மகிழ்ச்சியாய்...
___________________________________ருத்ரா
இது என்ன நினைப்பு?
குதிரை கனைத்துக்கொண்டது போல்
இருந்தது.
இறந்த பின்
கழிந்த நாட்களை
கத்தியால் கூறுபோட்டு
அதன் சதை வேறு
ரத்தம் வேறாய்
ஆக்கிப்பார்க்க முடியுமா?
நினைவின் அந்த கனத்தப்பெட்டகத்தை
எந்தக்கோடரியால் பிளப்பது?
அதில் ஒன்றுமே இல்லை
என்று
மனம் அவசரமாய்
முந்திரிக்கொட்டை போல்
கூற வந்தாலும்
நான் அவிந்து அவிந்து
வெந்து வெந்து
மடிந்த தருணங்கள்
அங்கே தான் எங்கேயாவது
பதுங்கியிருக்கும்.
என் தேன்கூட்டுப்பிழியல்களின்
இன்ப விளாறுகளும்
அங்கே எறும்பு மொய்த்துக்
கிடக்கலாம்.
இன்னும்
என்னென்னவோ
சித்திரங்கள்
அங்கே அடிக்கப்பட
ஆணி தேடி சுவர் தேடி
மூச்சு முட்டிக்கிடக்கலாம்.
என் சறுக்கல்களும் சரிவுகள்
ஜரிகை பார்டர் வைத்த ஆடைகளாய்
அங்கே அடைந்து கிடக்கலாம்.
எல்லாம் போகட்டும்.
அதோ
மணற்குவியலாய்
என் கற்பனைக்குவியல்கள்.
காகித எச்சங்களில்
கவிதைகள் எனும் கசங்கிய
எழுத்துக்களில்
கனவுகள் பிய்ந்த விரிப்பில்
குந்தியிருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டுகளாய்
அடுக்கிய சிதையில்
இன்று
கொள்ளிச்சட்டி கவிழ்க்கப்படலாம்.
நன்றாக தீ
கொழுந்து விடட்டும்.
எனக்கென்ன வந்தது?
நான்
என்ற என் ஈகோ என்ற
அகங்காரத்தை
அந்த தீயால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
எனது
ஏதோ ஒரு கவிதை
அந்தப்பத்திரிகையில்
அன்றொரு நாள் பிரசுரம்
ஆகியிருந்தது.
இந்த மணற்பிழம்புகள் போல்
எனக்கு
அது ஒரு சிற்பம் செய்தது.
அந்த எழுத்துக்களின்
ஊடே நான் ஊர்கின்றேன்.
போய் வா நண்பா.
நானே எனக்கு நண்பன் ஆகி
நானே என்னைத்தூக்கிச்சுமந்தவர்களுள்
ஒருவனாகி
கை அசைத்து அனுப்பிவைத்துக்
கொண்டிருக்கிறேன்.
என்னை!
மணலில் எல்லாம்
என் கால் தடங்கள்.
என் காலண்டர் தாள்களின்
மரணயோகங்களும் சித்தயோகங்களும்
அங்கே சிதறிக்கிடந்தன.
நான் மகிழ்ச்சியாய் எனக்கு
விடை கொடுத்தேன்.
_____________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக