கண்ணாடி
____________________________________________ருத்ரா
03.07.2021
என்னவனே!
பெண் பார்க்கும் படலம் முடிந்து
நான்
இப்படி கண்ணாடி முன் நின்று
மட்டுமே
மணிக்கணக்காய்
உன்னோடு
மவுனமாய் பேசிக்கொண்டிருப்பதை
வைத்து
ஏதாவது ஒரு உளவியல் மருத்துவர்
ஸ்கிஸோஃபெர்னியா
அது இது என்று எழுதிக்கொடுத்து
விலங்கு பூட்டிவிடுவார்களே!
ஏற்கனவே நீ
எனக்கு மாட்டிய உன் சொல்விலங்குகள்
என்னை
என்ன பாடு படுத்திக்கொண்டிருக்கின்றன
என்று
உனக்குத் தெரியுமா?
சரி..சரி கேட்டதற்கு பதில் சொல்லு.
பொய்க்காமல் சொல்லு.
இந்நேரம் நீ
என்ன செய்து கொண்டிருப்பாய்?
வழக்கமாக சொல்வதைத்தான் சொல்வாய்.
அதாவது கோடிங்கில் நீ
ஒரு புதிய வெர்ஷன்
உள் நுழைந்திருப்பதாக!
அது தானே.
ஆமாம்
அந்த கணினிக்கு கைமுளைத்து
திடீரென்று
கை நிறைய கண்ணாடி வளையல்கள்
போட்டுக்கொண்டு
கிலுங் கிலுங் என்று
உன் நெஞ்சுக்குள் இருக்கிற
மஞ்சாச்சோற்றை
தின்று தீர்த்துவிடத்தெரியுமா?
அல்லது
கால் முளைத்து அந்த
கொலுசுகளின் பரல்கள் வழியாய்
உன் காதுக்குள் இருக்கிற
பிருந்தாவனத்து பூக்களைத் தழுவி தழுவி
உன்னை சுருட்டிக்கொள்ள முடியுமா?
கம்பியூட்டர் படித்த பெண் எல்லாம்
வேண்டாம் என்று
நீ தான்
இந்த தமிழ் இலக்கியம் படித்தவளே
போதும் என்று
என் கண்களோடு
உன் கண்கள் மோதிய
அந்த தீப்பொறிக்குள்ளேயே
இனிக்கும் ஒரு தேன்பொறிக்குள்
விழுந்து விட்டதாய்
என்பதை உன் சம்மதத்தில்
சிக்னல் கொடுத்துவிட்டு
சென்று விட்டாயே!
எப்போது நான் உன்னை மீண்டும்
சந்திப்பது?
ஆயிரம் கிராஃபிக்ஸ்களில்
அற்புதம் படைக்கிறாய்.
"கல்பொரு சிறுநுரை" என்று
குறுந்தொகையில்
அந்தக்கவிஞன்
ஒரு பெண்ணின் உள் துடிப்பை
வரைந்திருக்கிறானே!
அதை உன்
"ஃப்ராக்டல் ஜியாமெட்ரியும்
ஜூலியா கர்வ்"வும்
உணர்ச்சி பொங்க பொங்க
வடிக்க முடியுமா?
அன்று உன்
அந்த "சம்மதம்" என்ற சொல் தான் என்னை
இன்னும்
இந்த பட்டாம்பூச்சி புழுக்கூட்டில்
அடைத்து வைத்திருக்கிறது.
வெறும் இலைகளையே தின்று கொழுத்து
வெடிக்குமாமே அந்தப்புழு.
நானும்
உன்னை எனக்குத்தோன்றிய
பிக்காசோவின் தூரிகையில்
வண்ணம் குழைத்து வைத்திருக்கிறேன்..
அது
வர்ணங்களின் பெரும்புயலாய்
கனவுசிறகு விரித்து வரும்போது...
...................
....................
அவளுக்கும் தெரியாது.
அந்த வீட்டுக்கும் தெரியாது.
"ஜாதகம் பொருந்தவில்லை மன்னிக்கவும்"
என்ற வரிகள் தாங்கிய
ஒரு கடிதம்
அங்கே வந்து கொண்டேஇருப்பது
இன்னும் தெரியாது.
______________________________________ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக