வெள்ளி, 9 ஜூலை, 2021

மாமூல் விடியல்


 


மாமூல் விடியல்

_____________________________________ருத்ரா



நீண்ட இரவு விழுங்கிய‌

நம்பிக்கைகளின் விதை

இதோ

இங்கு இப்போது 

ஊன்றப்படுகிறது.

தென்னைகள் சாமரம் வீச‌

புதிய உணர்வுகள் 

சுடர் பூக்கின்றன.

பஞ்சாங்கத்தில் படுத்துக்

கிடந்தோம்.

தோஷங்களும் பரிகாரங்களுமாய்

பஞ்சடைத்த‌

தலையணைகளில்

சாய்ந்து கிடந்தோம்.

நாம் மூச்சு விடும் 

தமிழ் மீதே

நசுக்கி உட்கார்ந்துகொண்டு

மூச்சு முட்டுகிறதே

என்று 

புலம்பிக்கொண்டிருக்கிறோம்.

எச்சம் இடும் காக்கைக்கும்

அந்த கல் ஒன்றும் 

வரம் கொடுப்பதில்லை

அல்லது

சூ சூ என்று

விரட்டுவதும் இல்லை.

"சங்கல்பம்" என்று

புல்லைப்பிடித்துக்கொண்டு

புரியாத இரைச்சல்களில்

அந்த இலையில் இட்ட‌

சோற்றுப்பிண்டத்தை

காக்கைகளின் மூலம்

மூதாதையருக்கு ஊட்டுகின்றோம்.

நூற்றாண்டுகள் தோறும்

ஓடுகின்றன.

நம் அறிவு மட்டும் கூர்மையற்று

மழுங்கியே கிடக்கிறது.

மற்றவர்களின் பேச்சுகள் அறிவுச்சொற்கள் 

எல்லாம் "மிலேச்சத்தனம்"

என்று

புதைக்கப்பட்டு

நாம் இந்த நீண்ட இருளில்

இன்னும் புதைந்து கொண்டிருக்கிறோம்.

இந்த இருட்டுக்கும் நான்கு வர்ணம் பூசி

இன்னும் இன்னும் 

ஆழப் புதைந்து கொண்டிருக்கிறோம்.

அந்த தென்னங்கீற்றுகளுக்கிடையில்

ஒளி பாய்ச்சும்

அந்த விடியல் தினம் தினம் 

ஒரு மாமூல் விடியலை 

அரங்கேற்றி விட்டு

ஓய்ந்து விடுகிறது.

இங்கு அது

நம் மலட்டுப்போர்வைகளின் மேல்

விழுந்து விழுந்து 

வான்வெளியின் காற்றில் கூட‌

சவக்களையை 

படரவிட்டுக்கொண்டிருக்கிறது.


________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக