திங்கள், 3 ஜூலை, 2017

இலக்கு நம் இதயம் மீதிலே

இலக்கு நம் இதயம் மீதிலே !
==============================================ருத்ரா

நினைத்தால் காறி உமிழத்தோன்றுகிறது.
மேற்கே இருந்து வெள்ளைக்காரன் வந்து
நம் கழுத்தில் கத்தி வைத்தான்.
நம் அம்பத்தாறு தேச ராஜாக்களின்
வாரிசு அந்தரங்கத்தில் நுழைந்து
நம்மைக் கூறு போட்டான்.
ஏற்கனவே கூறு கெட்டுத்தானே
நாம் கிடந்தோம்.
என்ன நாய் பிழைப்பு இது?
ஆறுவகை மதம்பிடித்துக்கிடந்தோம்.
ஆறு கடவுளும்
நான்கு வர்ண வரப்புக்குள்
நம்மை நசுக்கி மிதித்தன.
கடவுளா அப்படி செய்தது?
இவை
அரசு நுகத்தடியை மக்கள் கழுத்தில் மாட்ட‌
சாதி சம்ப்ரதாய தில்லு முல்லுகள்.
சுயராஜ்யம் என் பிறப்புரிமை என்றார்கள்.
வந்தேமாதரம் முழங்கினார்கள்.
நாக்கு தொங்க  முண்டைக்கண் துருத்த‌
இடுப்பில் கபாலங்கள் கோர்த்து
ஆடையுடுத்த‌
பயங்கர காளிக்கு
மற்ற மதங்களை பலி கொடுக்கவே
கூர்வாள் தீட்டினார்கள்.
ஆயிரம் உண்டு இங்கு சாதி..இதில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி
என்று கர்ஜித்தார்கள்.
எல்லாம்
சாதி மத சாக்கடையாறுகளில்
கும்பமேளா நடத்துவதற்குத் தான்.
குரங்குகள் போட்ட பாலத்தை
ராமன் போட்டதாய் சொல்லி
கடலில் ஆழமாய் பாதை போட்டு
வணிகம் செய்யும் பொருளாதாரத்தை
சிதைத்து விட்டார்கள்.
ஆக்கிரமிப்பு செய்து
உட்கார்ந்து கொண்டவர்கள்
அதன் பின் வந்தவர்களை
ஆக்கிரமித்தார்கள் என்று
அடித்து விரட்ட
அதிரடி கும்பல்கள் சேர்த்து சேர்த்து
வாக்கு வங்கிகளை குவித்தார்கள்.
மனித உரிமை எனும்
கீச்சுக்குரல் கூட பொறுக்காது
தெருவெல்லாம் கசாப்புக்கடை ஆக்கினார்கள்.
எங்கள் உயிரினும் மேலான தேசியக்கொடியே !
சுதந்திரப்போர்களில்
ரத்தம் முக்கிய உன் சிவப்பு வர்ணத்தை
சாதி இந்து காவி வர்ணமாய் மாற்றி
அதையும்
கார்ப்பரேட் ஆக்கி
நம் பாரதப்பண்பையே
சுரண்டித்தின்ன சூதுகள் செய்தார்கள்.
இந்த சூதாட்டத்திற்கு
பகடை உருட்டும்
சகுனிகளை வீழ்த்துவதற்கே
இனி நாம்
தேர்(தல்) வடம் பிடிக்க வேண்டும்.
மக்கள் ஜனநாயகமே
அதன் நேரான பாதை!
வெற்றி நம் இமை மீதிலே!
இலக்கு நம் இதயம் மீதிலே!

==================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக