வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

தரமணி

தரமணி
=====================================ருத்ரா

பெண்ணியம்
என்பது
ஆணியத்தால்
வளர்க்கப்படும் பட்டுரோஜாவா?
அல்ல..அல்ல‌
என்று
ரோஜா பாதி முள் பாதி கூட‌
இல்லாமல்
முழுவதுமாகவே முள்ளாய்
ஆணியத்தின் கயமை மீது
குத்தி குத்தி
ரத்தம் கசிய வைக்கும்
அருமையான படம்.
ஒரு கதாநாயகி
ஆயிரம் கதாநாயகன்களின்
சுமையை
"அட்லஸ்" போல
அநாயசமாக தூக்கிக்காட்டும்
மிகக்கனமான படம்.
விருதுக்கமிட்டியார்களே
"ஊர்வசி"விருதுகளையெல்லாம்
உங்கள் மடியில்
சுருட்டி வைத்திருந்தது போதும்!
கதாநாயகியின் நடிப்புக்கு
அந்த "ஊர்வசியை" ஒரு
பட்டர் பேப்பர் போல சுற்றிக்கொள்ளலாம்.
அவ்வளவு தான்.
"ஆ ண்ட்ரியா "என்ற பெயருக்குள்
அந்த "ஆல்தியா ஜோசஃ ப் "
அப்படியே செருகிக்கொண்டது
அற்புத நடிப்புக்களஞ்சியமாய்.
தாடி மீசைக்காடுகளில் வந்து
கதாநாயகன்
காதல் எனும் ஒரு ரோஜாப்பூவை
நீட்டிவிட்டு
வார்த்தை ஊசிகளால்
குத்தி குத்தி வாங்கும்போது
ரணம் மிகவும் வலிக்கிறது.
இந்த ரணங்களின் ஆரண்யத்தில்
ராமன் காலத்து
சலவைத்தொழிலாளியின் சந்தேகம்
ராமாயணத்துள் கீமாயணமாய்
பரபரப்புகளின் நெருப்பை
கொடூரத்தின் உஷ்ணமாய் மூட்டுகிறது.
படம்  ஃ பிரேமுக்கு  ஃ பிரேம்
ராம் ராம் என்று உச்சரிக்கிறது.
பெண்ணின் உள்வலியே
இங்கு இசையமைப்பு
யுவன் நரம்புக்கருவிகளிலிருந்து
அந்த வலியை கவிதையாக்கி இருக்கிறார்.
இதற்கு இன்னொரு கவிதையை
இசையமைத்தது போல்
ந.முத்துக்குமாரின் அந்த வரிகள்
"ஒரு கோப்பை வேண்டும் கொண்டு   வா"
என்ன ஆழமானதொரு சொல் கூட்டம்?
"கல் பிறந்தது
மண் பிறந்தது
பெண்ணும் பிறந்தாளே
அவள் கண்ணில்
கண்ணீர்த்துளிகள்
கன்னம் தீண்டியதே .."
கல் தோன்றி
மண் தோன்றாக்காலத்தேயும்
ஆணின் சந்தேகம்
காக்காமுள்ளாய்
பெண்ணின் இதயம் கீறியதோ
என்கிறார் கவிஞர்.
அவர் பேனா விட்டு விட்டுப்போன
அந்த வலிக்கு
இன்னும் மரணம் இல்லை.
தோழில் நுட்பத்தின் உருவகம்
அந்த "தரமணி"
கவித்துவமான பெண்ணின்
வலி நுட்பத்தின் உருவகம்
இந்த "தரமணி"

=================================================




2 கருத்துகள்:

Unknown சொன்னது…

நன்று என்றாலும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் சிறப்பு இது என் வேண்டுகோள்!

ராஜி சொன்னது…

எனது வேண்டுகோளும்..

உங்க எண்ணம் இப்படிதான் வெளிவரனும்ன்னு ஆசைப்பட்டா பத்தி பத்தியா பிரிச்சு எழுதுங்க.

தவறா நினைக்காதீங்க..

கருத்துரையிடுக