ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

அந்தி

அந்தி
==================================ருத்ரா


கடல் ரத்தம் கக்கி சாகும்
என்று எந்த முனிவனின் சாபம் இது?
ரத்தம் கக்கியது
கடல் அல்ல.
நம் மனத்தின் அடிவயிறு.
அதன் அகோரப்பசி.
எங்கு பார்த்தாலும்
கிருஷ்ணன் மொட்டையாய்
சொன்னது போல் அதர்மம்.
அது முதுகு காட்டி உட்கார்ந்து இருக்கும்
தர்மம் என்று
அவன் சக்கரம் விட்டபிறகு
தெரிகிறது.
அதை வருடிக்கொடுக்க‌
அவன் முனையும் போது
அங்கே அதர்மத்தின் கோரைப்பற்கள்.
அவன் களைத்துப்போனான்.
எது தர்மம்? எது அதர்மம்?
பகவத் கீதை
விஸ்வரூபம் காட்டுகிறது.
அதர்மம் வாய்பிளந்து தர்மம்
என்று
உள்ளே "உள் நாக்கால்"
சமஸ்கிருதத்தை
எச்சில் மழை பெய்தது.
தர்மத்துள் அதர்மம் இருப்பதே
அந்த விஸ்வரூபம்.
சாங்கிய தத்துவத்தில்
நெய் பூசிய விஷ அம்புகள்
மனிதத்தின்
பச்சை ரத்தம் குடிக்க
பயிற்சி அளிக்கவே
லட்சக்கணக்காய் சுலோகங்கள்.
 பதினெட்டு நாட்கள் கோரயுத்தத்தில்
மனிதப்புல் கருகிப்போனது.
மீண்டும் மனிதம் முளைக்கவே இல்லை.
எல்லோரும் சொர்க்கத்துக்கு போனார்கள்.
அரசநீதிகள் விருந்துண்ண‌
மனிதநீதிகளின் இறைச்சிகள்
பரிமாறப்பட்டன.
ரம்பைகளும் ஊர்வசிகளும்
ஆடிப்பாடினர்.
வியாஸன்
முற்றும்
என்று எழுதிவிட்டு
எழுத்தாணியை முறித்துப்போட்டுவிட்டான்.

==========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக