சனி, 10 ஜூலை, 2021

கடவுளே காப்பாற்று





கடவுளே காப்பாற்று

_______________________________________ருத்ரா




கடவுள் என்று

வானம் அச்சடித்தது

சூரியனை.

அது என்ன நெருப்பு தானே

பீடி பற்ற வைக்கும்போது

பார்த்துக்கொள்ளலாம்

என்றான் ஒருவன்.

கடவுள் 

"ஜலம்" என்று

வேதம் ஸ்லோகம் சொன்னது.

ஆமாம்

இதை எப்போதும் 

கமண்டலத்தில் 

வைத்துக்கொள்ளவேண்டும்

எதிரில் தீண்டத்தகாத "மனிதன்"

வந்து விட்டால்

அந்த திசையை

"ஜலம்"தெளித்து தானே

புண்யபூமி ஆக்கவேண்டும்

என்றார் ஒரு பெரிய மனிதர்.

மண் தான்

கடவுள் என்று

அந்தப்பக்கம் சொல்லிவிட்டு

இந்தப்பக்கம்

மனிதனாக 

அவதரித்தார் கடவுள்.

ராஜ நீதி அது இது என்று 

சொல்லி ராஜ்யபாரம் தாங்கினார்.

அவருக்கே தெரியும் 

அவர் மனைவி கற்பில் நெருப்பு என்று.

இருப்பினும்

அதே ராஜ்ய நீதி என்று

அவளை தீயில் விழச்சொல்லி

அவளும் தீயையும் வென்று

உன் ராஜ்யத்தையே நீ கட்டிக்கொள்

என்று

இந்த மண்ணுக்குள் புதைந்து போனாள்.

மண் எனும் கடவுளே

இங்கு மண்ணுக்குள்

புதைந்து போனது.

சரி..

இன்னும் எதை

கடவுள் என்று சொல்வது?

என்று

கடவுள் யோசித்துக்கொண்டே தான்

இருக்கிறார்.

கவலைப்படாதே 

இதோ நான் இருக்கிறேன் என்றது

கொரோனா வைரஸ்.

ஆல்ஃபா பீட்டா ..டெல்டா

எப்சிலான் ..கப்பா..

என்று கிரேக்க எழுத்துக்குள்

அவர் ஒளிய‌

அவர் பின்னே தடுப்பூசிகள் தொடர...

இப்போது

"டாம் அன்ட் ஜெர்ரி"

விளையாடவே அவருக்கு 

காலம் போதவில்லை.

கடவுளுக்கே 

வந்த போதாத காலமா இது?

கடவுளே இந்த‌

கட‌வுளைக்காப்பாற்று.


______________________________________








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக