சருகு ஓசைகள்
______________________________________ருத்ரா
சருகுகளில்
ஏன் இத்தனை இரைச்சல்?
நேற்று உதிர்ந்தது
அதற்கு முன்னும் உதிர்ந்தது
கூட்டிப்பெருக்கவே இல்லை.
எப்போது அவை விழுந்தனவோ?
ஆனாலும்
அந்த இரைச்சல்களுக்குள்
இத்தனை இனிய
இசை அமைப்பா?
பாருங்கள்
"அந்த போனால் போட்டும் போடா"
இசை அலைகளின் சுருட்டல்கள்.
மாலைப்பொழுதின் மயக்கத்திலே..
பெண்மை ஏக்கத்தின் இசை அருவிகள்.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
மணல் துளிகளில் இசையின் பிழம்பு.
இன்னும் எத்தனையோ
அந்த இரைச்சல்களின் வழியாக
இந்த மௌனத்தின் இதயம்
பிழியப்படுகின்றது.
பச்சையாக இந்த இலைகள்
தம் நரம்புகள் மூலம்
சூரிய பானம் பருகிக் களிக்கையிலே
எத்தனை இன்ப இழைகள்
அந்த நிழல் பிதுக்கங்களில்
வழிந்திருக்கும்.
நான் ஒவ்வொரு எட்டாக எடுத்துவைத்தேன்.
மெல்லிதாக
இன்னும் மெல்லிதாக
என் கால்களை பூவாக்கிக்கொண்டு..
இரைச்சல் மழை ஓய்ந்தது.
ஆனாலும்
ஏதோ கூழாகிப்போன
ஆசைகளும் ஏக்கங்களும்
நூலிழை போன்ற ஒலி விழுதுகளில்
என் காலடியில்
அழுகைகளாக விசும்புகின்றன.
_____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக