வெள்ளி, 21 ஜூலை, 2017

"போனால் போகட்டும் போடா !"

"போனால் போகட்டும் போடா !"
====================================================ருத்ரா

சினிமாக்கள்
கர்னாடக சங்கீதத்தை மட்டும்
கச்சா பிலிம் குடலுக்குள்
சுருட்டிக்கொண்டிருந்த நேரம்.
அப்போது திடீரென்று
1952ல்
ஒரு திருப்பமே "பராசக்தி"
தமிழ் உரையாடல்
வெள்ளமென‌
ஒலி யருவியென‌
உணர்ச்சி பிழிந்து
திரைப்பட நிழல் காட்டில்
ஒரு சூரியனாய் சுடர் வீசியது.
அதுவே சிவாஜி!
அப்புறம்
எத்தனை எத்தனை படங்கள்!
கன்ன நரம்புகளில்
நடிப்பின் மின்னல் தெறிப்புகள்.
கண்கள் மின்னுவதில்
பட்டாம்பூச்ச்சிக்காடுகள்.
அவரது
ப வரிசைப்படங்களில்
நடிப்புக்கலையின்
அகர முதல வின்
பல்கலைக்கழகம் காணலாம்.
எந்த பாத்திரமும் அவருக்கு
கரை தளும்பும் நடிப்பின் சமுத்திரங்கள்.
திரை உலகம் புகுந்த புதிது.
வில்லன் பாத்திரமா?
அவர் ஒதுக்கவில்லை.
"துளி விஷம்" கூட‌
அவருக்கு
நடிப்பின் பாற்கடல் கடைய
ஒரு வாய்ப்பு தான்.
மனோகரா
உத்தம புத்திரன்
அந்த நாள்
திரும்பிப்பார்
பட்டியல் இட
எண்ணிக்"கைகள்" கூட அசந்து போகும்.
எத்தனையோ
வாழ்க்கையின் நெருடல்களை
அற்புதமாய் காட்டினான்.
ஆனாலும்
"பாசமலரில்"
ஒரு உயிர் எப்படி
துடித்து துடித்து இறக்கிறது
என்பதை
அந்த எமன் பார்த்திருந்தால்
அந்த இறப்பு மண்டலத்தையே
சுக்கு நூறாக்கியிருப்பான்.
மறுபடியும்
அவன் இவனிடம்
அந்த மரணத்தைப்பார்த்து
ரசிக்க தன் மனத்தைக்கல்லாக்கி
இருப்பான் போலும்.
அந்த இறுதிக்காட்சிக்கு
"கட்" சொல்லி
நடித்தது போதும்
எழுந்து வா மகனே
என்று
கலைத்தாய் கதற கதறக்கேட்டும்
சென்று விட்டாயே
இது என்ன நடிப்பு?
ஒரு மரணம் கூட உனக்கு
உயிர்ப்பான நடிப்புதான்.
நவராத்ரியில் கூட‌
துடித்து துடித்து
அந்த தண்ணீர்த்தொட்டியில்
விழுந்தாயே!
அது வெறும் தொட்டி அல்ல‌
ஏழுகடல் கொண்டு நிரப்பிய‌
எங்கள் கண்ணீர்த்தொட்டி.
இவர்கள்
உன் சிலையை அங்கும் இங்கும்
அலைக்கழிக்கிறார்களே!
போகட்டும்
உன் நடிப்பில் அந்த பாட்டில்
அலட்சியமாக கை அசைத்தாயே
அது தான் நினைவுக்கு வருகிறது!
"போனால் போகட்டும் போடா!"

==============================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக