புதன், 24 ஜூலை, 2024

particles born

 particles born

Lecture 22: Quarks, QCD, and the Rise of the Standard Model | Watch (msn.com)

காப்பிக்கோப்பைகள்.

 

காப்பிக்கோப்பைகள்.

____________________________________

சொற்கீரன்.



மனித விழிப்புகள்

மலர்களில் கார்ட்டூன்களாய்

காட்சி தந்து கொண்டிருக்கும்

அந்த சன்னல் துண்டு சித்திரத்தில்

உதடுகளை வைத்துக்கொண்டு

காப்பிக்கோப்பையை உறிஞ்சினேன்.

ரோஜாக்களை மட்டுமே

குத்தகைக்கு எடுத்துக்கொண்டிருக்கும்

கவிஞர்கள்

அந்த பட்டாம்பூச்சிகளின் சிறகுகளில்

ஒட்டியிருக்கும்

காதல் மகரந்தங்களை

தூவிக்கொண்டே இருப்பார்கள்.

அந்த வியாபாரம் எப்போதுமே

சூடான பக்கோடாக்கள் தான்.

கொஞ்சம் கொறிக்க‌

இந்த தினவுகள் ஊரும் ஹார்மோன்களை

வைத்துக்கொண்டு

இந்த மலட்டு நூற்றாண்டுகளை

தள்ளிக்கொண்டே போகலாம்.

மனிதம் 

சாதி சமய சாக்கடைகளில்

தேங்கிக்கொண்டிருப்பதை

கவிதை எழுதிக்கொண்டிருக்கும்

இந்த ஈக்களின் துடிப்புகளில்

எந்த எரிமலைகளும் 

கண் திறந்து கொண்டு வந்து

நம்மை சுட்டெரிக்கப்போவதில்லை

என்று

சுகமாய் அந்த நுரைக்குமிழிகளின்

காப்பியை 

சுவைக்கத்தொடங்கினேன்.


_____________________________________________________





சிந்தனை செய் மனமே.

 


சிந்தனை செய் மனமே

______________________________________

சொற்கீரன்.



என்ன சிந்திக்கலாம்?

சிந்திப்பதற்கு கூட‌

என்ன என்று கேட்கவேண்டுமா?

கண்டுபிடிப்புகள்

புரட்சி செய்திருக்கின்றன.

தொழிற்புரட்சி அப்படி ஒரு

வரலாற்றுத்திருப்பம்.

கண்டுபிடிப்புகள்

மனிதனை காணாமல் ஆக்கிவிடும்

ஒரு எதிர்புரட்சிக்கு காரணமான‌

கண்டுபிடிப்பு தான்

கணினி அறிவு.

அப்படி அதைக்கொச்சைப்படுத்துவதும்

அறிவுக்கு ஒவ்வாதது தான்.

ஆனால் அது இந்த சமுதாயத்தை

மூளை மட்டுமே 

ஒரு பிரம்மாண்ட டைனோசார் அளவுக்கு

வளர்த்துவிட்டதாய் 

ஒரு தோற்றம் ஏற்படுத்தி இருக்கிறதே.

அது ஏன்?

மனிதன் வேறு சமுதாயம் வேறு அல்ல‌

என்று இருந்த‌

ஒரு சிந்தனை ஒன்றியம்

பிளவு பட்டு நிற்கிறது.

சமுதாயத்தின் மூளைக்குள் இருந்த‌

மனிதம் கழன்று போய்விட்டது.

பணம் குன்று போல் 

ஒரு புள்ளியில் குவிக்க மட்டுமே

ஏதோ அல்காரிதம் செய்யப்பட்டு விட்டதாய்

ஒரு தந்திரம் 

அந்த பூலியன் அல்ஜீப்ராவுக்குள்ளும்

குவாண்டம் க்யூபிட்டுக்குள்ளும் 

கருக்கொண்டு விட்டது.

தனிமனித வெற்றி எனும்

காக்டெயில் குத்தாட்டங்கள்

சமுதாயத்தைக் காலில் போட்டு

மிதித்து சிதைக்கத்தொடங்கியதன்

விளைவு..

மனித அறிவையே

கம்பியூட்டரின் அசுரப்பசி

தின்று மென்று அழித்தே விட்ட நிலை தான்

இப்போது நம் கையில்.

எதற்கு நீ அவசரமாய் மூத்திரம் 

போகவேண்டும்?

உனக்கு ஒரு ஏ ஐ ப்ரோகிராம்

பண்ணிக்கொள்.

அது பார்த்துக்கொள்ளும்.

இந்த தலைகீழ் பரிணாம வீச்சு

நம்முள் வேர் கொண்டு விட்டது.

நாம் தும்முவதும் இருமுவதும் கூட‌

நமக்கு வைரல் ஆனால் போதும்.

மனிதன் 

மூலையில் சுருட்டி மடக்கி

வீசியெறியப்பட்டு விட்டான்.

கேட்டால்

பெருமாள் கோவில் சாமி தான்

ஏலியனாக உட்கார்ந்து கொண்டு

நமக்கு வைகுண்டவாசல் 

காட்டிக்கொண்டிருக்கிறது

என்று கூட‌

ட்ரெண்ட் செட்டிங் பண்ணி

அதை வைரல் ஆக்கி விளம்பரம் ஆக்கும்

அதே 

பொருளாதார மோனோபோலி எனும்

மாயாவி ஆட்சியே 

நம்மை வலையில் வீழ்த்தி வைத்திருக்கிறது.

இப்போது

எதற்கு சிந்தனை சித்தாந்தம் எல்லாம்..

"உலக சிந்தனையாளர்களே 

ஒன்று படுங்கள்

நீங்கள் இழக்கப்போவது

உங்கள் சமுதாய பார்கின்கின்ஸன் நோயையும்

சமுதாய அல்சீமியர் நோய்களையும் தான்"

என்று ஒரு புதிய‌

மேனிஃபெஸ்டோவை

இந்த சீக்குப்பிடித்த சிந்தனையற்றவர்கள் முன்

கடை விரிக்க முற்படுவதே

நம் கடமையாகும்.


____________________________________________________________







செவ்வாய், 23 ஜூலை, 2024

தொலைந்து போனவன்

 தொலைந்து போனவன்

__________________________________

எப்சி



உன் முகவரியை சொல்கிறேன்

அருகில் வா

என்றது அந்த ஆளுயரக்கண்ணாடி.

என் முகத்துக் கவலைக்கீற்றுகளில்

ஒரு கோடம்பாக்கத்து

படப்பிடிப்பு ஓடுவதாக சொன்னது.

உன் கண்களுக்குள்

கண்களாக‌

அந்த காமிரா ஒரு

குறும்படம் எடுத்துக்கொண்டிருப்பதாக

ரீல் விட்டது.

அதுவே ஒரு குட்டித்திரைக்கதையை

முக்குளி போட்டு

குமிழிகள் விட்டது.

வழக்கமான காதல் கதையை

சாதி மோதல் மசாலாக்களில்

பொரித்து எடுத்துக்காட்டியது.

கொலுசு ஒலிக்குள்

இலக்கியம் தேடும்

இயக்குநரின் இனிய தினவுகளின்

வரி பிளந்து காட்டியது.

காதல் முற்றும் போது

ரத்தத்தின் ரங்கோலி

எங்கும் தெறித்தது...

என்ன..கண்ணாடி முழுவதும்

ஈரமாய் சிவப்பு...

அப்போது தான் தெரிந்தது

அந்தி நேரத்து ஒளியின்

சவக்களையும் கூட‌

சன்னல் வழியே கண்னாடியில்

புதிதாய் ரசம் பூசியது..

என்ன கண்ணாடியே?

எங்கே என் முகவரி? 

முகத்தை இழந்து நீ

வெகு காலம் ஆச்சே.

முகத்துள் அகம்..

அகத்துள் 

இனிதாய் ஆழத்தின் ஆழத்துள்

அல்லவா

நீ 

அமிழ்ந்து கிடக்கிறாய்.

நிழலாக அல்லவா என் முன்

நிற்கிறாய்.

உன் நிஜங்களை

உன் தூக்கத்தில் 

உன் கனவுகளில் தானே

தேடிக்கொண்டிருக்கிறாய்.

என்னில் என்னை

தொலைத்தவனை

உன் பிம்பத்தில் மீண்டும்

தொலைந்து போனவனை

காட்டிக்கொடுத்து விட்டாயே!

கையால் ஓங்கி

ஒரு குத்து விட்டேன்.

கண்ணாடி இன்னும் 

ஆயிரம் பிம்பம் காட்டி

என் முகம் தொலைந்ததை

காட்டி காட்டித் தெறித்தது.


_________________________________________‍





விக்கிரமாதித்தன்கள்.

 



வாசலில் நசுங்கிய குவளைகளில்

சத்தமிடும் சில்லறைகளின்

மந்திரங்கள்

சிலைகளின் காதுகளில்

விழுந்திடுமா?

வேதாளம் கேட்கிறது.

உருவிய வாளுடன்

அட்டையில் நிற்கும்

விக்கிரமாதித்தன்கள்.

___________________________________

ருத்ரா

அடங்கவில்லை.

 



கோடி கோடி என்று

புள்ளிவிவரங்கள்

குவிக்கப்படுகின்றன.

தீ

எரிவது மட்டும்

அடங்கவில்லை.

தீயணைப்புப்படை 

தண்ணீர்க்குழாய்களோடு

தாக்க வருகின்றன.

தீக்குச்சியை கிழித்தவர்களின்

நமுட்டு புன்சிரிப்புகளின்

பூங்கொத்துக்களோடு

அவர்களின்

பாதுகாப்பு பெட்டகங்களில்

தேசிய சுரங்கங்கள்.


______________________________________

ருத்ரா

திங்கள், 22 ஜூலை, 2024

எகிறு

 

வலது என்றால் அப்படியே இரு

இடது என்றால் எகிறு

என்று எப்படி இந்த‌

சமுதாய மனக்குமிழிக்கள்

மிதந்து கொண்டிருக்கின்றன.

மனிதனின் கருத்துகள் புதிது புதிதாக‌

குருத்துகள் விட்டு

எழ வேண்டும் என்ற‌

முனைப்பே இடது.

இதுவே 

மனிதன் உருவாக்கிய கடவுளை

தோலுரிக்கிறது.

அவன் அறிவு ஒவ்வொரு நொடியும்

இப்படித்தான் கூர் தீட்டப்படுகிறது.

இந்த சாணை தீட்டலில்

புது புது நிகழ்வுகள் பொறி கிளப்புகின்றன.

மனிதன் அண்டத்தின் ஒரு பிண்டம்

என்பதும்

தலைகீழாகி இந்த மனிதன் கைவிரல்களில்

மூளையின் விரிவுகள் பூதங்கள் ஆகி

அண்டங்களையே

புதுப்புது முட்டைகளாய் இடுகின்றன.

வலது என்பதோ தேக்கம்.

அது அப்படியே இருந்து

நாற்றம் பிடித்துக்கிடக்கிறது என்பதைக் கூட‌

அறிந்து கொள்ள மறுக்கிறது.

அப்படியென்றால்

இந்த கார்ப்பரேட்டுகளின்

வலதுக்குள் இருக்கும்

இருட்டுக்கர்ப்பமே இடது.

அறிவின் மலர்ச்சி ஒவ்வொரு இதழாக‌

திறக்கப்படுவதின் 

அறிவு எனும் விஞ்ஞானங்களை...

இந்த இடதுகளின் மகரந்தங்களை...

தன் ரூபாய் அணா பைசாவாக‌

அதாவது லாபம் எனும்

கோட்டையாக மாற்றி அதையே

ஆளும் செங்கோல்களாக‌

உருமாற்றிக்கொள்ள முனைவதே வலது.

மனிதம் எனும் பேராற்றல்

இந்த வலது முதலைகளின்

கோரப்பிடியில்  இரையாகிக்கொண்டிருப்பதே

பள பளப்பான அதன்

அந்த "தாராள மய" ஏற்பாடு.

அனகோண்டாவின் நீண்டல் உடல்

அழகிய புள்ளிகளில் 

ஊர்ந்து கொண்டே இருக்கிறது.

மனித வளர்ச்சியின் அறிவு முனையை

தன் தேவைக்கு ஏற்ப‌

கொம்பு சீவி விட்டுக்கொள்வதோ

இல்லை

மழுங்கடித்துக்கொள்வதோ

எல்லாமே இங்கு

வலதுவின் பிடிக்குள் தான் இருக்கிறது.

இதில் பிதுங்கி வழியும்

உலகத்து சமூக பொருளாதார‌

பிரச்னைகள் 

போர்களின் புகைமூட்டத்தில்

இன்னும் மறைவாகவே

வலதுகளை கொழுக்க வைக்கிறது...

சுருக்கமாய்ச் சொன்னால்

மனிதன் தன் கழுத்தை தானே

நெறித்துக்கொள்ளவே

வலதுத்தனம்

இந்த பழமைவாதத்தை

ஒரு லாப வாதமாக‌

பாது காத்துக்கொண்டிருக்கிறது.


__________________________________________________

ருத்ரா