புதன், 21 ஜூலை, 2021

ஒரு உருவகம்


       நான் 1996ல் கம்பியூட்டரில் வரைந்த ஓவியம் இது.

  
  
ஒரு உருவகம்
________________________‍‍___ருத்ரா


ஒரு ஓவியத்துள்
அழகிய அன்னம் 
ஒரு அடையாளமாய்!
எல்லோருடைய மூச்சுக்காற்றையும் 
கொண்டு தீட்டப்பட்டு
உயிர்த்து நிற்கும் ஓவியம்.
கருப்பு இருட்டின்
கர்ப்பம் திறந்து
வெளிவந்த‌
மின்னல் அழகின்
வெளிச்சப்பிழம்பு 
சிறகு முளைத்து
சுடர் காட்டுகிறது.
பல ஆண்டுகளின் 
வரலாற்றுத்தடங்களில் 
கசிந்த ரத்தம்
மலை முகட்டு விளிம்பில்
சிவப்பாய் சிலிர்த்து நிற்பதை
அருந்துகின்ற அற்புத அன்னம்!
அதனுள் ஒரு நிழல்
கசக்கப்படுகிறது.
பிழியப்படுகிறது.
துண்டு துண்டாக்கப்படுகிறது.
ஏன்?
உள்ளே ஒரு அச்சம்
தீப்பற்றி எரிகிறது.
வெள்ளைத்தீ போல்
சிறகுக்குள் அடைகாத்து
எரிகின்றது.
இந்த சிறகுகள் எல்லாம்
பிய்க்கப்படுமோ?
கொள்ளை அழகு கொண்ட‌
அலகுகள் பிளக்கப்படுமோ?
நீருக்குள் 
அமிழ்த்தப்படுமோ?
சூழ்ந்து நிற்கும் பச்சை மரங்களின்
நரம்புகளுக்குள் எல்லாம்
நடுக்கத்தின் ஓலங்கள்.
இந்த ஓவியம் 
எல்லாம் உரிக்கப்பட்டு
மசாலா சேர்த்து 
வேக வைக்கப்பட்டு விடுமோ?
மிதந்து கொண்டிருக்கும்
கனவுகள் கசாப்பு 
செய்யப்பட்டு விடுமோ?
ஒரு உருவகத்துள்
நீளமாய் மரணப்பசி யெடுத்த‌
ஒரு நாக்கு சட சடப்பது
தெரிகிறது.
எங்கிருந்தோ அந்த‌
சுடுகாட்டுப்புகை நாற்றம்..!
குரல் வளை நெரிக்கப்படுகிறது.
கழுத்து திருகப்படுகிறது.
உஷ்!
மூச்சு காட்டாதீர்கள்.
மரம் மட்டைகளே!
உங்களுக்கு புதிய பூட்டுகள்
அதோ
காய்த்து தொங்குகின்றன.
_________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக