந்து விட்டது.
அந்த சொல்
இன்னும் விளங்கவில்லை.
விளங்காமலேயே
போய்விடக்கூடாது
என்று
அலைகள் தன் முந்தானையைக்கொண்டு
இந்த கரை முகத்தை
ஒற்றிவிட்டு ஒற்றிவிட்டுப்போகுமே
அங்கு..
தன் விரல்களால்
எழுதி விட்டுச் சென்றிருக்கிறாள்..
எழுத்துக்கள் அழிந்து
மிச்சம் தெரிந்தது
இது மட்டுமே..
...விடு."
மறந்து விடு
மன்னித்து விடு
உன் மனதை தந்து விடு.
எந்த "விடு" அது?
எதுவும் தோன்றவில்லை.
என்ன விடுகதை இத
தொடவும் மாட்டேன் என்கிறது
விடவும் மாட்டேன் என்கிறது
மீண்டும் ஒரு அலை
அந்த "விடு"வுக்கும் விடுதலை.
எனக்கு எதுவும் தோன்றவில்லை.
மிச்சம் உள்ள எழுத்துக்களை
அந்த ஆழத்துக்குள் தேடிக்கொள்கிறேன்.
மீண்டும் ஒரு அலை..
வரட்டும்.
என்னை இழுத்துக்கொண்டு போக!

============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக